பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயத்தின் ஏழு பொக்கிஷங்கள் என்னென்ன?

கோதிக் உயர் கோபுரம்

பட மூலாதாரம், AFP

பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கதீட்ரலில் ``பெரும் சேதங்கள்'' ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்புறம் உள்ள மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன.

ஆனால் 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள் என்ன?

ரோஸ் சாளரங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கதீட்ரலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோஸ் சாளரங்கள் மூன்று இருந்தன. மிகவும் புகழ்மிக்க அம்சங்களில் ஒன்றாக அவை இருந்தன.

மேற்குப் பகுதியில் இருந்த முதலாவதும், சிறியதுமான சாளரம் 1,225 வாக்கில் முடிக்கப்பட்டதாகும். கண்ணாடியை சுற்றி கற்கள் பதித்திருந்த வேலைப்பாட்டுக்காக அது சிறப்பு பெற்றிருந்தது.

தெற்கு ரோஸ் சாளரம் சுமார் 13 மீட்டர் (43 அடிகள்) விட்டம் கொண்டது. 84 பேனல்களைக் கொண்டது.

இருந்தபோதிலும், முந்தைய தீ விபத்துகளில் பாதிப்பு ஏற்பட்டதால், அதில் ஒரிஜினலான, பளபளப்பான கண்ணாடியின் தன்மை இல்லை.

ரோஸ் சாளரங்களுக்கு தீயினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கட்டடமே பாதிக்கப் பட்டிருப்பதால், இவற்றின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாக கதீட்ரலின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே பினோட் BFMTV-யிடம் கூறினார்.

இரட்டை கோபுரங்கள்

பட மூலாதாரம், AFP

நோட்ர - டாமுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோதிக் காலத்து இரட்டை கோபுரப் பகுதியில் சிறிது நேரம் நின்றிருப்பார்கள். கதீட்ரலின் மேற்குப் பகுதியில் கிரீடம் போல இந்தக் கோபுரங்கள் அமைந்துள்ளன.

மேற்கு முகப்புப் பகுதியில் 1200-ல் பணிகள் தொடங்கின. ஆனால் வடக்கில் உள்ள - முதலாவது கோபுரம் - 40 ஆண்டுகள் வரை முடிக்கப்படவில்லை.

அதன்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1250-ல், தெற்கு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு கோபுரங்களும் 68 மீட்டர் உயரம் கொண்டவை. 387 படிக்கட்டுகள் கொண்ட அந்தக் கோபுரத்தின் மீது ஏறினால் வானில் இருந்து பாரீஸ் நகரை பார்க்கும் காட்சிகள் கிடைக்கும்.

இரண்டு மணி கோபுரங்களும் அப்படியே உறுதியுடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மனித விலங்கு சிற்பம்

பட மூலாதாரம், Getty Images

பாரீஸ் நகரை காண்பதற்காக படிக்கட்டுகளில் ஏறிச் செல்பவர்கள் யாராக இருந்தாலும், கதீட்ரலின் மற்றொரு சிறப்பு அம்சமான - மனித விலங்கு சிற்பத்தை - கடந்து சென்று தான் ஆக வேண்டும்.

கற்பனையின் அடிப்படையிலான இந்த உருவம், ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகளின் அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

``Stryge'' சிற்பம் - எனப்படும் மிகப் புகழ்பெற்ற சிற்பம் - கட்டடத்தின் உச்சியில் அமர்ந்த நிலையில், தலையை கைகளில் தாங்கி, நகரை பார்த்தவாறு அமைக்கப் பட்டுள்ளது.

மணிகள்

காணொளிக் குறிப்பு,

Why Notre Dame is getting new bells

கதீட்ரலில் 10 மணிகள் உள்ளன - மிகப் பெரிய மணியின் பெயர், இம்மானுவேல் என்பதாகும். அது 23 டன்கள் எடை கொண்டது. தெற்கு கோபுரத்தில் 1685ல் அதை நிறுவியுள்ளனர்.

கதீட்ரலின் 850வது ஆண்டு விழா 2013ல் கொண்டாடப்பட்டது. அப்போது வடக்கு கோபுரத்தில் சிறிய மணிகள் அமைக்கப்பட்டன.

பிரெஞ்சு புரட்சியின் போது பீரங்கி குண்டுகளுக்காக உருக்கப்பட்ட ஒரிஜினல் மணிகளைப் போன்றதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மணிக்கும் ஒரு துறவியின் பெயர் சூட்டப்பட்டது.

1831ல் The Hunchback of Notre-Dame என்ற தனது பணிக்காக இந்த கதீட்ரலை மாதிரி அமைப்பாக எழுத்தாளர் விக்டர் ஹுகோ பயன்படுத்திக் கொண்டார்.

கோதிக் உயர் கோபுரம்

பட மூலாதாரம், AFP

நோட்ர - டாமின் புகழ்மிக்க உயர் கோபுரம் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரிந்துவிட்டது. இது 12வது நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கட்டடத்தின் வரலாற்றில் இந்தக் கோபுரம் பல மாறுதல்களை சந்தித்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது இடிக்கப்பட்டு 1860களில் மீண்டும் உருவாக்கப்பட்டதும் இதில் அடங்கும்.

``நோட்ர -டாம் கூரையும், கோபுரமும் சிதைந்து போயிருப்பது, அநேகமாக கல் தூணும் சிதைந்திருப்பது, பிரெஞ்சு கோதிக் கலைத் திறன் பாரம்பரியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்'' என்று பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் ராயல் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.

``பிரான்ஸ் மக்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நேசிப்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் கவலைகளுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்'' என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நினைவுச் சின்னங்கள்

பட மூலாதாரம், AFP

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்து அணிந்திருந்ததாகக் கருதப்படும் புனித முள் கிரீடம் மற்றும் சிலுவையின் ஒரு பகுதி, ஓர் ஆணி என கூறப்படும் நினைவுச் சின்னங்கள் நோட்ர -டாமில் இருந்தன. கிறிஸ்துவின் நினைவுச் சின்னங்களாக அவை இருந்தன.

முள் கிரீடத்தை பாரிஸுக்கு கொண்டு வந்தபோது மன்னர் ஒன்பதாம் லூயி அணிந்திருந்ததாகச் சொல்லப்படும் கிரீடம் மற்றும் மேலாடை போன்ற விலை மதிப்பற்ற கலைப் பொருட்களைக் காப்பாற்றுவதற்காக, தீயணைப்பு வீரர்களும், மற்றவர்களும் அணிவகுத்து நின்றார்கள் என்று பாரீஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Anne Hidalgo

ஆனால் கதீட்ரலின் உள்ளே சுவர்களில் உள்ள பெரிய ஓவியங்கள் மிகவும் கனமாக இருப்பதால் பத்திரமாக பாதுகாத்து கீழே கொண்டு வருவது கடினமாக இருந்ததாக என்று தீயணைப்பு வீரர்களை மேற்கோள் காட்டி பிபிசி ஐரோப்பிய செய்தியாளர் கெவின் கன்னோல்லி தெரிவித்துள்ளார்.

இசைக் கருவி

பட மூலாதாரம், Getty Images

இந்த கதீட்ரலில் மூன்று இசைக் கருவிகள் உள்ளன. 8,000 குழல்கள் கொண்ட கிரேட் ஆர்கன் கருவியும் அதில் ஒன்று. 1401-ல் முதலில் அமைக்கப்பட்டு, 18 மற்றும் 19வது நூற்றாண்டுகளில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது இது.

காலப் போக்கில் பல முறை புதுப்பித்தல் மற்றும் சேர்த்தல்கள் நடந்த போதிலும், மத்திய காலக்கட்டத்தில் முதலில் அமைக்கப்பட்ட சில குழல்களும் அதில் உள்ளன.

இந்த இசைக் கருவி பாதிப்பில்லாமல் அப்படியே உள்ளது என்று BFMTV பிரெஞ்ச் செய்திச் சேனலிடம் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே கூறியுள்ளார்.

தீ விபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலித்தபோது பிரார்த்தனைப் பாடல் இசைத்துக் கொண்டிருந்த ஜோஹன் வெக்ஸோ, ``இது உலகில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவி. பிரமிக்க வைக்கும் வகையில் பிரமாண்டமானது - இதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. ஒவ்வொரு முறையும் அது அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த அற்புதமான இடத்தில் அதில் இசைப்பது பெருமைக்குரிய விஷயம்'' என்று பி.பி.சி. ரேடியோ 4-ன் இன்றைய நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :