வடகொரியாவில் இருந்து உடல் எச்சங்கள் மீட்கும் பணியை நிறுத்தியது அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

வட கொரியா - அமெரிக்கா உறவில் மீண்டும் சிக்கல் படத்தின் காப்புரிமை Reuters

கொரிய போரில் இறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வடகொரியாவில் இருந்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

1950 - 1953 கொரிய போரில் கொல்லப்பட்ட 50 அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை வடகொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.

இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங்- உன் இடையேயான உறவு மேம்பட்டு வருவதை காட்டும் அறிகுறியாக இருந்தது.

இந்நிலையில் பென்டகனில் இருந்து புதன்கிழமை வந்த செய்தியில், சமீபத்தில் இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த உச்சிமாநாடு தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியாவிடம் இருந்து அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை பெறும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரிய போரின்போது கிட்டத்தட்ட 36 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் 7700 பேருக்கும் அதிகமானோர் கணக்கில் வரவில்லை என அமெரிக்கா கூறுகிறது. இதில் 5300 பேர் வடகொரியாவின் காணாமல் போயுள்ளார்கள்.

வியட்நாம் உச்சமாநாடு தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அதன் பின்னர் வடகொரியா அதிகாரிகள் தங்களது நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளவில்லை என போரில் காணாமல் போன அமெரிக்கர்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்க அரசின் டிபிஏஏவின் செய்தி தொடர்பாளர் சக் பிரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.

'' இறந்த அமெரிக்கர்களின் எச்சங்களை பெறுவது தொடர்பாக 2019-ம் ஆண்டுக்கான கூட்டு மீட்பு நடவடிக்கைகளில் நாங்கள் கொரிய மக்கள் ராணுவத்தினை தொடர்பு கொண்டதில் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் வாயிலாக இந்த மீட்பு முயற்சிகள் தற்காலிகமாக கைவிடப்படுகிறது'' என டிபிஏஏ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

''இரு தரப்பும் சேர்த்து நன்றாக திட்டமிட்டு, ஒருங்கிணைந்து, கள செயல்பாடுகளை மேற்கொள்வது இனி சாத்தியமில்லை என்ற புள்ளியை நாங்கள் அடைந்துவிட்டோம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2. தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

தமிழ்நாட்டின் 13 வாக்குச்சாவடிகளில் மே 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு மே மாதம் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தர்மபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் ஒரு வாக்குச்சாவடியிலும், கடலூரில் ஒரு வாக்குச்சாவடியிலும், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், ஈரோட்டில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று இரவு தேனி மாவட்டத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டதால், முறைகேடு நடந்திருக்கலாம் என அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன. ஆனால், இது வழக்கமான நடைமுறைதான் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

விரிவாக படிக்க - தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

3. நீரவ் மோதி ஜாமீன் மனு - லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி

நீரவ் மோதி ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திய வழக்கறிஞர்கள் இந்த ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர்.

ஜாமீன் கிடைத்தால் நீரவ் மோதி சாட்சியங்களை கலைப்பார் என்றும் இந்திய வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

2 மில்லியன் பவுண்டுகள் ஜாமீன் தொகை செலுத்தவும், வீட்டு காவலில் இருக்கவும் நீரவ் மோதி தயாராக இருப்பதாக மோதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், "பிரிட்டனைவிட பாதுகாப்பான இடம் தமக்கு இல்லை என நீரவ் மோதி கருதுகிறார்" என்றார் அவரது வழக்கறிஞர்.

ஆனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

விரிவாக படிக்க - நீரவ் மோதி ஜாமீன் மனு: லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி

4. இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வட - கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பகுதி இது

இலங்கை முழுவதும் சுமார் 9.6 சதவீதமாக வாழும் இஸ்லாமியர்கள், கிழக்குப் பகுதியில் செறிந்து வாழ்கிறார்கள். அந்நாட்டில் இஸ்லாமியர்கள், தமிழர்களுக்கு (12.5%) அடுத்தபடியாக இரண்டாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். பல இனங்கள் வாழும் எந்த ஒரு நாட்டிலும் நிகழ்வதைப் போலவே, இஸ்லாமியர்களும் தங்கள் சக இனத்தவர்களுடன் இணைந்தும் முரண்பட்டும் வாழ்ந்துவருகின்றனர்.

இங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பொதுவாக வர்த்தகத்தில் மட்டும் சிறந்து விளங்குவதாகவே பொதுவான கருத்து இருந்தாலும் விவசாயத்திலும் மீன்பிடிப்பிலும்கூட பெருந்தொகையான இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விரிவாக படிக்க - இலங்கை இனப்போர்: இஸ்லாமியர்கள் யார் பக்கம்?

5. மம்தா பானர்ஜி: 'வறுமை நிலையில் இருந்து முதல்வர் ஆனவர்'

நரேந்திர மோதியை எதிர்த்து தீவிர அரசியல் செய்பவர் என்ற அடிப்படையில் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் . இந்த தேர்தலில் மம்தா ஒரு கிங் மேக்கராக ஆகலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

மம்தா தான் இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சராகவும் மேற்கு வங்காளத்தில் முதன் பெண் முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

மம்தா பானர்ஜி குறித்த சுவாரசியமான 10 தகவல்களை இங்கே படிக்கலாம் - மம்தா பானர்ஜி குறித்த 10 தகவல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :