எவரெஸ்ட் மலையில் அதிகரிக்கும் கூட்டம் - காரணம் என்ன?

எவரெஸ்ட் மலையில் அதிகரிக்கும் கூட்டம் - காரணம் என்ன? படத்தின் காப்புரிமை AFP PHOTO / PROJECT POSSIBLE

நீங்கள் எவரெஸ்ட் மலை சிகரம் குறித்து நினைத்துப் பார்த்தால், அதில் பெரும்பாலும் வானுயர்ந்த பனி நிறைந்த மலையே காணப்படும் தானே?

ஆனால், மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது.

அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, உலகத்தின் மிகப் பெரிய மலை சிகரமான எவரெஸ்டை அடைவதற்கு மலையேற்ற வீரர்கள் சந்திக்கும் சவால்களை காட்டுகிறது.

மலையின் உச்சியில் நீண்ட வரிசை காணப்படுவது இயல்பானதா?

ஆம். மலையேற்றத்துக்கு ஏதுவான காலப்பகுதியில் இது சாதாரண ஒன்று என்று வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

"இங்கு இயல்பாகவே கூட்டமாகதான் இருக்கும்" என்று கூறுகிறார் மலையேற்ற நிறுவனம் ஒன்றின் தலைவரான மிங்மா. மலையின் உச்சியை தொடுவதற்கு மலையேற்ற வீரர்கள் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் முதல் 1.5 மணிநேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"மலையேற்றம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான பருவம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்திற்கு மலையின் உச்சியில் கூட்டம் காணப்படாது. ஆனால், அந்த குறிப்பிட்ட பருவம் முடிவடைவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்து அதிகப்படியான கூட்டம் காணப்படும். ஏனெனில், பலர் ஒன்றாக சேர்ந்து மலையேற்றம் செய்யும் வகையிலேயே திட்டமிடுகிறார்கள்" என்கிறார் மிங்மா.

எவரெஸ்ட் மலையின் உச்சியில் அதிகப்படியான கூட்டம் இருப்பதாக செய்தி வருவது இது முதல் முறையல்ல.

ஜெர்மனியை சேர்ந்த மலையேற்ற வீரர் ரால்ப் டுஜிமோவ்டிஸ் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தில் நூற்றுக்கும் அதிகமான மலையேற்ற வீரர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

அதிகப்படியான கூட்டம் அபாயகரமானதா?

படத்தின் காப்புரிமை WWW.RALFDUJMOVITS.DE

1992ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏழு முறை எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியை அடைந்துள்ள டுஜிமோவிட்ஸ், இதுபோன்ற அதிகப்படியான கூட்டம் மலையின் உச்சியில் வரிசையில் நிற்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கிறார்.

"திட்டமிட்டதை விட அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்கும்போதோ அல்லது திரும்ப இறங்கும்போதோ, மலையேற்ற வீரர் ஆக்ஸிஜன் பற்றாற்குறையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற பயணங்களின்போது, மிகவும் தேவையானதாக இருக்கும் ஆக்சிஜன் உருளைகள், சில சமயங்களில் திருடுபோகிறது என்று கூறுகிறார் இதுவரை மூன்றுமுறை எவரெஸ்ட் மலைச்சிகரத்தை அடைந்துள்ள மாயா.

"அவ்வளவு உயரமான இடத்தில், ஆக்ஸிஜன் உருளைகளை திருடுவது, ஒருவரை கொலை செய்வதற்கு சமமானது" என்று அவர் கூறுகிறார்.

நெரிசல் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை WILD YAK EXPEDITIONS

உலகம் முழுவதும் மக்களிடையே மலையேற்றம் மேற்கொள்வது பிரபலமடைந்து வருவதால், சமீபகாலமாக எவரெஸ்டிலும் கூட்டம் அலைமோதுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையேற்றத்தை மேற்கொள்வதற்கு போதிய உடல்தகுதி இல்லாதவர்களாலேயே இதுபோன்ற நெரிசல்கள் பெரும்பாலும் ஏற்படுவதாக கூறுகிறார் 2016ஆம் ஆண்டு எவரெஸ்ட் மலை சிகரத்துக்கு சென்ற வழிகாட்டியான ஆண்ட்ரியா உர்சினா.

சரிவர தயாராகாதவர்களால் அவர்களது உயிர் மட்டுமின்றி, உடன் செல்லும் வழிகாட்டிகள் உயிரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக அவர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, மலையேற்ற வழிகாட்டிகளின் கட்டளைகளை மலையேற்ற வீரர்கள் சரிவர பின்பற்றாமல் இருப்பதும் சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுப்பதாக அவர் கூறுகிறார்.

என்னதான் பயன்?

படத்தின் காப்புரிமை Getty Images

தான் மலையின் உச்சியை அடைவதற்கு முன்புவரை இருந்த வலிகள், அதை அடைந்ததும் காணாமல் போய்விட்டதாக கூறுகிறார் டுஜிமோவ்டிஸ்.

இருப்பினும், மலையின் உச்சியை அடைந்ததை விட பாதுகாப்பாக தரை இறங்குவதே மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.

"மலையின் உச்சியை அடைந்துவிட்டு கீழிறங்கி வரும்போது, கடந்த காலங்களில் எனது நண்பர்கள் பலர் உயிரிழந்துள்ளார்கள். எனவே, மலையின் உச்சியை அடைவதற்கு செலுத்தும் கவனத்தை, மீண்டும் கீழிறங்குவதிலும் செலுத்த வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

அதே வேளையில், ஒரு மலை சிகரத்தில் ஏறுவதற்கு முன்பு, அதன் தன்மை, காலநிலை போன்றவை மட்டுமின்றி, தனது உடற்தகுதியையும் வீரர்கள் கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்