ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு - மீண்டும் சர்ச்சையில் சிக்கியது ஏன்? மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Reuters

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

அமெரிக்கா ஓக்லாஹோமா மாகாணம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மருந்துகளுக்கு அடிமையாகும் வண்ணம் வலி நிவாரணி மருந்துகளை தயாரித்தது உட்பட அந்த நிறுவனத்திற்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. சில நாட்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைப்பட்சமானது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியது.

மக்களவைத் தேர்தலில் எதிரொலித்த பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் , அதிமுக வேட்பாளர் மகேந்திரனை விட 1,75,883 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார்; இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பொள்ளாச்சி விஷயம் இந்த தேர்தலில் பெரும் அளவு பிரதிப்பலித்திருப்பதே என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ,பொள்ளாச்சி, வால்பாறை(தனி), உடுமலைப்பேட்டை, மடத்துகுளம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி. இத்தொகுதியில் இதுவரை நடந்த 17 மக்களவைத் தேர்தல்களில் அதிகமாக 7 முறை அதிமுக கட்சி தான் வென்றுள்ளது.

2009ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமார், திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தினை விட 46000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியினை விட 1,65,263 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.

விரிவாகப் படிக்க:மக்களவைத் தேர்தலில் எதிரொலித்த பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்

"ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது, அரசியல் தற்கொலையாக அமையும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் எச்சரித்துள்ளார்.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம் என்று பிபிசியின் ரேடியோ 4இன் இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெர்மி ஹண்ட், பிரதமர் தெரீசா மேயின் இடத்தை பிடிக்க போட்டியிடும் 10 பேரில் ஒருவராவார்.

விரிவாகப் படிக்க:"ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது, அரசியல் தற்கொலையாக அமையும் - ஜெர்மி ஹண்ட்

பதவியை ராஜிநாமா செய்துவிட்டு விவசாயத்துக்கு திரும்பும் கர்நாடகாவின் 'சிங்கம்' போலீஸ்

தெற்கு பெங்களூரு துணை ஆணையர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மே 28ம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை அவர் சமர்பித்துள்ளதாக கூறி, தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை இணையத்தில் அனுப்பியுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர் என்ற பெருமை பெற்று "கர்நாடக சிங்கம் போலீஸ்" என்று அறியப்படுகிறார் அண்ணாமலை.

விரிவாகப் படிக்க:பதவியை ராஜிநாமா செய்துவிட்டு விவசாயத்துக்கு திரும்பும் கர்நாடகாவின் 'சிங்கம்' போலீஸ்

தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

படத்தின் காப்புரிமை Getty Images

நேற்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய பங்காக 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்திவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.

விரிவாகப் படிக்க:தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :