எகிப்து அதிபரை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம் மற்றும் பிற செய்திகள்

எகிப்து

பட மூலாதாரம், Reuters

எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடைகிறது.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்கிறது.

அதே சமயம் இந்த சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை முப்பது நாட்களுக்குள் நடத்த வேண்டும்.

இந்த சட்டத்திருத்தம் சீசீக்கு நீதித்துறையில் அதிக அதிகாரங்களையும், அரசியலில் ராணுவத்தின் தலையீட்டை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும்.

சீசீ, 2014ஆம் ஆண்டு முதன்முதலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின் கடந்த வருடம் 97% ஓட்டுக்களுடன் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த பொக்கிஷங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், AFP

பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கதீட்ரலில் ``பெரும் சேதங்கள்'' ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்புறம் உள்ள மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன.

ஆனால் 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள் என்ன?

வேலூர் தேர்தல் ரத்து பற்றி மு.க.ஸ்டாலின் கேள்வி

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

"வேலூர் தொகுதி தேர்தல் ரத்து - தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையக் கோட்பாடு பிரதமர் நரேந்திர மோதியின் காலில் மிதிபட்டு கிடக்கிறது - ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை நீங்களே உருவாக்கி விட வேண்டாம்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 135.41 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த சோதனையில் மட்டும் 2.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பிஎஸ்கே எஞ்சினீயரின் என்ற ஒரு நிறுவனத்தில் இருந்து மட்டும் 14.17 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

பணம் தவிர, 37.42 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், 37.8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள், 1022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டுள்ளன. சேலை, குக்கர் போன்ற பரிசுப் பொருட்களும் 8.15 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 4525 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசார சொதப்பல்கள்

பட மூலாதாரம், Getty Images

முதலில் திண்டுக்கல் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள், அதாவது பா.ம.கவின் மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இரண்டு கூட்டங்களில் பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பழைய நினைவுகளில், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிய நினைவுகளில், அதிமுக கூட்டணி பிரசார மேடைகளில் அமர்ந்து கொண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :