நாஜிக்களே பார்த்து அஞ்சிய அசாதாரணமான பெண் உளவாளி

இரண்டாம் உலகப்போரில் செய்த பணிகளுக்காக மதிப்புக்குரிய சேவை சிலுவை விருது 1945ம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் குடிமகளாக வெர்ஜினியா ஹால் மாறினார். படத்தின் காப்புரிமை CIA

நாஜி அதிகாரிகளுக்கு மிக நெருக்கத்திலேயே, போர் ரகசியங்களைத் திருடுதல், தொடர்புடைய உளவு தொடர்புகளின் செயல்பாடுகளை கவனித்தல், இரண்டாவது உலகப் போரின் போது தப்பி வரும் கைதிகளுக்கு உதவி செய்தல் ஆகிய பணிகளில் அந்தப் பெண்மணி மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

மற்ற உளவாளிகளைவிட மிகவும் அபாயகரமானவர் என்று எதிரிகளால் கருதப்பட்டவர். 3 கிலோ எடையுள்ள, மரத்தாலான செயற்கைக் காலை இடது காலில் பொருத்தியிருக்கும், மாற்றுத் திறனாளியாக இருந்தபோதிலும், தம்மை கண்காணித்தவர்களிடம் சிக்காமல் செயல்பட்டவர்.

நெருக்கமான தோழர்களுக்கும் கூட இவர் பிடிபடாதவர். வெர்ஜினியா என்ற இவர் தொடர்ந்து தோற்றத்தையும், செயல்பாடுகளையும் மாற்றிக் கொண்டே இருந்தவர். பிரான்ஸ் நாட்டின் பரந்த புவிப் பரப்பில் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென தோன்றி, சீக்கிரத்தில் காணாமல் போய்விடுபவராக இருந்தவர்.

அசாதாரணமான போர்க்கால சாகசங்களை செய்திருக்கும், `லிம்ப்பிங் லேடி' எனப்பட்ட இவர் 1980களில் மரணிக்கும் வரையில் அதிகம் அறியப்படாதவராகவே இருந்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கிறது. சமீபத்திய Star Wars தொகுப்புகளில் நடித்ததால் பிரபரமாக உள்ள டெய்ஸி ரிட்லே நடிப்பில் இது திரைப்படமாக உருவாக உள்ளது.

தகர்ந்து போன கனவு

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் பணக்காரக் குடும்பம் ஒன்றில் 1906ல் பிறந்த வெர்ஜினியா ஹாலுக்கு வெளிநாட்டுத் தூதராக வேண்டும் என்பது நீண்டகாலக் கனவாக இருந்துள்ளது. ஆங்கிலம் மட்டுமின்றி, பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மானிய மொழிகளிலும் அவரால் சரளமாகப் பேச முடியும்.

தன்னுடைய கல்வியை முடிப்பதற்காக 20வது வயதில் ஐரோப்பாவுக்குச் சென்ற அவர், வார்ஸா, வெனிஸ், இஜ்மீரில் அமெரிக்க தூதரகங்களில் எழுத்தராகப் பணிபுரிந்துள்ளார். அப்போதும் கூட, தூதரக அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை.

படத்தின் காப்புரிமை CIA
Image caption அவருடைய நண்பர்களுக்கும் தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றி கொள்ளும் நபராக வெர்ஜினியா ஹால் விளங்கினார்.

``அவர் பெண்மணி என்பதால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தார். முன்னதாக அமெரிக்காவில் பெண்கள் யாரும் தூதர்களாக இருந்தது கிடையாது'' என்று சோனியா பர்னெல் தெரிவித்துள்ளார். "A Woman of No Importance" - என்ற தலைப்பிலான ஹால்-ன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு மூன்று ஆண்டுகளாகத் தகவல்கள் சேகரித்தவர் இவர்.

அவருக்கு 27 வயதான போது வேட்டைக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் இடதுகாலில் சுடப்பட்டார். காலில் தசை அழுகி, மரணத்தை நெருங்கும் ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டார் - முழங்காலுக்கு கீழே காலை வெட்டி எடுத்துவிட வேண்டியதாயிற்று. அதனால் ஹால் -ன் கனவுகள் தகர்ந்துவிட்டன.

``தைரியமான, சாகசமிக்க விளையாட்டுப் பிள்ளையைப் போன்றவர் அவர். நாட்டின் மீதும், விளையாட்டின் மீதும், குதிரையேற்றத்திலும், வேட்டையிலும் நாட்டம் கொண்டிருந்தவர் என்று பி.பி.சி.யிடம் பர்னெல் தெரிவித்தார்.

``மாற்றுத் திறனாளியாகிவிட்ட பிறகு முக்கியத்துவம் இல்லாத ஒரு பெண்ணாக அவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால் சொல்லப்போனால் மிகவும் முக்கியமான ஒரு பெண்ணாக உண்மையில் அவர் மாறிப் போனார்'' என்று பர்னெல் குறிப்பிடுகிறார்.

அசாதாரணமான உறுதி

விபத்துக்குப் பிறகு அமைதியாக வீட்டில் முடங்கிவிடாமல், வாழ்க்கையில் அசாத்தியமான விஷயங்களை எட்டும் முயற்சிகளில் ஹால் ஈடுபட்டார் என்று பர்னெல் கூறுகிறார்.

``அவர் சாகச உணர்வு மிக்கவர். ஆனால் அந்த விபத்து அவருக்கு அசாதாரணமான உறுதியை அளித்தது. ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். தாம் உயிர் பிழைத்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நிரூபிக்க அவர் விரும்பினார்.''

1940-ல் இரண்டாவது உலகப் போரில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. தொடர்ச்சியான துப்பாக்கிச் சண்டைகளுக்கு இடையில், பிரெஞ்சு வீரர்களை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களை ஓட்டிச் சென்று, முன்களப் பணியில் அப்போது ஹால் ஈடுபட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அவசர ஊர்தி சேவையில் முன்னிலையில் நின்று ஹால் பணியாற்றினார். 1940ம் ஆண்டு நாஜிக்கள் பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்த பின்னர், தற்காலிகமாக பிரான்ஸை விட்டு ஹால் வெளியேறினார்.

ஆனால் 1940-ல் பிரான்சின் ஒரு பகுதியை நாஜிகள் ஆக்கிரமித்தனர். அதனால் அவர் சென்றுவிட்டார். அவருடைய வாழ்வில் மாற்றத்துக்கான திருப்பம் ஸ்பெயினில் ஹாலுக்கு கிடைத்தது.

``தலைமறைவு பிரிட்டிஷ் ஏஜென்ட் ஒருவர் ஸ்பெயின் ரயில் நிலையம் ஒன்றில் இவரை கவனித்திருக்கிறார். தாம் இதுவரை ஆற்றிய பணிகள் பற்றி அவரிடம் சுருக்கமாகக் கூறிய ஹால், இன்னும் நிறைய செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்'' என்று பர்னெல் தெரிவிக்கிறார்.

ஹாலிடம் ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்த அவர், ``நீங்கள் லண்டன் செல்லும் போது இந்த எண்ணில் எனது நண்பரை அழைத்துப் பேசுங்கள். நீங்கள் செய்வதற்கு ஏதாவது பணிகளை அவரால் தெரிவிக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.

``அந்தச் சிறிய, அசாதாரணமான வாய்ப்பு தான் இந்தப் பணியை ஆற்றும் அளவுக்கு அவரை மாற்றியது.''

தலைமறைவு ஏஜென்ட்

ஹால் லண்டனுக்குச் சென்று, பிரிட்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு செயல்பாடுகள் அலுவலர் (SOE) என்ற நிலையில் பணியாற்றினார்.

எதிரி நாட்டு எல்லைக்குள் பெண்களை அனுப்ப SOE-க்கு அனுமதி இல்லை, ஆனால் ஆறு மாத காலத்தில் ஒரு ஏஜென்டை கூட ஊருவச் செய்ய அந்த அமைப்பால் முடியாமல் போனது என்று பர்னெல் தெரிவிக்கிறார்.

1941ல் நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தியாளர் என்று கூறிக் கொண்டு பிரான்ஸுக்கு ஹால் சென்றபோது, அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50/50 என்று இருந்தது.

நாஜிகளுக்கு எதிரான தற்காப்புகளுக்கு ஏற்பாடு செய்தல் என்ற ஆபத்தான பணியைச் செய்வதற்காக, உள்ளூரைச் சேர்ந்த விலைமகள், கவர்ச்சியானவர் என 30 வயதான ஜெர்மெய்னே என்பவரையும், உள்ளூரைச் சேர்ந்த பாலியல் டாக்டரையும் தேர்வு செய்தார். இருவருமே அவருடைய ``தலைமை தளகர்த்தர்களாக'' இருந்தனர் என்று பர்னெல் விவரிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரயில்களை தடம்புரள செய்வது உள்ளிட்ட திடீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரெஞ்ச் தற்காப்பு படையினருக்கு உதவுவதும் ஹாலின் பணியாக அமைந்தது.

``பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் உதவியுடன் ஜெர்மானிய வாடிக்கையாளர்களை ஜெர்மெய்னே உளவு பார்ப்பார். ஜெர்மானிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் போதை மருந்து கொடுப்பார்கள். அவர்கள் தூங்கியதும், அவர்களுடைய சீருடைகளில் உள்ள முக்கியமான ஆவணங்களை புகைப்படம் எடுத்து, இந்தத் தகவல்கள் அனைத்தையும் வெர்ஜினியாவுக்கு அனுப்புவார்கள். அவர் அதை லண்டனுக்கு அனுப்புவார்.''

``பாதுகாப்பான இல்லங்களை அவர் அமைத்திருந்தார்கள். தப்பி வந்தபோர்க் கைதிகளை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விமானிகளை கண்டுபிடிப்பார்கள். பாதுகாப்பான இல்லங்களில் தங்க வைத்து அவர்களை ஸ்பெயினுக்கு அனுப்புவார்கள்.''

``படிப்படியாக இந்தத் தொடர்புகளை ரயில்வே ஊழியர்கள், அரசு அதிகாரிகள் என பரவலாக்கிக் கொண்டனர். உணவு, எரிபொருள் கொண்டு வரக் கூடிய நிலையில் உள்ள அனைவரையும் இதில் சேர்த்துக் கொண்டனர். எதிர்காலத்தில் உருவான ரகசிய ராணுவத்தின் கருவாக அமையும் வகையில் ஒரு தொடர்பு வட்டத்தை அவர்கள் உருவாக்கினர்.

எதிரிகளைவிட ஒருபடி அதிகமான நடவடிக்கை

விரைவிலேயே அசாத்தியமான நடவடிக்கைகள் மூலமாக சிறைகளில் இருந்து ஏஜென்ட்களை அழைத்து வருவது, சதிச் செயல்களை செயல்படுத்துவது, பாலங்களை வெடிவைத்து தகர்ப்பது, ஜெர்மானிய படை வாகனங்களைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டார் - ஒரு போதும் அவர் சிக்கிக் கொண்டதில்லை.

அந்த சமயத்தில் நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் அவருடைய பெயர் பிரபலமாகிவிட்டது.

மெதுவாக ஜெர்மானியர்கள் அந்த உளவாளியின் புகைப்படத்தை சேகரித்துவிட்டனர். அவரை ``லிம்ப்பிங் லேடி'' என அவர்கள் குறிப்பிட்டனர். நடக்கும் போது ஹால் மிக கவனமாக இருக்க வேண்டியதாயிற்று. மாற்றுத்திறனாளி என்பது தெரியாத வகையில் நீண்ட அடியெடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது.

1942ல் பனியால் மூடப்பட்ட மலைகளை கால்நடையாகவே கடந்து ஸ்பெயினுக்குள் அவர் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக இருந்தது. ஜெர்மானிய ரகசியக் காவல் படையைச் சேர்ந்தவரும், போர்க் கைதிகளை நேரடியாகவே கொடூரமாக துன்புறுத்தியவருமான கிளாஸ் பார்பி என்பவரை விட்டுவிட்டு, ஹால் மட்டும் உள்ளே நுழைந்தார்.

ஆண்களை விட, பெண்களை நாஜிகள் கொடூரமாக துன்புறுத்தியதை ஹால் அறிந்திருப்பார் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. அவர்கள் உள்ளூர் பெண்களாக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளையும் துன்புறுத்தியதாகவும் ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

``அது கொடூரமானது'' என்கிறார் பர்னெல். ``சிக்கினால் என்னவாகும் என்பதை அவர் அறிந்திருந்தார்'' என்றும் குறிப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹால் எதிர்கொண்ட ஓர் எதிரி, பிரான்ஸ் நகரில் சித்ரவதைக்கு பேர்போன கிளெஸ் பார்பியே.

தனித்தன்மை

ஜெர்மானிய கைதியாகிவிட்டால் ஹால் எந்த அளவுக்கு தேடப்பட்ட முக்கிய நபராக இருப்பார் என்பதை அறிந்திருந்த காரணத்தால் பிரிட்டிஷ் அரசு அவர் மீண்டும் பிரான்சுக்கு அனுப்ப மறுத்து ஸ்பெயின் நாட்டிலேயே பணியில் வைத்துக் கொண்டது.

ஆனால் மீண்டும் முன்களப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று ஹால் உறுதியாக இருந்தார். 1944ல் அவர் மீண்டும் பிரான்சில் நுழைந்தார். அப்போது முழுக்க நாசிகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அமெரிக்காவில் சி.ஐ.ஏ.வுக்கு முந்தைய அமைப்பான ராணுவ சேவைகளுக்கான அலுவலகத்தின் (OSS) உத்தரவின்படி அவர் சென்றார்.

மூத்த விவசாயி டயானே என்று தம்மை அவர் அடையாளப்படுத்திக் கொண்டார்.

செயல்பாட்டு நாளுக்காக கூட்டாளிகளுக்கு உதவி செய்தல், நார்மண்டியில் கூட்டாளிகள் வந்து சேருவதற்கு உதவுதல் ஆகியவை தான் அவருக்கான உண்மையான பணிகளாக இருந்தன.

ஜெர்மானிய படைகளுக்கு எதிராக கொரில்லா போர் நடத்துவதற்கான எதிர்ப்புப் படைகளாக 3 பட்டாலியன்களை உருவாக்குவதற்கு ஹால் உதவிகரமாக இருந்தார் என்று சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. உயரதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்து இதை அவர் செய்துள்ளார்.

அந்த காலக்கட்டத்தில் அவருடைய பணிகளைக் காட்டும் ஒரு புகைப்படம் 2006ல் திறக்கப்பட்டது. அந்தப் படம் இப்போதும் அமெரிக்க உளவு அமைப்பின் சுவர்களில் இருக்கிறது.

போரைத் தொடர்ந்து, சிறப்புமிக்க சேவைக்கான கிராஸ் விருது பெற்ற, ஒரே பெண்மணியாக் ஹால் மட்டுமே இருந்தார். பொது மக்களில் இந்த விருது பெற்ற ஒரே பெண்மணி இவரே. இரண்டாம் உலகப் போரின் போது ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

Order of the British Empire (MBE)-ன் கவுரவ உறுப்பினர் அந்தஸ்தும் இவருக்கு அளிக்கப்பட்டது. அதேபோல பிரான்ஸ் அரசால் Croix de Guerre விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 1966ல் 60 வயதை எட்டி ஓய்வு பெறும் வரை சி.ஐ.ஏ.வுக்காக அவர் பணியாற்றினார்.

``மக்கள் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என அவர் விரும்பியதில்லை. போருக்குப் பிறகு 50களில் இருந்த பாரம்பரிய, மரபு வழியான பெண்கள் என்ற வரையறைகளில் அவர் சிக்கிக் கொள்ளவில்லை'' என்கிறார் பர்னெல்.

1982ல் ஹால் காலமானார். ஆனால் அண்மைக் காலத்தில் தான் அவருடைய மெச்சத்தக்க வாழ்க்கை பற்றிய தகவல்களை வரலாற்றாளர்கள் தொகுத்தனர்.

``தலைமறைவு வாழ்க்கையில் அசாதாரணமான காலத்தை அவர் கடந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை நான் ஆய்வு செய்தபோது, எலியும் பூனையும் ஒளிந்து விளையாடுவதைப் போல உணர்ந்தேன்'' என்கிறார் பர்னெல்.

``எனக்கும் கூட அவர் பிடிபடாமல் இருந்தார்.''

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்