வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்

வாட்சாப் படத்தின் காப்புரிமை Getty Images

வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, 'திறன்பெற்ற ஹேக்கர்' இதை மேற்கொண்டதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வாட்சாப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வாட்சாப் நிறுவனம் வெளியிட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாட்சாப் செயலியின் புதிய பதிப்பை உடனடியாக நிறுவுறுமாறு தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ்.

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்தே, இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

சிலாபம், குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

விரிவாக படிக்க:இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

நரேந்திர மோதி 1987-88ல் டிஜிடல் படம் எடுத்து இமெயில் அனுப்பினாரா?

படத்தின் காப்புரிமை Twitter
Image caption நரேந்திர மோதி

"1987-88ல் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தி அத்வானியை புகைப்படம் எடுத்தேன். அப்போது ஒரு சிலரிடம் மட்டுமே இ-மெயில் வசதி இருந்தது. நான் எடுத்த புகைப்படத்தை இ-மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அடுத்த நாளே அப்புகைப்படம் வெளியானதை பார்த்து வியந்துவிட்டார் அத்வானி" என்று இந்தி மொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மோதியின் இந்த கூற்று அடங்கிய 40 வினாடி நீளமுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

80களிலேயே தன்னிடம் டிஜிட்டல் கேமரா இருந்ததாக பிரதமர் மோதி அதில் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க:1987-88ல் நரேந்திர மோதி எடுத்த டிஜிடல் படம், அனுப்பிய இமெயில்: கேலி செய்யும் சமூக ஊடகம்

மு.க. ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு: நோக்கம் என்ன?

Image caption சந்திரசேகர ராவ் - மு.க. ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

மு.க. ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் சந்திரசேகர ராவ் வந்தார். அவரை தி.மு.கவின் பொருளாளர் துரைமுருகனும் கட்சியின் முதன்மைச் செயலர் டி.ஆர். பாலுவும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பிறகு அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பிற்குப் பிறகு சந்திரசேகரராவோ, ஸ்டாலினோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதற்குப் பிறகு தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:மு.க. ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு: நோக்கம் என்ன?

'இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு இந்து'

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES
Image caption கமல் ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்காக பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.

அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்விகேட்க வந்திருக்கிறேன் நான் இன்று. இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன்" என்று பேசினார்.

விரிவாக படிக்க:இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து: கமல்ஹாசன் கருத்து, பா.ஜ.க. கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்