வியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

வியட்நாம் போர்

பட மூலாதாரம், Getty Images

வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான 'ஆரஞ்ச்' எனப்படும் ரசாயணத்தை அந்நாடு சேமித்து வைத்திருந்தது.

வியட்நாம் போர் முடிந்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இந்த பத்தாண்டு திட்டத்தை 183 மில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்கா தொடங்கியுள்ளது.

வியட்நாமில் ஹோ சி மின் நகரத்திற்கு வெளியே உள்ள பியன் ஹோ விமான நிலையத்தில் உள்ள விமானத்தளம், அந்நாட்டிலேயே மிக மோசமான, அதாவது நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட விமான நிலையமாகும்.

காடுகளை அழிக்கவும், அதனால் அங்கு மறைந்திருந்த எதிரிகளை கண்டுபிடிக்கவும், அமெரிக்கப்படைகள் இந்த 'ஆரஞ்ச்' ரசாயனத்தை தெளித்தனர்.

இதனால் 1,50,000 குழந்தைகள் கடுமையான பிறப்பு குறைபாடுகளோடு பிறந்ததோடு பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக வியட்நாம் கூறுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, 22 நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த செய்தி வெளியாகியவுடன் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா இதை உடனடியாக விசாரிக்கும்படி தலைமை நீதிபதியிடம் கோரினார்.

"இந்த புகார் முற்றிலும் பொய்யானது. புகார் தெரிவித்துள்ள நபர் டிசம்பர் மாதம் முறையான விசாரணைக்கு பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார். நீதித்துறைக்கு களங்கம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்புலத்தில் சிலர் உள்ளனர். ஆனால் அவர்கள் யார், எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை" என்று தன்மீது கூறப்பட்ட புகாருக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.

அபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில்

பட மூலாதாரம், FACEBOOK

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெரிய இந்து சமய கோயில் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரும், அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமுமான அபுதாபியையும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான துபாயுடன் இணைக்கும் சாலையருகே அபு முரேகா என்னுமிடத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது.

அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலை கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் மொஹம்மத் சயீத் நன்கொடையாக அளித்துள்ளார்

பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முன்னிறுத்தும் பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சாத்வி பிரக்யா

இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக பயங்கரவாதியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை தங்களது கட்சியின் வேட்பாளராக மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நிறுத்துகிறது பாரதிய ஜனதா கட்சி.

மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்கிற்கு எதிராக களமிறங்கும் பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யா இந்த தேர்தலை 'தர்ம யுத்தம்' என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசாங்கம், மதத்தை அடிப்படையாக கொண்டு மக்களை ஒன்று திரட்டும் இந்த செயல்பாடு குறித்து சங்கடப்படவில்லை. இந்திய அரசியலில் இது ஒரு முக்கியான நேரமாகும். ஏனெனில், தேசியவாதத்தை தங்களது கட்சியின் அடிப்படையாக கருதும் பாஜக, தற்போது அதன் பேரில் பயங்கரவாத செயலுடன் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்டவரை தங்களது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

கடந்த பாகிஸ்தான் தேர்தலின்போது பயங்கரவாதி ஹபிஸ் சயீது, போட்டியிட்டதை ஒட்டுமொத்த இந்தியாவின் ஒருமித்த குரலில் எதிர்த்து. அந்த தேர்தலில் சயீது உள்பட அவரது கூட்டாளிகள் அனைவரும் தோல்வியடைந்தனர்.

"இயல்பு நிலைக்கு திரும்பியது பொன்னமராவதி"

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவலான குரல்பதிவால் பதற்றங்கள் உண்டான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய குரல்பதிவு சமூக ஊடகங்களில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பதற்றங்கள் உண்டானது.

எனவே, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அங்கு "சட்ட ஒழுங்கு இயல்பாகவே உள்ளது. அங்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :