சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க முன்னாள் அதிகாரி - 20 ஆண்டுகள் சிறை

Ex-CIA agent jailed for spying for China படத்தின் காப்புரிமை ALEXANDRIA SHERIFF'S OFFICE

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடந்த இரண்டு வார கால விசாரணையில் 62 வயதாகும் கெவின் மல்லோரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 25,000 அமெரிக்க டாலர்கள் பெற்றுக்கொண்டு அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை அவர் சீனாவுக்கு விற்றதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கெவின் மல்லோரிக்கு சீனாவில் பேசப்படும் மாண்டரின் மொழி நன்றாகப் பேசத் தெரியும்.

அவர் பணியில் இருந்த காலத்தில், சி.ஐ.ஏ-வின் ரகசிய ஆவணங்களை அணுகுவதற்கான அனுமதி அவருக்கு இருந்தது.

அஞ்சலகம் ஒன்றில் ரகசிய ஆவணங்களை அவர் ஸ்கேன் செய்தது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்தக் காணொளியும் நீதிமன்றத்தில் ஆதாரமாக அளிக்கப்பட்டது.

2017 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீனா சென்று சீன உளவாளி ஒருவரை கெவின் சந்தித்ததாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு காவல் இருக்கும் சீன காவல் துறையினர்.

"கெவின் மல்லோரி நாட்டை மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரையே பணயம் வைப்பவர்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளார்," என்று அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் சச்சாரி டெர்விலிகர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் சி.ஐ.ஏ முன்னாள் அதிகாரி ஜெர்ரி சன் சிங் என்பவரும் சீனாவுக்கு உளவு பார்த்த குற்றத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எட்டு லட்சம் டாலர் பணத்துக்காக அமெரிக்காவின் ரகசியத் தகவல்களை ரான் ராக்வெல் ஹான்சன் எனும் முன்னாள் உளவு அதிகாரி சீனாவுக்குக் கொடுத்தார் என்று சென்ற ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நீதித் துறை தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்