அர்னால்டை பாய்ந்து வந்து எட்டி உதைத்த நபர் - வைரலாகும் காணொளி மற்றும் பிற செய்திகள்

அர்னால்டு படத்தின் காப்புரிமை Getty Images

தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 'அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா' எனும் வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 71 வயதாகும் ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டை எதிர்பாராத சமயத்தில் அவரது முதுகுபுற பகுதியை ஒருவர் பாய்ந்து வந்து எட்டி உதைக்கிறார்.

மேலதிக அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், தாக்குதல் நடத்திய நபரை அர்னால்டின் பாதுகாவலர்கள் அங்கிருந்து உடனடியாக குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தை வெளிக்காட்டும் காணொளியை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட அர்னால்டு, தனக்கு நேர்ந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், அதே சமயத்தில் 'கவலைப்படும்படியாக எவ்வித பிரச்சனையும் இல்லை' என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அர்னால்டை பாய்ந்து வந்து எட்டி உதைத்த நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோதி காவி இமயமலை குகையில் தியானம்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக்கோயிலில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோதி நேற்று (சனிக்கிழமை) காவி உடை உடுத்தி அங்கு சென்றுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு செய்தபின் இரண்டு கிலோ மீட்டர் தூரம், பனிமலைப் பாதையில் நடந்து, தியானம் செய்யும் குகையை அவர் சென்றடைந்தார்.

மோதி தியானத்தை முடிக்கும் வரை ஊடகத்தினருக்கு அப்பகுதியில் அனுமதி கிடையாது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

இன்று காலை வரை அவர் அங்கு தியானம் செய்வார். தற்போதைய உத்தராகண்ட் பயணத்தின்போது மோதி பத்ரிநாத் கோயிலுக்கும் செல்லவுள்ளார்.

விரிவாக படிக்க:நரேந்திர மோதி காவி உடை உடுத்தி இமயமலை குகையில் தியானம்

ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்

படத்தின் காப்புரிமை UMESHWARAN

இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலை புலிகள் தரப்புக்குமிடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவற்று இன்றுடன் (மே 18) பத்தாண்டுகளாகிறது.

பத்தாண்டுகளில் நீதி நிலைநாட்டப்படவில்லை; இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் சம நீதி வழங்கப்படவில்லை; சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்பது போன்ற பல்வேறு குரல்கள் இன்னமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால், ஓரடி முன்னோக்கி வைத்தால், இரண்டடி பின்னோக்கி தள்ளிவிட்ட வாழ்க்கையில் மனம் தளராமல் எதிர் நீச்சலடித்து, இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் புகழ்மிக்க மருத்துவராக உயர்ந்திருக்கிறார் உமேஸ்வரன் அருணகிரிநாதன்.

விரிவாக படிக்க:இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவரான தமிழரின் கதை

இந்தியாவின் பொருளாதார சரிவை எதிர்நோக்கவிருக்கும் அடுத்த அரசாங்கம்

படத்தின் காப்புரிமை Getty Images

2019 ஆண்டு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மட்டுமே எஞ்சி இருக்கிறது. யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்று மே 23ஆம் தேதி தெரியவரும். இந்நிலையில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், ஒரு சரிவை சந்திக்கும் என்று தெரிகிறிது.

அதற்கான அறிகுறிகள் எங்கும் உள்ளன. 18 மாதங்களில் கடந்த டிசம்பருக்கு பிந்தைய மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. கார்கள் மற்றும் SUVக்களின் விற்பனை, ட்ராக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் குறைந்துள்ளன.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின்படி, 334 நிறுவனங்களின் (வங்கிகள் மற்றும் நிதிநிலைகளை தவிர்த்து) நிகர லாபம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விரிவாக படிக்க:இந்தியாவின் பொருளாதார சரிவை எதிர்நோக்கவிருக்கும் அடுத்த அரசாங்கம்

இலங்கை போர் முடிந்த பத்தாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு

இலங்கை போர் முடிந்த பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நேற்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதலில் உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் 10.32 மணிக்கு இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் தாயை பறிகொடுத்த நிலையில் தனது ஒரு கையினையும் இழந்த சிறுமி ஒருவர் பிரதான ஈகை சுடரினை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.

விரிவாக படிக்க:போர் முடிந்து 10 ஆண்டுகள்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட தமிழர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்