'யார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்'

`யார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்' படத்தின் காப்புரிமை Alin Gragossian

சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய இதயத்துக்குச் சொந்தமான பெண்ணின் குடும்பத்தாரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பிரித்தபோது, 31 வயதாகும் ஆலின் கிராகோஸ்ஸியன் நடுக்கம் கொண்டார்.

``எனக்கு இதயம் தானம் அளித்தவரின் குடும்பத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக மருத்துவமனையில் இருந்து எனக்குத் தொலைபேசி மூலம் கூறினார்கள். அந்தக் கடிதத்தை செவிலியர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார். ஆனால், எனக்கு அனுப்ப வேண்டாம் என்று அவர்களுக்கு நான் சொல்லியிருந்தேன். அதைப் படிப்பதற்கு நான் ஆயத்தமாக இல்லை,'' என்று அவர் கூறினார்.

இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது. தனது உயிரைக் காப்பாற்றிய இதயத்துக்குச் சொந்தமான ''துடிமிப்புமிக்க'' அந்த இளம்பெண்ணைப் பற்றி படித்து தெரிந்துகொண்டபோது கண்ணீரில் மூழ்கியதாக ஆலின் தெரிவித்தார்.

''எனக்கு இதயத்தை தானமாக கொடுத்தவர் ஒரு மனிதர்தான் என்று தெரியும். ஆனால், அந்த மனிதரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைப் படித்தது எனக்கு திடீரென மிகவும் தத்துரூபமாகத் தோன்றியது.''

''ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் மயிர்க் கால்கள் சிலிர்த்துக் கொண்டன. பல விஷயங்களில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருந்தோம்.''

''நாங்கள் இருவரும் வெவ்வேறு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த, எங்களில் யார் முதலில் மரணிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருந்த இரு இளம் பெண்கள்,'' என்று ஆலின் தெரிவித்தார்.

அந்தக் கடிதம் பற்றி சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். தனக்குக் கிடைத்துள்ள இதயத்தை ''நல்ல வகையில் பயன்படுத்துவேன்'' என்று அவர் உறுதி அளித்திருக்கிறார். ''ஆழ்மனதில் இருந்து நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்று ஆலின் கூறியுள்ளார்.

பிலடெல்பியாவை சேர்ந்த ஆலின் அவசர சிகிச்சைப் பிரிவில் பயிற்சி மருத்துவராக இருக்கிறார்.

``ஒரு நோயாளி மரணம் அடைந்த பிறகு உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு உதவும் நிறுவனங்களுடன் முன்பு நான் தொடர்பு கொள்வது வழக்கம். என் பணியில் ஒரு செயல்பாடாக அவ்வாறு தொடர்பு கொள்வேன். ஒரு தொலைபேசி அழைப்பின் வலிமை எவ்வளவு என்பதை இப்போது உண்மையாக நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்,'' என்று அவர் தெரிவித்தார்.

இதயம் தானம் அளித்தவரின் குடும்பத்தினருக்கு முன்பு ஆலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அவர்கள் அந்தக் கடிதத்தைப் படித்தார்களா என்பதை அறிந்து கொள்ள வழி இல்லை.

அமெரிக்காவில் உறுப்பு தானம் செய்பவருடைய குடும்பத்தினர் கேட்டுக் கொண்டாலோ அல்லது தொடர்பு கொள்ள ஒப்புக் கொண்டாலோ மட்டும்தான் அவர்களைப் பற்றிய அடையாளம், தானம் பெற்றவருக்குத் தெரிவிக்கப்படும்.

முழுமையான நடைமுறை நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடும். ஆனால், உறுப்பு தானம் செய்த மற்றும் தானம் பெற்ற குடும்பத்தினருக்கு இடையே தொடர்பாளராக உறுப்பு மாற்று சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன.

அமெரிக்காவில் உடல் உறுப்பு தான நடைமுறைகளை நிர்வகிக்கும் உறுப்பு தான யுனைடெட் நெட்வொர்க் அமைப்பு, அனைத்து தகவல் தொடர்பு வசதிகளிலும், அடையாளத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதை ஊக்குவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Alin Gragossian

அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாத நிலையில், தனக்கு உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு தன்னுடைய கருத்துகளை வலைப்பூ மூலம் பதிவிட ஆலின் முடிவு செய்தார்.

"ரத்த வகை மட்டுமின்றி நம் இருவருக்கும் இடையில் பொதுவான பல விஷயங்கள் உள்ளன,'' என்று அவர் எழுதியுள்ளார். அநேகமாக நாம் நல்ல நண்பர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், நமது பாதைகள் விநோதமான வழிகளில் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உன் வாழ்வின் கடைசி நாளில், என் வாழ்வின் முதலாவது நாளில் - உன் வாழ்வின் மோசமான நாளன்று, என் வாழ்வின் நல்ல நாள் அமைந்துவிட்டது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தானம் அளித்தவரின் குடும்பத்தினர் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாமல் இருப்பது என்ற உணர்வை மதிப்பதாகக் கூறியுள்ள ஆலின், கடிதத்தில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்துள்ளார்.

இருந்தபோதிலும், தானம் அளித்தவரின் குடும்பத்தினர் இந்தப் பதிவைப் பார்ப்பார்கள், தமது நன்றி உணர்வைப் புரிந்து கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Alin Gragossian

இந்தப் பதிவு பலரை மனம் உருகச் செய்துள்ளது. உடல் உறுப்பு தானம் அளிப்பவர் மற்றும் பெறுபவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இது அமைந்துள்ளது.

உடல் உறுப்பு தானம் பெற்றவர்களின் சில குடும்பத்தினர் ஆலின் மீது ''ஒரு வகையில் பொறாமையாக'' உள்ளனர். தானம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருடன் ஆலின் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, தங்களுக்கு அப்படி கிடைக்கவில்லையே என்ற பொறாமையாக அது உள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர் - தானம் பெற்றவருக்கு இடையிலான தகவல் தொடர்பின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை நெவடாவை சேர்ந்த லைனெட்டே ஹசார்டு அறிந்திருக்கிறார்.

லைனெட்வின் மகன் ஜஸ்டென் 20வது வயதில் மரணம் அடைந்தார்.

பல ஆண்டுகளாக அவர் நோயுற்றிருந்துள்ளார். உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Lynette Hazzard

ஜஸ்டெனின் மரணத்துக்குப் பிறகு, அவருடைய இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் நான்கு பேருக்குப் பொருத்தமாக இருந்தன.

தனது மகனின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்ற ஒவ்வொருவருக்கும் லைனெட்டே கடிதம் எழுதியுள்ளார். ``தனக்குக் கிடைத்த பரிசுக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு'' ஆலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு லைனெட்டேவுக்கு மிகுந்த உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

``கடிதம் எழுதுவதற்கு எனக்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஏனென்றால் எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை'' என்று லைனெட்டே குறிப்பிட்டுள்ளார். ``எங்கள் மகன் எப்படியானவன் என்பதை சிறிய கடிதத்தில் எழுதுவது மிகவும் கடினமான விஷயம்'' என அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Lynette Hazzard

"அவன் எந்த அளவுக்கு அன்பானவன், பலமான இளைஞன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்ய நான் விரும்பினேன். பிறருக்கு உதவி செய்வதில் அவனுக்கு எந்த அளவுக்கு நாட்டம் இருந்தது என்பதையும், மரணத்துக்குப் பிறகும் தானம் செய்ய விரும்பும் அளவுக்கு அவனுடைய தாராள மனம் இருந்தது என்பதையும் தெரிவிக்க விரும்பினேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

மற்றவர்களுக்கு தன்னுடைய மகன் உதவி செய்திருக்கிறான் என்பது, அவனுடைய நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று லைனெட் தெரிவிக்கிறார்.

"அவன் இன்னும் உயிர் வாழ்வதாகவே, மற்றவர்கள் மூலம் உயிர் வாழ்வதாகவே நான் உணர்கிறேன். அவனுடைய உடல் உறுப்புகளைத் தானம் பெற்ற ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சிறிய விஷயமாகக் கருதிவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்