பாகிஸ்தானிலுள்ள நட்சத்திர விடுதியில் தாக்குதல் - குறைந்தது ஒருவர் உயிரிழப்பு மற்றும் பிற செய்திகள்

பாகிஸ்தானிலுள்ள நட்சத்திர விடுதியில் தாக்குதல் - குறைந்தது ஒருவர் உயிரிழப்பு படத்தின் காப்புரிமை AFP

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மூன்று துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு மிக்க திட்டத்தின் மைய பகுதியாக திகழும் க்வாடர் துறைமுக நகரத்திலுள்ள சாவேர் பேர்ல்-கான்டினென்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியுள்ளது.

ரமலான் மாதம் அனுசரிக்கப்பட்டது வருவதால் விடுதியில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லையென்றும், குறைந்தளவிலான விடுதி பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனர்கள் மற்றும் மற்ற முதலீட்டாளர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக பிரிவினைவாத அமைப்பான 'பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி' தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறிக்கொள்ளும் ட்விட்டர் கணக்கு ஒன்றின் சமீபத்திய பதிவில், 'சீனா மற்றும் பாகிஸ்தான் மீது மேலதிக தாக்குதலை எதிர்பாருங்கள்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு பலனேதுமில்லை என்று அங்குள்ள ஆயுதத்தாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சஹ்ரான் ஹாசிமின் மரணத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை

Image caption சஹ்ரான் ஹாசிம்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் கடந்த 26ம் தேதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில், சஹ்ரானின் உறவினர்கள் உள்ளடங்கலாக பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த பலர் இறந்த நிலையில், அங்கிருந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை படையினர் காப்பாற்றி சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விரிவாக படிக்க: சஹ்ரான் ஹாசிமின் மரணத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை

நரேந்திர மோதி தன்னை அழகுப்படுத்த மாதம் '80 லட்சம் ரூபாய் செலவிட்டது' உண்மையா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஒப்பனை கலைஞர்கள் அழகுப்படுத்துவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காணொளி குறித்த விவரிப்பில், "தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்களில், பிரதமர் நரேந்திர மோதியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே செய்தியோடு குருகிராம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: தன்னை அழகுப்படுத்த நரேந்திர மோதி மாதம் '80 லட்சம் ரூபாய் செலவிட்டது' உண்மையா?

காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப்படம்)

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வத்தளை - ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

விரிவாக படிக்க: இலங்கையில் காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு

ஆடுகளை மாணவர்களாக்கி பள்ளியை மூட விடாமல் தடுத்த விவசாயி

படத்தின் காப்புரிமை Getty Images

பிரான்சிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, அதை மூடுவதற்கு திட்டமிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவசாயி ஒருவர் தனது 15 ஆடுகளை அப்பள்ளியில் சேர்த்துள்ளார்.

க்ரேனோபில் நகரத்துக்கு வடகிழக்கே கிரெட்ஸ்-என்-பெல்டோன் என்னும் கிராமத்திலுள்ள ஜூல்ஸ் பெர்ரி எனும் தொடக்கப் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 266யிலிருந்து 261ஆக வீழ்ச்சிடைந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த பள்ளியை மூடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரான மைக்கேல் கிரெர்ட், அந்நடவடிக்கையை தடுக்கும் வகையில் தனது செம்மறியாடுகளை பள்ளியில் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்ட விரும்பினார்.

விரிவாக படிக்க: ஆடுகளை மாணவர்களாக்கி பள்ளியை மூட விடாமல் தடுத்த விவசாயி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்