விளாடிமிர் புதின் - கிம் ஜாங்-உன் உச்சி மாநாடு: வடகொரியாவுக்கு சர்வதேச உத்தரவாதங்கள் தேவை - புதின்

கிம் மற்றும் புதின்

அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புதின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்க அணுகுமுறையை விமர்சித்துள்ள புதின், “அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது” என புதின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புதினுடன் நடைபெற்ற உச்சிமாநாட்டை மிகவும் அர்த்தமுள்ளதொரு சந்திப்பு கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார்.

பிப்ரவரியில் அதிபர் டிரம்புடன் நடைபெற்ற உச்சிமாநாடு தோல்வி அடைந்த நிலையில் புதின் - கிம் இடையே இந்த உச்சிமாநாடு நடந்துள்ளது.

வடகொரியாவுக்கு வேறு வலிமையான கூட்டாளிகள் இருக்கிறார்கள் என கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு நினைவுபடுத்த விரும்புவதாக நம்புவதாக கூறுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விலாடிவோஸ்டாக்கில் கிம்-டிரம்ப்

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான சில நடவடிக்கைகளுக்கு பதிலாக வடகொரியா மீதான எல்லாவித தடைகளையும் நீக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டதால் டிரம்ப்-கிம் இடையேயான இரண்டாவது உச்சிமாநாடு தோல்வியில் முடிந்தது.

இதனை அமெரிக்காவால் ஏற்க முடியவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்,

வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத ஒழிப்பு நிகழ வேண்டுமென விரும்புவதாக புதின் தெரிவித்திருக்கிறார்,

சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்தால்தான் இதனை சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புதன்கிழமை ரஷ்யா சென்றடைந்தபோது, ரஷ்ய அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள் தெரிவித்தார்,

முன்னதாக, ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான விலாடிவோஸ்டாக் அருகே, ரஸ்கி தீவில் இந்த இரு தலைவர்களும் இன்று (வியாழக்கிழமை) கை குலுக்கினர்.

இந்த சந்திப்பில் ரஷ்ய - வட கொரிய உறவை மேம்படுத்த உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரு தலைவர்களும் அணு ஆயுத ஒழிப்பு குறித்துப் பேசுவார்கள் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க - வட கொரியப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், ரஷ்யாவிடம் கிம் ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிம் - புதின்.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த டிரம்ப் - கிம் உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது. வட கொரிய அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக எந்த முடிவையும் அந்த அந்த மாநாட்டில் எட்ட முடியவில்லை.

விலாடிவோஸ்டாக் சந்திப்பின்போது தொடக்கத்தில் பேசிய இரு தலைவர்களும் ரஷ்யா - வட கொரியா இடையில் நிலவும் உறவின் நீண்ட வரலாற்றைக் குறிப்பிட்டுப் பேசினர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவுவதாக புதின் உறுதியளித்தார்.

"கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதையும், தற்போது நடந்துகொண்டிருக்கும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு ஆதரவாக ரஷ்யா என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு உங்களது இன்றைய ரஷ்யப் பயணம் உதவும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று கிம்மிடம் கூறினார் புதின்.

"ஏற்கெனவே நீண்ட நட்பும் வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியானதாக, ஆழமானதாக மாற்றும் ஒரு பயனுள்ள சந்திப்பாக இது இருக்கும்" என்று நம்புவதாக கிம் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு,

வட கொரிய - ரஷ்ய எல்லையும் - விலாடிவோஸ்டாக் நகரமும்.

பித்தளை இசைக்கருவிகளை இசைத்து கிம்முக்கு இனிய வரவேற்பை அளித்தது ரஷ்யா. வரவேற்ற ரஷ்ய அதிகாரிகளிடம் தமது இதமான வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டார் வடகொரியத் தலைவர்.

விலாடிவோஸ்டாக் உச்சிமாநாடு பற்றி...

தற்போது நின்றுபோன ஆறு நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைதான் கொரிய தீபகற்பத்தில் உள்ள அணு ஆயுதப் பிரச்சனையை கையாள்வதற்கு பயனுள்ள வழி என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பேச்சுவார்த்தை நடக்கும் அழகிய ரஸ்கி தீவு

2003-ல் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை வட கொரியா, தென் கொரியா, சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கியது. இதைத் தவிர, பயனுள்ள சர்வதேசப் பொறியமைவு ஏதும் இப்போதைக்கு இல்லை என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் பெஸ்கோவ்.

அமெரிக்க - வட கொரியப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், தமக்கும் வலிமையான கூட்டாளிகள் உண்டு என்று காட்டவேண்டிய தேவை வட கொரியாவுக்கும், கொரிய தீபகற்பத்தில் தமக்கும் செல்வாக்கு உண்டு என்று காட்டும் தேவை ரஷ்யாவுக்கும் இருந்தது என்ற கருத்து நிலவுகிறது.

ரஷ்யா - வட கொரியா: கடந்த கால உறவு

பனிப் போர் காலத்தில் ரஷ்யாவை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் கூட்டமைப்பான, சோவியத் ஒன்றியத்துக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இறுக்கமான ராணுவ, வணிக உறவுகள் இருந்தன. கருத்தியல் வழியிலும், தந்திரோபாய காரணங்களாலும் இந்த நெருக்கமான உறவு பேணப்பட்டது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

இந்த கவச ரயில் வண்டியில்தான் ரஷ்யாவுக்கு பயணம் செய்தார் கிம்.

1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறிய பிறகு, முதலாளித்துவ நாடாக உருவெடுத்த ரஷ்யாவுடன் வட கொரியாவின் வணிக உறவுகள் சுருங்கிப் போயின.

வட கொரியா சீனாவின் பக்கம் சாய்ந்து அதனை தமது முக்கிய கூட்டாளியாக ஆக்கிக்கொண்டது. புதின் தலைமையின் கீழ் பொருளாதார ரீதியில் ரஷ்யா மீண்டெழுந்தது. அதன் பிறகு, 2014-ல் சோவியத் காலத்தில் வட கொரியா வாங்கிய கடன் முழுவதையும் நல்லெண்ண நடவடிக்கையாக ரஷ்யா தள்ளுபடி செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :