ஏடிஎச்டி எனும் கவனக்குறைபாடு உள்ளவர் வாழ்வைக் காட்டும் இணையதள காமிக்ஸ்

  • த்ருதி ஷா
  • பிபிசி
'இணையதள காமிக்ஸ்'

ADHD (கவனிப்பு குறைவால் தீவிர செயல்பாடு கோளாறு) உள்ளவராக தன்னுடைய வாழ்வு எப்படி இருக்கிறது என்று உடனிருப்பவர்களுக்குக் காட்டுவதற்கு டானி டோனோவான் விரும்பியபோது, தன்னுடைய வரைபடங்கள் பிரபலமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு ரசிகர்களைக் கொண்ட இணையதள காமிக்ஸ் தொடர்களாக மாறும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் ஓமாஹாவில் தற்போது வாழும் 28 வயதான டானி டோனோவான் பத்தாண்டுகளுக்கு முன்பு ADHD-யால் பாதிக்கப்பட்டவர் என கண்டறியப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இருக்கும் சவால்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள உதவக் கூடியதாக தன்னுடைய காமிக்ஸ்கள் இருக்கும் என்று இப்போது அவர் நம்புகிறார்.

``காட்சித் தரவு துறையில் புதிய பணியை நான் தொடங்கி இருக்கிறேன். ADHD பற்றி பேசுவதற்கு அப்போது எனக்கு சாத்தியமானது, அது எப்படி இருக்கும் என்பது பற்றி என்னுடன் உள்ளவர்களிடம் நான் பேசுகிறேன்'' என்று பி.பி.சி. செய்தியாளரிடம் அவர் கூறினார்.

``நாங்கள் கதைகள் சொல்லிக் கொண்டு, நான் எப்படி உணர்கிறேன் என்று ஜோக் அடித்துக் கொண்டிருப்போம். நான் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அந்தப் போக்கில் இருந்து விலகி, தூக்கத்தில் இருக்கும் ரயில் ஓட்டுநர் எனது ரயிலை ஓட்டுவதைப் போல இருப்பதாகக் கூறுவேன். ஒரு புளோ சார்ட் (flow chart) குறித்த யோசனை எனக்குத் தோன்றியது. அதை ட்விட்டரில் பதிவிட்டேன். உடனே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது'' என்று அவர் தெரிவித்தார்.

ADHD அல்லாத கதைகள் சொல்வதைக் கேட்கும்போது அவருடைய வரைபடம் தொடக்கம் முதல் இறுதி வரை நேர்க்கோடாக இருப்பதைக் காட்டுகிறது. அவருடைய கதை சொல்லும் பாணி, தொடக்கத்துக்கு முன்னதாக முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது. பிறகு `நிறைய விவரங்களுடன்' சுற்றி வந்து, கிளைக் கதை சேர்ந்து, கதையின் இறுதிக்கு வருவதற்குள் சிந்தனை ரயில் ஓட்டத்தை இழந்துவிடுகிறார்- பிறகு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.

இருந்தபோதிலும், இன்டர்நெட்டில் வரும் அனைத்து விஷயங்களையும் போலவே - அது பதிவேற்றம் ஆனதும், மீம்ஸ்கள் மற்றும் திருத்தங்கள் வரும் என்பதில் கவனமாக இருங்கள்.

டானியின் வரைபடங்களை முகம் காட்டிக் கொள்ளாத ஒருவர் மாற்றி அமைத்தார். செயல்பாட்டு வரைபடங்களைப் பிரித்து ``சாதாரண நபர் ஒருவர் எப்படி கதை சொல்கிறார்' என்று ஒரு மீம் தயாரித்தார். ``ADHD அல்லாதவர் கதை சொல்வது'' என்ற தலைப்பை இப்படி மாற்றினார். `ADHD கதை சொல்லுதல்' என்ற தலைப்பை மாற்றி `நான் எப்படி கதை சொல்கிறேன்' என்று மாற்றி டானி தனது முதலாவது செயல்பாட்டு வரைபடத்தை அளித்தார். வரையறை இல்லாமல், விருப்பம் போல சொல்லும் வகையில் அந்த செயல்பாட்டு வரைபடம் இருந்தது.

இந்த அனுபவம் வரவேற்பைப் பெற்று, வைரலாகிவிட்டது. ``நான் தாக்கப்பட்டதைப் போல உணர்கிறேன்'' என்று நடிகையும் எழுத்தாளருமான மின்டி காலிங் ஒரு மீம் பதிவு செய்தார்.

ADHD அம்சத்துடன் கூடிய தனது கதை சொல்லி வெர்சன் சமூக தளத்தில் பரவியபோது, அதன் வாட்டர் மார்க் நீக்கப்பட்டு, எழுத்துருக்கள் மாற்றப்பட்டது குறித்து தாம் சற்று மனம் உடைந்து போனதாக டானி கூறியுள்ளார்.

``கிராபிக் டிசைனராக நீங்கள் இருக்கும்போது அது மனதை கொஞ்சம் காயப்படுத்துகிறது - குறைந்தபட்சம் நல்ல எழுத்துருக்களைப் பயன்படுத்துங்கள்.''

``ADHD மக்களின் உணர்வுகளை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நான் விரும்பியதால், நிறைய பேருக்கு வேண்டுகோள் விடுக்கும் முயற்சியாக எனது படங்களுக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்க நான் விரும்பவில்லை.''

அந்தப் படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், அதனால் நிறைய படங்களை சேர்க்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

``இது என்னுடைய அனுபவம். ADHD என்னை இப்படிதான் பாதித்தது. பெரும்பாலானவர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால், ADHD இல்லாதவர்களிடம் இருந்து கருத்துகளைக் கேட்பது நன்றாக இருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினை உள்ளவர்களையும் அல்லது பிரச்சினை உள்ளதாகக் கண்டறியப் பட்டவர்களை நேசிப்பவர்களையும் படங்களையும் தொடர்பு படுத்த வேண்டும்.

``வாவ், நன்றாகப் புரிந்து கொள்ள எனக்கு இது உதவியாக உள்ளது'' என்றோ அல்லது ``வாவ், எங்களுக்குள் பொதுவாக இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை'' என்றோ அப்போது அவர்கள் கூறுகிறார்கள்.

``இந்தத் தொடர்களில் குறிப்பிட்டுள்ள அனுபவங்களை முழுமையாக அறிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒவ்வொருவருடனும் இதைத் தொடர்புபடுத்திப் பார்த்து, சிகிச்சையாளரை நாடுவதாகத் தெரிவித்தனர். அவர்களில் சிலருக்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், படங்கள் எல்லாம் நோயறியும் அடையாளங்கள் அல்ல என்றும், அப்படியே அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் டானி வலியுறுத்துகிறார்.

``அப்படியானால் எனக்கு ADHD இருக்கிறதா என்று என்னிடம் யாராவது கேட்டால், `இல்லை' நிச்சயமாக இல்லை என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும். ஆனால், இதை நீங்கள் முழுமையாகப் படித்திருந்து ஒவ்வொரு விஷயமும் சரி என்று தோன்றினால் அல்லது உங்களுக்கு வெவ்வேறு பல அனுபவங்கள் ஏற்பட்டதாலும் புரிந்து கொள்ளப்படாத காரணத்தாலும் அழுதாலோ, நீங்கள் ஒரு டாக்டர் அல்லது யாரையாவது நாட வேண்டும் என்று கூறுவேன்'' என்று கூறுகிறார்.

``வெளிப்படையாக இதுபற்றி கலந்துரையாடல்கள் செய்வது, குறிப்பாக பணியிடத்தில் செய்வது, சிரமப்படும் மக்களுக்கான பெரிய விஷயமாக உள்ளது. அந்த விஷயத்தில் உதவியாக இருக்க நான் விரும்புகிறேன். தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொள்ள என்னுடைய கிராபிக்ஸ்கள் உதவியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தன்னுடைய படத்தை வெளிக்காட்டிக் கொள்வது மிகப் பெரிய அச்சத்தைத் தருகிறது என்றும் அவர் கூறுகிறார்:

``பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அதிக விமர்சனங்கள் வரும். `எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் தெரியுமா - உன்னுடைய ADHD பற்றி குறை சொல்லாதே' என்றோ அல்லது `எல்லோரும் சிறிதளவு ADHD தான், நீ சோம்பேறி அல்லது சாக்குபோக்கு சொல்கிறாய்' என்றோ சொல்லிவிடுவார்களோ என்ற கவலை இருக்கிறது என்கிறார் அவர். இந்தப் பிரச்சினை கண்டறியப் பட்டவர்கள் ஏற்கெனவே இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

``ஆனால் எனக்கு நல்ல வகையான கருத்தூட்டங்கள் நிறைய வருகின்றன. கலந்துரையாடலில் பலர் ஈடுபாடு காட்டுகிறார்கள், நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள், இது பணியின் ஒரு பகுதி - ஒரு கிராபிக்ஸ் முழு கதையையும் சொல்லிவிடாது'' என்றும் டானி சொல்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :