இந்தோனீசியா தலைநகரத்தை மாற்றுகிறது - மூழ்கும் ஜகார்த்தாவுக்கு மாற்று

அதிவேகமாக மூழ்கிவரும் உலக நகரங்களில் ஒன்று ஜகார்த்தா. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிவேகமாக மூழ்கிவரும் உலக நகரங்களில் ஒன்று ஜகார்த்தா.

இந்தோனீசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ராஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்று. அத்துடன், இந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் சந்திக்கிறது. அமைச்சர்கள் குறித்த நேரத்தில், குறித்த நிகழ்வுக்கு செல்லவேண்டும் என்றால், போலீசார் கடுமையாக போராடி போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது.

அத்துடன் இந்த நாடு டச்சு காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற 1945 முதலே தலைநகரை மாற்றுவது குறித்த பேச்சும் இருந்தே வருகிறது.

10 லட்சம் மக்கள் வசிக்கும் ஜகார்த்தாவில் இருந்து தலைநகர் மாற்றப்படும் என்று அமைச்சர் அறிவித்தாலும், புதிய தலைநகரம் எங்கே அமையும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

ஆனால், புதிய தலைநகரம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்படும் இடங்களின் பட்டியலில் போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பலங்க்கராயா முதலிடத்தில் இருப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மூழ்கும் நகரம்

வடக்கு ஜகார்த்தா கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூழ்கிவருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 13 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிற கடற்கரை நகரமான ஜகார்த்தாவின் பெரும் பகுதிகள் 2050ம் ஆண்டில் கடலில் மூழ்கியிருக்கும் என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜகார்த்தாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் கடல் மட்டத்துக்கு கீழே உள்ளன. நிலத்தடி நீரை மிதமிஞ்சி உறிஞ்சி குடிநீராகவும், குளிப்பதற்கான நீராகவும் பயன்படுத்துவதே இதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்