பருவநிலை மாற்றம்: ஏழை நாடுகள் மேலும் வறுமையில், வளர்ந்த நாடுகள் வளர்ச்சி பாதையில்

பருவநிலை மாற்றம் படத்தின் காப்புரிமை Getty Images

உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்துகிற பாதிப்பும் உள்ளதை ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக பருவநிலை மாற்றத்தால் நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலை அதிகரித்து, ஏழை நாடுகளில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளிப்பட்டும், சில பணக்கார நாடுகளின் வளமை மேம்பட்டும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புவி வெப்பமடையும் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால், ஏழை மற்றும் பணக்கார நாடுகளுக்கு இடையில் இருந்திருக்க வேண்டிய ஏற்றதாழ்வை விட இப்போது 25% அதிக ஏற்றதாழ்வு ஏற்பட்டுள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்ப மண்டலத்திலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன. மோரிட்டேனியா, நீஜெர் நாடுகளில் தனிநபர் ஜி.டி.பி., வெப்ப நிலை பாதிப்பு இல்லாத சூழ்நிலையைவிட 40% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள - இந்தியாவில் - புவி வெப்பமடைதல் காரணமாக 2010ல் தனிநபர் ஜி.டி.பி. 31% குறைவாக இருந்தது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் ஒன்பதாவது பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் இது 25% அளவு பாதிப்பாக உள்ளது.

மறுபுறம், தேசிய அறிவியல் கழக செயல்பாடுகள் குறித்த இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின்படி, பல பணக்கார நாடுகளின் தனிநபர் ஜி.டி.பி. வளர்ச்சிக்கு புவி வெப்பமடைதல் பங்களிப்பு செய்திருப்பதாகத் தெரிகிறது. உலகில் அதிக அளவுக்கு பசுமைக்குடில் வாயுக்களை உற்பத்தி செய்யும் பெரிய நாடுகளும் இதில் அடங்கும்.

வெப்பமடைய செய்வதற்கு அபராதம்

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் முறைமைத் துறையைச் சேர்ந்த மார்ஷல் புர்கே இந்த ஆய்வில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

வெப்ப நிலை மாறுபாட்டுக்கும், பொருளாதார நிலைமைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து 1961 முதல் 2010 ஆம் ஆண்டு வரை 165 நாடுகளில் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் பருவநிலை மாறுதல் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்க 20க்கும் மேற்பட்ட பருவநிலை மாதிரிகளை தனது ஆய்வில் அவர் பயன்படுத்தியுள்ளார்.

வெப்பநிலை உயராமல் இருந்திருந்தால் அவற்றின் ஆண்டு வளர்ச்சி விகிதம் என்னவாக இருந்திருக்கும் என்பதற்கு 20,000 வடிவமைப்புகள் கணக்கிடப்பட்டன.

சராசரியை விட குளிர்ச்சியான நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அதிகரித்தது என்பதையும், வெப்பமான நாடுகளில் வளர்ச்சி குறைந்தது என்பதையும் இதன் மூலம் புர்கே நிரூபித்துக் காட்டினார்.

``வெப்ப நிலை மிக அதிகமாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இல்லாத சூழ்நிலைகளில் பயிர்கள் அதிக விளைச்சல் தருகின்றன, மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், வேலையில் அதிக உற்பத்தித் திறன் கிடைக்கிறது என்பதை வரலாற்றுபூர்வமான புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்பம் அதிகரிப்பு காரணமாக, குளிர்ச்சியான நாடுகளில் ``வெப்பமாதலின் ஆதாயங்கள்'' கிடைத்துள்ளன என்றும், வெப்ப நாடுகளில் அதிகபட்ச வெப்ப நிலை இன்னும் அதிகமாவதால் ``வெப்பமாதலின் அபராதத்தை'' சந்தித்துள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

முன்னோடி ஆராய்ச்சியாளர் நோவா டிபென்பாக் பி.பி.சி.யிடம் கருத்து தெரிவிக்கையில், ``ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாடுகளை உருவாக்கும் அம்சங்களில் வெப்பநிலையின் பாதிப்புகள் ஏற்படும் பல விஷயங்கள் உள்ளன'' என்று கூறினார்.

``அதேபோல அதிக வெப்பநிலையில், தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைகிறது. அறிவுத்திறன் செயல்பாடும் குறைகிறது. வெப்பம் அதிகமாகும்போது தனிப்பட்ட முறையில் முரண்பாடுகளும் அதிகரிக்கின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

பணக்கார மற்றும் ஏழை நிலைகள்

குளிர்ந்த மற்றும் வெப்பமான நாடுகள் பெற்ற ஆதாயங்கள் குறித்து சில நிச்சயமற்ற நிலைகள் உள்ள நிலையில், வெப்பமான நாடுகளில் காலப்போக்கில் ஏற்பட்ட தாக்கம் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

``இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்கள், பல ஆண்டுகளாக கண்டறியப்பட்ட விஷயங்களுடன் ஒத்துப்போவதாக இருக்கின்றன. பருவநிலை மாற்றம் பாதிப்புக்களை பன்மடங்காக்குகிறது என்பதிலும், தற்போதைய பாதிப்புகளை மேலும் மோசமாக்குகிறது என்பதிலும் ஒருமித்த கருத்து இருக்கிறது'' என்று கிரீன்பீஸ் ஆப்பிரிக்கா அமைப்பின் மூத்த அரசியல் ஆலோசகர் ஹேப்பி காம்புலே பிபிசியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters

``அதாவது ஏழை நாடுகளும், மிகுந்த பாதிப்புக்கு உள்ளான நாடுகளும் பருவநிலை மாற்றத்தால் முதலில் பாதிக்கப்படும் வரிசையில் உள்ளன. வளரும் நாடுகள் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை சமாளிக்க தங்களுடைய வளர்ச்சிக்கான செலவில் இதையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

கென்னத் புயலின் தாக்குதலுக்குப் பிறகு, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் மொசாம்பிக் அரசுக்கு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது என்று திரு. காம்புலே கூறினார். அந்தப் புயல் ஏப்ரல் 25 ஆம் தேதி கரையைக் கடந்தபோது 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

மார்ச் மாதத்தில் மொசாம்பிக், மலாவி, ஜிம்பாப்வே நாடுகளில் இடாய் புயல் பாதிப்பால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ழிவிலிருந்து உலகை காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி

அதி நவீன கட்டமைப்புகளால் பயன் பெற்று வரும் தென்னாப்பிரிக்காவிலும் கூட, 2018ல் “ஜீரே டே” என்கிற தண்ணீர் நெருக்கடியின் (தண்ணீர் கிடைக்காத நிலை) போதும், குவாஜுலு நடால் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று என்று திரு. காம்புலே கூறுகிறார்.

``பருவநிலை மாற்றத்துக்கான காரணங்களில் ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவு. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஆயத்தமாக இவை இல்லை என்பதால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன'' என்று அவர் கூறினார்.

சமமற்ற நிலை

1961 முதல் 2010 வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தனிநபர் கரியமில வாயு உற்பத்தி 10 டன்களுக்கும் குறைவாக (9 டன்கள்) உள்ள 18 நாடுகளும், புவி வெப்பத்தால் எதிர்மறை பாதிப்பை சந்தித்துள்ளன.

வெப்ப நிலை உயராமல் இருந்தால் இருந்திருக்க வேண்டிய தனிநபர் ஜி.டி.பி. வளர்ச்சியைவிட, இப்போது சராசரியாக 27% குறைந்துள்ளது.

இதற்கு மாறாக தனிநபர் கரியமில வாயு உற்பத்தி 300 டன்களுக்கும் அதிகமாக உள்ள 19 நாடுகளின் பட்டியலில், தனிநபர் ஜி.டி.பி. சராசரி பங்களிப்பு 13% என்ற அளவில் ஆதாயம் அடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

``எரிசக்தி பயன்பாட்டின் முழு ஆதாயங்களை ஏழை நாடுகள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது மட்டுமில்லை. பணக்கார நாடுகளின் எரிசக்தி பயன்பாடு காரணமாக இந்த நாடுகள் ஏற்கெனவே ஏழ்மை நிலையை (ஒப்பீட்டளவில்) அடைந்துவிட்டன'' என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் பற்றி விமர்சனங்கள் எழாமல் இல்லை.

ஏழையான, வெப்பமான நாடுகளில் புவிவெப்பத்தின் தாக்கம் குறித்த தகவல் ``பெரும்பாலும் நிச்சயமாக சரியாக'' இருக்கிறது என்றாலும், அதன் எதிர்மறை தாக்கங்கள் பணக்கார நாடுகளிலும் ஏற்பட்டுள்ளன என்று, கடந்த காலத்தில் இரண்டு ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து பமியாற்றியுள்ள யு.சி. பெர்க்லே- பொதுக் கொள்கைத் துறை பேராசிரியர் சாலமன் ஹிசியாங் கூறியுள்ளார்.

``இந்த பகுப்பாய்வு முறைகளின்படி, பணக்கார நாடுகளில் பாதிப்புகள் தாமதமாக வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே முதலாவது ஆண்டைக் கடந்து தாக்கங்களை பார்த்தால், வெப்பமான, ஏழை நாடுகளைப் போலவே குளிர்ச்சியான, பணக்கார நாடுகளிலும் பாதிப்புகள் வெளிப்படுவதை அறியலாம்'' என்று அவர் சொல்கிறார்.

உலகின் மூன்று பெரிய பொருளாதார நாடுகளான - அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட மத்திய அட்சரேகை பகுதி நாடுகளில் எப்படி வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

``நீண்டகால நோக்கில், பருவநிலை மாற்றத்தால் யாருக்கும் பயன் கிடைக்காது. தடுப்பு நடவடிக்கை ஏதும் இல்லாமல் இது தொடருமானால், பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை நாம் விரைவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று திரு. காம்புலே கூறியுள்ளார்.

``உலகில் அதிக அளவில் கரியமில வாயு உற்பத்தி செய்யும் நாடுகள் அவசர அடிப்படையில் அதைக் குறைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.'' என்கிறார் அவர்.

``கொள்கைகளை உருவாக்குபவர்கள் , பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பாக இப்போதுள்ளதைவிட மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதைபடிவ எரிபொருளில் இருந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி மாற வேண்டிய அவசரம் இருப்பதை அறிந்து அதற்கான முயற்சிகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்று அவர் வலியுறுத்துகிறார்.

பருவநிலை மாற்றம்: முடிவுக்கு வருமா சாக்லேட் உற்பத்தி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பருவநிலை மாற்றம்: முடிவுக்கு வருகிறதா சாக்கலேட்டின் உற்பத்தி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்