முல்லர் அறிக்கை: அதிபர் டிரம்புக்கு ஜனநாயக கட்சி தொடர்ந்து அழுத்தம்

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது தொடர்பாக ரஷ்யாவின் பங்கு இருந்ததா என்பது குறித்து நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு ஓர் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஜனநாயக் கட்சியினர் அழுத்தம் தந்துவருகின்றனர்.
இந்த அறிக்கையை தொகுத்த ராபர்ட் முல்லர், இது குறித்து நாட்டின் நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் சாட்சியளிக்க வேண்டுமென ஜனநாயக கட்சியினர் கூறினர்.
டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் வியாழனன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதை தங்களுக்கான 'முழு வெற்றி' என்று டிரம்பின் சட்ட ஆலோசனை குழு கூறியுள்ளது.
வெள்ளை மாளிகை வழக்கறிஞரிடம் அதிபர் டிரம்ப், முல்லரை நீக்கச் சொன்னதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலையீட்டில் டிரமபிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் அவையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் அவைக்கு வந்து முல்லர் தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்
அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரக்குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்பு இருந்திருப்பதற்கான சாத்தியம் குறித்து இந்த அறிக்கையில் அலசப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
பட மூலாதாரம், MANDEL NGAN
டொனால்டு டிரம்ப்
இந்த நடவடிக்கையில் டிரம்பின் அணியை சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்தது.
டிரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.
தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தார். முன்னாள் ஆலோசகரான ஜார்ஜ் பாப்புடோபுலஸ் தனது ரஷ்ய போக்குவரத்து குறித்து எஃப் பி ஐ யிடம் பொய் கூறியதாக ஒப்புக் கொண்டார்.
இதுவரை டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் டிரம்பின் பதவியுடன் தொடர்புடைய நான்கிற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்