ரஷ்ய அதிபர் புதின் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை: ரயிலில் ஒரு பயணம்

கிம்

பட மூலாதாரம், Reuters

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகாக ரஷ்யா சென்றுள்ளார்.

கிம் தனது தனியார் ரயிலில் பயணம் செய்வதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷிய அதிபருடனான கிம்மின் முதல் சந்திப்பு இதுவாகும்.

பசிபிக் கடற்கரை நகரான விலாடிஓஸ்டாக்கில் வியாழனன்று சந்தித்து, கொரிய தீபகற்பத்தின் அணுஆயுத பிரச்சனை குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கிம் புதினின் உதவியை நாடுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், வியாட்நாமின் ஹனாயில், வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஆலோசிக்க அதிபர் கிம் மற்றும் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் இரண்டாவது பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் முடிவடைந்தது.

வட கொரிய அரசு ஊடகங்கள், இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் விலாடிஓஸ்டாக்கில் ரஷ்யா மற்றும் வட கொரிய நாட்டு கொடிகள் பறக்கின்றன.

விலாடிஓஸ்டாக்கில் உள்ள ரயில் நிலையத்துக்கு வெளியே, கிம்மை வரவேற்பதற்காக ரஷ்ய சிப்பாய்கள் அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வட கொரியா

ரஷ்யாவின் எல்லை நகரான கசானில் கிம் தனது ரயிலில் வந்து இறங்கியதாக கூறப்படுகிறது.

ரஷ்ய பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அவரை வரவேற்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த பிறகு தாங்கள் வலுவான கூட்டணியை வைத்துள்ளதை காட்டுவதற்கு வட கொரியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்கிறார் பிபிசியின் லாரா பிக்கர்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்க செயலர் மைக் பாம்பேயோவை குற்றம்சாட்டியது வட கொரியா.

பாம்பேயோ "முட்டாள்தனமாக" பேசுவதாக கூறிய வட கொரியா, அவரை அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தியது.

மேலும் "கவனமாக செயல்படக்கூடிய" வேறொருவரை நியமிக்கவும் வலியுறுத்தியது.

வட கொரியா

பட மூலாதாரம், AFP/Getty images

அதேபோல் வட கொரியாவின் பொருளாதார எதிர்காலம் அமெரிக்காவை மட்டுமே நம்பியில்லை என்பதை நிரூபிக்கவும் வட கொரியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தடைகளை தளர்த்த ரஷ்யாவுக்கு கிம் அழுத்தம் கொடுக்கக் கூடும்.

அதேபோல் கொரிய தீபகற்பத்தில் தங்களின் பங்கும் முக்கியமானது என்பதை ரஷ்யா காட்டுவதற்கு ரஷ்யாவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதின் ஆர்வம் காட்டினார். ஆனால் அதிபர் டிரம்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் அது ஓரங்கட்டப்பட்டது.

வடகொரியா அணு ஆயுதம் கொண்ட நாடாக இருப்பதை அமெரிக்கா மற்றும் சீனாவை போன்று ரஷ்யாவும் விரும்பவில்லை.

கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் குறைய வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா இதற்கு முன்பு வட கொரியாவின் அணுஆயுத திட்டங்களை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

முன்னாள் வட கொரிய தலைவர் மற்றும் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல், அப்போதைய ரஷய அதிபர் டிமிட்ரி மெட்வ்யேடெஃபுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :