ராட்சத மாமிச கிரைண்டருக்குள் விழுந்து உயிரிழந்த பெண் மற்றும் பிற செய்திகள்

ஜில் கிரெனிங்கர்
படக்குறிப்பு,

ஜில் கிரெனிங்கர்

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் மாமிசம் அரைக்கும் ஒரு பெரும் கிரைண்டருக்குள் விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

சக்கரங்கள் வைக்கப்பட்ட படியில் நின்று கொண்டிருந்தபோது, கிரைண்டருக்குள் இழுக்கப்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 35 வயதான அப்பெண்ணின் பெயர் ஜில் கிரெனிங்கர்.

இயந்திரத்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்க, சக ஊழியர் ஒருவர் கவனித்த போதுதான், ஜில் விழுந்தது பற்றி தெரியவந்தது.

அவர் விழுந்த கிரைண்டர், சுமார் ஆறு அடி உயரமானது.

இலங்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ''ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்''

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Atul Loke

''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான அமெரிக்க தடை விலக்குக்கு முடிவு

இந்தியாவுக்கு ஏற்படும் விளைவு என்ன?

பட மூலாதாரம், AFP

இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்திய அரசு ஆய்வு செய்து வருகிறது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஈரானிடம் இருந்து இறக்குமதியை படிப்படியாகக் குறைப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்று இந்தியா நம்புவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை

ரஷ்ய அதிபர் புதின் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை: ரயிலில் ஒரு பயணம்

ரயிலில் ஒரு பயணம்

பட மூலாதாரம், Reuters

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகாக ரஷ்யா சென்றுள்ளார்.

கிம் தனது தனியார் ரயிலில் பயணம் செய்வதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷிய அதிபருடனான கிம்மின் முதல் சந்திப்பு இதுவாகும்.

பசிபிக் கடற்கரை நகரான விலாடிஓஸ்டாக்கில் வியாழனன்று சந்தித்து, கொரிய தீபகற்பத்தின் அணுஆயுத பிரச்சனை குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கிம் புதினின் உதவியை நாடுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை

டிக்டாக் செயலி மீதான தடை நீக்கம்

டிக்டாக்

பட மூலாதாரம், Getty Images

டிக் டாக் செயலியை பயன்படுத்தவும், அந்த செயலியின் காணொளிகளை ஊடகங்கள் பயன்படுத்தவும் இருந்த தடையை இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது என டிக்டாக் செயலி நிறுவனத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆபாசமான காணொளி, குழந்தைகள் மற்றும் பெண்களை அவமதிக்கும் விதமான காணொளிகள் போன்றவை சமூக சீர்கேட்டுக்கு வித்திடுகிறது என்ற புகாருடன் வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த மாதம் வழக்கு தொடுத்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தரம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின்போது, ஆபாசமான காணொளிகளை, மோசமான காணொளிகள் பரவாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை விதித்து உயர்நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது என டிக்டாக் செயலிக்காக வாதாடிய வழக்கறிஞர் ஐசாக் மோகன்லால் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

இலங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :