புதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட கொரியா மற்றும் பிற செய்திகள்

வட கொரியா

பட மூலாதாரம், Reuters

புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.

இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை ஆகும்.

ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், தமது விமான சேவைகள் முழுவதையும் நேற்று இரவுடன் (ஏப்ரல் 17) தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான சேவைகளை தொடர்ந்து நடத்துவதற்காக கேட்டிருந்த அவசர காலக் கடனுதவி கிடைக்காத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமான நிறுவனம் கேட்டிருந்த முக்கியமான, இடைக்கால கடனுதவியை செய்ய முடியாது என்று இந்தியக் கடனாளர்கள் அமைப்பின் சார்பில் சார்பில் இந்திய ஸ்டேட் வங்கி நேற்றிரவு தெரிவித்ததாகவும், இந்நிலையில், விமானங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள், முக்கிய சேவைகளுக்கு செலுத்தவேண்டிய பணம்கூட இல்லாததால், எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களையும் நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அந்நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது?

பட மூலாதாரம், Getty Images

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தேர்தல் ஆணையம் அவ்வப்போது வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும். என்பதால், உங்கள் பெயர் பட்டியலில் இருந்து தற்செயலாகக்கூட விடுபட்டிருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில், தேர்தல் ஆணையம் national voters service portal என்ற வலைதளத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது.

இந்த வலைதளத்தில் வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை நீங்களே சரிபார்க்கலாம்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு; போதிய பேருந்துகள் இல்லை, கோயம்பேட்டில் தடியடி

பட மூலாதாரம், FACEBOOK

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று இரவு 7 மணி முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகளவில் இருப்பதாகக்கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் செல்ல மறுத்ததால் போலீஸார் தடியடி நடத்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸை எளிதாக வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: காரணம் என்ன?

பட மூலாதாரம், PANKAJ NANGIA/INDIA TODAY GROUP/GETTY IMAGES

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிகெட் அணிகள் புதன்கிழமை மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றது.

முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து மொத்தம் 132 ரன்களை எடுத்திருந்தது.

இந்த போட்டியில் மகேந்திரசிங் தோனி விளையாடவில்லை. ரெய்னா கேப்டனாக இருந்தார். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி இரண்டாவதாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆடட்டக்காரர் வார்னர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு நம்பிக்கை அளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :