டிரம்பின் இரான் மீதான அமெரிக்கத் தடை - காரணமும் பின்னணியும்

ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நிறுத்திவைக்கும் தமது முடிவுக்கு ஒப்பந்தத்திலேயே இடம் உள்ளதாக கூறுகிறது. படத்தின் காப்புரிமை AFP
Image caption ஒப்பந்தத்துக்குள்ளேயே இதுபோன்ற நடவடிக்கைக்கு இடம் இருப்பதாக கூறுகிறது இரான்.

2015-ம் ஆண்டின் பன்னாட்டு அணு ஒப்பந்தத்தின் சில ஷரத்துகளை நிறைவேற்றுவதை நிறுத்திவைப்பதாக அறிவித்தது இரான்.

ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கடமையை நிறுத்திவைப்பதாக இதன் மூலம் தெரிவித்துள்ளது இரான்.

இதற்கு பதிலடியாக இரான் நாட்டின் உலோகத் தொழிலை குறிவைத்து தடை விதித்துள்ளது அமெரிக்கா.

இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப், இரான் தலைவர்களை சந்தித்துப் பேசி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

எண்ணெய்க்கு அடுத்தபடியாக இரானின் இரண்டாவது முக்கிய ஏற்றுமதிப் பொருள் உலோகங்களே ஆகும்.

ஆறு வல்லரசுகளுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட 2015-ம் ஆண்டின் அணு ஒப்பந்தம், இரான் தமது அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதற்கு பிரதிபலனாக, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளில் இருந்து விலக்கு அளிப்பதற்காக எட்டப்பட்டதாகும்.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா தன்னிச்சையாக விலகிக்கொண்டது. ஆனால், மற்ற ஐந்து நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் நீடிப்பதாக அறிவித்தன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மைக் பாம்பேயோவின் முன்னறிவிப்பில்லாத இராக் பயணம்.

ஒப்பந்த ஷரத்துகளை செயல்படுத்தும் கடமையை நிறுத்திவைத்து, அதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனிய விற்பனையை நிறுத்திவைப்பதாக இரான் அறிவித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஒப்பந்தத்தை கைவிடவேண்டாம் என்று இரானை எச்சரித்தன.

இரானின் செயலை 'வரவேற்கத் தகாத' நடவடிக்கை என்று அவை வருணித்தன. மேலும் ஒப்பந்தத்தின்படி தமது கடைமையை இரான் நிறைவேற்றினால்தான் தங்களால் அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி ஓராண்டாகும் நிலையில் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

இரான் உலோகங்களை துறைமுகங்களில் அனுமதிக்காதே! பிற நாடுகளுக்கு எச்சரிக்கை

புதிய தடைகளை விதித்த பிறகு அது பற்றி குறிப்பிட்ட டிரம்ப், "தொழில்துறை உலோகங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இரானுக்கு கிடைக்கும் வருவாயை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரான் நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இது 10 சதவீதத்தை அளித்து வருகிற துறை. இந்த தடையின் மூலம், தங்கள் நாட்டின் துறைமுகங்களில் இரான் நாட்டு உலோகங்களை அனுமதிப்பதை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று பிற நாடுகளுக்கு அறிவிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பேசத் தயாராக உள்ளேன் - டிரம்ப்.

தங்கள் நடத்தையை அடிப்படையில் இரான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்நாடு மேலும் புதிய நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார் டிரம்ப்.

உலகம் முழுவதும் இரான் நாட்டு எண்ணெயை விற்பதற்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.

"இரான் தலைவர்கள் உடனான சந்தித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதை எதிர்நோக்கியுள்ளேன். அதன் மூலம் இரான் பெறுவதற்குரிய அதன் எதிர்காலத்தை தருவதற்கு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்கப் படையினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றை இரான் நாட்டை நோக்கி அனுப்பியது அமெரிக்கா. அத்துடன் முன்னறிவிப்பின்றி இராக் சென்றார் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ.

இரான் செயலுக்கு காரணம் என்ன?

2015 அணு ஒப்பந்தத்தில் 'செயல்பாட்டுக்கான விரிவான கூட்டுத் திட்டம்' என்று அறியப்படும் இரண்டு பாகங்களை செயல்படுத்துவதை இரான் நிறுத்திவைத்துள்ளது. இந்த பிரிவின்படி தம்மிடம் உள்ள மிகையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் தாமே வைத்துக்கொள்ளாமல் விற்பனை செய்யவேண்டும். இதைக் கொண்டு அதனை வாங்கும் நாடுகள் அணுகுண்டு தயாரிக்க முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரானின் புஷ்ஷெஹர் அணுமின் நிலையத்தின் செயற்கைக் கோள் படம்.

தற்போது இரான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் கன நீர் விற்பனையை நிறுத்திவைக்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தரப்பார் தங்களது எண்ணெய் மற்றும் நிதி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதோடு, அமெரிக்கத் தடைகளை எதிர்த்தால் 60 நாள்களுக்குப் பிறகு யுரேனியம் விற்பனை மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது இரான். ஆனால், தாம் தொடர்ந்து ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளது இரான்.

அமெரிக்கா விதிக்கும் தடைகளை ஒப்பந்தத்தில் உள்ள பிற நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியவற்றை எதிர்க்கச் செய்வதற்கான இரானின் முயற்சி இது என்று தெரிகிறது.

தொடர்ந்த அமெரிக்கத் தடையால் இரான் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பண மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இரானின் ஆண்டு பண வீக்க விகிதம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

சீனாவும், ரஷ்யாவும் சொல்வதென்ன?

இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளை இரான் பின்பற்றவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று அறிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், அது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் நீடித்திருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் ஐரோப்பிய நாடுகள் எடுப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி தம் நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்று குறிப்பிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், அப்படிச் செய்வதில் தங்களுக்கு உள்ள இயலாமையை மறைத்து கவனத்தை திசை திருப்ப ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மேற்கத்திய நாடுகள் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

இரானுக்கு எதிரான ஒரு தலைப்பட்சமான அமெரிக்கத் தடைகளை உறுதியாக எதிர்ப்பதாகக் கூறியுள்ள சீனா, உறுதிப்பட்ட பேச்சுவார்த்தை தேவை என்று வலியுறுத்தியுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :