தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு - பென்டகன் ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்

தலிபான் படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது அமைந்துவிட கூடாது என்பதற்காக இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

"இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கூட்டங்களுக்கு தேவையான பணத்தை அளிப்பதற்கு அனுமதி கோரினோம்," என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் நோக்கில், அக்டோபர் 2018 முதல் இதுவரை, கத்தார் தலைநகர் தோகாவில் தாலிபன்களுடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

திரிணாமுல் - பாஜக இடையேயான மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி ஒன்றை நடத்தியது. அது எதற்காகத் தெரியுமா? ஒரு நாள் முன்னதாக அமித் ஷாவின் சாலை பேரணியில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது.

பேரணி தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே நான் பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டேன். அங்கு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.

அங்கு நான் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் வன்முறை தொடர்பான தனது கருத்துகளை அவர் வெளியிட்டார்.

"அனைத்துக் கட்சிகளும் வன்முறை அரசியல் செய்கின்றன. பாஜக பாதிக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் வங்காள கலாசாரத்தை காப்பாற்றுவதாகவும், இடதுசாரிகள் தீவிரவாத வன்முறையை கண்டிப்பதாகவும் சொல்லி ஆதாயம் தேடிக்கொள்ள விரும்புகின்றன," என்கிறார் அவர்.

விரிவாக படிக்க:திரிணாமுல் - பாஜக இடையேயான மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்

'மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது'

இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விரிவாக படிக்க:‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’

பிரக்யா சிங் தாக்கூர்: நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்

படத்தின் காப்புரிமை Getty Images

மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரக்யா சிங் தாக்கூரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது,

விரிவாக படிக்க:கோட்சே ஒரு தேச பக்தர்: பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர்

சூலூர் இடைத்தேர்தல் - வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

சூலூர் சட்டமன்ற தொகுதி மே 19ம் தேதி இடைத்தேர்தலை சந்திக்கின்றது. 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதி இது.

சூலூர், மோப்பிரிபாளையம், சாமளாபுரம், பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி பேரூராட்சிகள், பல்லடம் தாலுகாவின் சில பகுதிகள், காங்கேயம்பாளையம், சென்சஸ் டவுன் ஆகிய பகுதிகள் இந்த தொகுதிக்கு உட்பட்டவையாக உள்ளன. இங்கு 2 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பகுதிகளின் பிரதான தொழில்கள் நெசவும் விவசாயமும்.

விசைத்தறிகள் அதிகம் உள்ள பகுதிகளான இங்கு நெசவுத்தொழில் நலிவடைந்து வருவதால் நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். நெசவுத் தொழிலார்களுக்கு தகுந்த கூலி கிடைக்காததால் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வேறு வேலைகளை தேடி செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

விரிவாக படிக்க:சூலூர் இடைத்தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்