கனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி மற்றும் பிற செய்திகள்

மலையேறுபவர்கள்

பட மூலாதாரம், EYEWIRE

கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற மூன்று பேர், சரியான நேரத்தை கடைபிடிக்கவில்லை.

அவர்கள் ஏறிய பகுதிகளில் விமானம் மூலம் சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கி விடப்பட்டிருந்த சில மலையேறும் உபகரணங்கள் இருக்கும் ஆதாரங்களை பார்த்துள்ளனர்.

மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன.

நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக சொன்னாரா ராகுல் காந்தி? #BBCFactCheck

பட மூலாதாரம், YOUTUBE/RAHUL GANDHI

நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி பேசுவதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாக பரப்பப்பட்டு வரும் அந்த காணொளியில், "இங்குள்ள விவசாய நிலங்களில் உங்களால் சம்பாதிக்க முடியாது. நிலவை பாருங்கள், அங்கு நீங்கள் விவசாயம் செய்வதற்கான நிலத்தை அளிக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை பயிரிடுவீர்கள். நான் அங்கு இயந்திரம் ஒன்றை வைத்து, அதன் மூலம் உருளை கிழங்கை குஜராத்திற்கு கொண்டு வருவேன்" என்று பேசுவது போன்றுள்ளது.

24 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயம் செய்வதற்குரிய நிலம் நிலவில் கொடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட பிபிசி, அந்த காணொளியில் ராகுல் காந்தி பேசுவது திரிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தது.

தமிழ்நாடு தேர்தலில் இரவு 9 மணி வரை 70.90% வாக்குப்பதிவு

பட மூலாதாரம், PIB INDIA

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று (ஏப்ரல் 18) வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் நேற்று இரவு 9 மணிக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

முல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றி விசாரித்தவர்

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை எழுதப்பட்டது.

வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம் அதிபர் டிரம்ப் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு

பட மூலாதாரம், CHARLIE CROWHURST

இன்று இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் தனது அணியை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமீர் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் உலக கோப்பைக்கு முந்தைய இங்கிலாந்து தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்ஃபிராஸ் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ், ஜுனைத் கான், சோயிப் மாலிக் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹசன் அலி, ஃபகர் ஜமான், பாபர் அசாம், ஜமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :