உக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் பிற செய்திகள்

வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி

உக்ரைன் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அரசியலுக்கு புதியவரான ஜெல்லன்ஸ்கி, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு வாக்குகளை பெற்றிருந்தார்.

41 வயதான ஜெல்லன்ஸ்கியிடம் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்வதாக அந்நாட்டின் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Brendan Hoffman

படக்குறிப்பு,

பெட்ரோ போரோஷென்கோ

இந்த முடிவுகள் பெட்ரோவுக்கு மட்டுமின்றி அவர் முன்னிறுத்திய திட்டங்களுக்கு கிடைத்த பேரிடியாக பார்க்கப்படுகிறது.

"நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்" என்று ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு பிறகு நடந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜெல்லன்ஸ்கி மக்களிடையே கூறினார்.

"நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் - 'எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது' என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உக்ரைனின் அதிபராக ஜெல்லன்ஸ்கி இருப்பார்.

உக்ரைனின் தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்த ஜெல்லன்ஸ்கி, திடீரென அந்நாட்டின் அதிபராவதை போன்ற காட்சிகள் இருந்தன. அது தற்போது உண்மையாகியுள்ளது.

உக்ரைனை பொறுத்தவரை பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் அந்நாட்டின் அதிபருக்கே அதிகாரம் உள்ளது.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கொழும்பில் 6 இடங்களிலும், நீர்க் கொழும்பு மற்றும் மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டு வெடிப்புகளில் இதுவரை 207 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கொழும்பில் உயிரிழந்தவர்களில் 27 பேர் வெளிநாட்டவர்கள். ஆனால், எந்தெந்த நாட்டினர் என்ற விவரங்களை அரசு வெளியிடவில்லை. ஊடகங்களையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

திருச்சியில் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரண்டு லட்சம் நிவாரணம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பு சாமி கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு புடிக்காசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துறையூர் அருகே முத்தையம் பாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் சித்திரா பௌர்ணமியில் இருந்து மூன்றாவது நாள் பிடிகாசு வழங்கும் திருவிழா நடைபெறும். அதாவது வருடம் முழுவதும் இக்கோவிலில் உண்டியலில் சேரும் சில்லறை காசுகளை பக்தர்களுக்கு இக்கோயிலில் உள்ள சாமியார் காணிக்கையாக வழங்குவார்.

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் - சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரஞ்சன் கோகாய்

இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கோகாய் தம்மை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார் என்று குற்றம்சாட்டியதால், அவசரமாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூடியது. அந்த அமர்வு ரஞ்சன் கோகாய் தலைமையிலானது.

இத்தகைய அமர்வு கூடுவது பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கான விதிமுறைகளுக்கு எதிரானது என்று பல பெண் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விசாரணையில் ஆஜரான இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பெயர் வெளியிடப்பட்டது குறித்து கவலை வெளியிட்டார்.

நீதிபதி ரஞ்சன் கோகாயின் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை சில ஊடகங்ககளும் செய்தியாக வெளியிட்டன.

அபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில் - முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Facebook

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெரிய இந்து சமய கோயில் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்த கோயில் பற்றிய சில முக்கியமான தகவல்களை காண்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரும், அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமுமான அபுதாபியையும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான துபாயுடன் இணைக்கும் சாலையருகே அபு முரேகா என்னுமிடத்தில் இந்த கோயில் கட்டப்படுகிறது.

அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த கோயிலின் வாகன நிறுத்துமிடமும் அதே பரப்பளவில் இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :