கோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன் மற்றும் பிற செய்திகள்

அறிவியல்

பட மூலாதாரம், Science Photo Library

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர்.

முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்த சமயத்தில், அவர் பயணம் செய்த கார் பேருந்து ஒன்றின் மீது மோதியதால் அவர் மூளையில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டன.

முனிராவுக்கு அப்போது 32 வயது, அவரின் மகன் உமருக்கு நான்கு வயது.

விபத்து நடந்த சமயத்தில், முனிராவின் கணவரின் தம்பி அந்த காரை ஓட்டியுள்ளார். முனிராவும் அவரது மகனும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

தனது மகனை முனிரா அரவணைத்து கொண்டதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

முனிராவுக்கு 27 வருடங்கள் கழித்து கடந்த வருடம் மருத்துவமனையில் நினைவு வந்துள்ளது.

செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில் அந்த விபத்து குறித்தும், தனது தாயின் சிகிச்சை குறித்தும் இந்த செய்தியினை பகிர்ந்துள்ளார் உமர்.

"ஒருநாள் நிச்சயமாக அவர் கண் விழிப்பார் என்று நான் நம்பினேன். எனது நம்பிக்கையை நான் இழக்கவில்லை," என்று உமர் தெரிவித்துள்ளார்.

"உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் உங்களின் நம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தெரிவிக்கவே இப்போது நான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்." என்று மேலும் தெரிவிக்கிறார் ஒமர்.

"எனது தாயும் நானும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தோம் பேருந்து எங்கள் மீது மோத வரும் அந்த நிமிடத்தில் என் தாய் என்னை அரவணைத்து கொண்டார்." என்று அந்த நிமிடங்களை நினைவு கூறுகிறார் உமர்.

முஸ்லிம் மக்களை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் - சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்த பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்கள், தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் கிடையாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ராகுலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - ராஜ் தாக்ரே

பட மூலாதாரம், Getty Images

பிரதமராக ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மகராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே கூறி உள்ளார்.

பிபிசி இந்தி சேவைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தாக்ரே, "ஏன் ராகுல் பிரதமராக கூடாது? நாம் மோதியை வைத்து ஒரு முயற்சி செய்து பார்த்தோம். அதில் தோற்றுவிட்டோம். ஏன் ராகுல் காந்தியை வைத்து மற்றொரு முயற்சி செய்து பார்க்கக் கூடாது?" என கேட்டுள்ளார்.

மஹராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகப் போகிறது. 2014ஆம் ஆண்டு வரை அந்தக் கட்சி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே தழுவி வந்திருக்கிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை என்றாலும், மஹாராஷ்ட்ரா முழுவதும் பல்வேறு பொது கூட்டங்களில் ராஜ் தாக்ரே கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்து வருகிறார்.

குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர். இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் இந்து மதக் கும்பல் ஒன்றால் தன்னுடைய குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டதை கண்ணால் கண்டவர்.

15 ஆண்டுகாலம் நீதி கிடைக்க அவர் நடத்தி வந்த போராட்டத்திற்கு கடந்த வாரம் தான் பலன் கிடைத்திருக்கிறது. பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளாக 11 பேருக்கு ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

விசாரணை நீதிமன்ற விசாரணையில் முன்னதாக விடுவிக்கப்பட்டிருந்த 5 போலீஸார் மற்றும் 2 மருத்துவர்களும் சாட்சியங்களை அழித்துவிட்ட வகையில் இந்த நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியுள்ளது.

"இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது" என்று டெல்லியில் பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த பில்கிஸ் பானுவுக்கு அமைதிக்கான நம்பிக்கையை இது வழங்கியிருக்கிறது.

"கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் இன்றும் வாழ்கிறார்"

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY/AFP/GETTY

காலை 11.30 மணிக்கு பரிபடா பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தி ``மயூர்பானி தொழுநோய் இல்லத்துக்கு எப்படி செல்ல வேண்டும்'' என்று நாங்கள் கேட்டோம்.

கைவண்டி உரிமையாளர் ஒருவர், ``முன்னே சாலைகள் சந்திக்கும் இடத்தில் இடதுபுறம் திரும்பி அரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அங்கே சாஹிப்களின் மையத்தை அடைவீர்கள்'' என்று கூறினார்.

``சகோதரரே, நாங்கள் தொழுநோய் இல்லத்துக்குச் செல்ல வேண்டும், வேறு எந்த மையத்துக்கும் அல்ல'' என்று கூறினேன். இப்போது அவர் கொஞ்சம் கோபமாக பதில் அளித்தார். ``சாஹிப்களின் மையம் அங்கே தான் இருக்கிறது என்று நான் கூறினேன்'' என்று அவர் சொன்னார்.

மறுபடியும் அவரிடம் கேள்வி கேட்கும் தைரியம் எனக்கு இல்லை. அங்கு நாங்கள் சென்றபோது, பெரிய நுழைவாயில் இருந்தது. அங்கே ``1902ல் கட்டப்பட்டது, மகாராணி லட்சுமி தேவிக்கு இந்தக் கட்டடம் அர்ப்பணிக்கப் பட்டது'' என்று எழுதப் பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :