அமெரிக்காவில் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள் மற்றும் பிற செய்திகள்

பெற்றோர்

பல ஆண்டுகள் சித்ரவதை செய்தும், பட்டினி போட்டும் வளர்த்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ள நிலையில், அந்தக் கலிஃபோர்னியத் தம்பதியரின் குழந்தைகள் பெற்றோரை மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளர்.

பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும், தங்களின் தாயையும், தந்தையையும் இன்னும் நேசிப்பதாக டேவிட் மற்றும் லூயிசி டர்பின் ஆகியோரின் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

2018ம் ஆண்டு பெரிஸிலுள்ள அழுக்கடைந்த வீட்டில் இருந்து 17 வயதான மகள் ஒருவர் தப்பியபின், இந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், DAVID-LOUISE TURPIN/FACEBOOK

ஒன்பது ஆண்டுகளாக தங்களின் 13 குழந்தைகளில் ஒருவரை தவிர ஏனையவரை குறைந்தது மேசமாக நடத்தியதை இந்த தம்பதியர் ஒப்புக்கொண்டனர்.

25 ஆண்டுகளுக்கு பின்னர் பிணை வழங்கப்படாமல் இருந்தால், இந்த தம்பதியர் தங்களின் வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

வெள்ளிக்கிழமை விசாரணையில், தங்களின் நான்கு குழந்தைகளின் அளித்த வாக்குமூலங்களை கேட்டபோது, இந்த தம்பதியர் அழுதனர்.

பட மூலாதாரம், DAVID-LOUISE TURPIN/FACEBOOK

"நான் எனது அப்பா, அம்மாவை பெரிதும் நேசிக்கிறேன்" என்று ஒரு குழந்தை எழுதியதை அவரது சகோதரர் நீதிமன்றத்தில் வாசித்தார்.

"எங்களை வளர்த்த முறை சிறந்தத்தாக இல்லாவிட்டாலும், இன்று நான் இருக்கின்ற மனிதராக உருவாகுவதற்கு இந்த முறை காரணமானதால், மகிழ்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

அவரது மற்றொரு சகோதரர் தனது கொடுமையான அனுபவத்தால் பெரும் துன்பமடைந்ததாக தெரிவித்தார்.

"வளரும்போது நான் அனுபவித்ததை என்னால் விவரிக்க முடியவில்லை. அது கடந்த காலம். இப்போது நிகழ்காலம். நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் எனக்கு செய்ததை நான் மன்னித்துவிட்டேன்" என்று அவர் கூறினார்.

ஆனால், எல்லா குழந்தைகளும் இத்தகைய மனநிலையை பெற்றிருக்கவில்லை.

"எனது பெற்றோர் எனது வாழ்க்கை முழுவதையும் வாழவிடவில்லை. ஆனால், இப்போது எனது வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகிறேன்" என்று மகள் ஒருவர் கூறினார்.

பட மூலாதாரம், AFP

தங்களின் குழந்தைகளை நடத்திய விதத்திற்காக மன்னிப்பு கோரிய இந்த தம்பதியர் நீதிமன்றத்தில் அழுதுவிட்டனர்.

"வீட்டில் அடைத்து வைத்ததும், ஒழுக்கம் கற்பித்ததும் நல்ல நோக்கங்களையே கொண்டிருந்தன. எனது குழந்தைகளை காயப்படுத்த வேண்டுமென இதனை செய்யவில்லை. நான் எனது குழந்தைகளை நேசிக்கிறேன். எனது குழந்தைகளும் என்னை நேசிப்பதாக நம்புகிறேன்" என்று 57 வயதான தந்தை எழுதியதை, அவரது வழக்கறிஞர் வாசித்தார்.

நீதிமன்றத்தில் பேசியபோது, தனது குழந்தைகளுக்கு செய்த செயல்களுக்காக தான் மிகவும் வருந்துவதாக லூயிசி டர்பின் கூறினார்.

ஐந்தாவதும் பெண் குழந்தை - விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்

பட மூலாதாரம், COURTESY: FAMILY

காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது.

ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓர் ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது.

பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜின் சமூகம் குறித்து தவறாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வாஜுக்கு எதிராகவும் அவரது சாதிப் பெண்களை இழிவாகவும் பேசி சமூக வலை தளங்களில் வெளியான வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் கிராம மக்கள் ஊர்வலம் செல்லும் வழியில் சில கடைகளையும் உடைத்துள்ளனர், நள்ளிரவை தாண்டியும் முற்றுகை போராட்டம் தொடர்ந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் முலாயம், மாயாவதி

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA / BBC

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை உத்தரப்பிரதேச மாநில அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகிய இருவரும் இருபத்து நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மைன்பூர் தொகுதி வேட்பாளராக களம் இறங்கும் முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் மாயாவதி.

எனவே முலாயம் சிங் யாதவ், அவரின் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் ஒன்றாக ஒரே பிரசார மேடையில் தோன்றினர்.

பாஜகவில் சேர்ந்த பெண் சாமியாரின் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரக்யா தாக்கூர்

போபால் தொகுதியில் பாஜக சார்பாக சாமியார் பிரக்யா தாக்கூர் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், பிரக்யா குற்றஞ்சாட்டிருப்பது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய அவர், "தாம் எந்த தவறும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்து மதம் அமைதியை குறிக்கிறது என்று கூறிய பிரக்யா, முஸ்லிம்களை "நம் சொந்த மக்கள்" என அழைத்துள்ளார். 'இந்து பயங்கரவாதம்' என்ற கொள்கையை முற்றிலும் மறுத்துள்ள அவர், அது காங்கிரஸ் தலைவர்கள் உருவாக்கியது என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :