’விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்’ - மற்றும் பிற செய்திகள்

ஜூலியன் அசாஞ் படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜூலியன் அசாஞ்

உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் 'நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு' உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நில்ஸ் மெல்சர் எனும் ஐநாவை சேர்ந்த வல்லுநர், அசாஞ் இந்த விசாரணைக்கு தகுதியற்றவர் என்றும், இதன் மூலம் அவரது மனித உரிமைகள் மீறப்படும் என்பதால், பிரிட்டன் அவரை நாடு கடத்த கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டனின் வெளியுறத்துறை செயலாளர், அசாஞ் நீதியின் பார்வையிலிருந்து மறைந்திருக்க விரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.

மெல்சரின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜெர்மி ஹண்ட், 'பிரிட்டன் நீதிமன்றங்கள் மெல்சரின் குறுக்கீடு அல்லது குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் தங்கள் தீர்ப்பு குறித்து முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோதி அமைச்சரவை அறிவிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பிரதமர் நரேந்திர மோதியோடு 58 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகியவை நரேந்திர மோதியின் வசம் இருக்கிறது.

நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும், சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:நரேந்திர மோதி அமைச்சரவை அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவுக்கு உள்துறை

சஹ்ரான் பயன்படுத்தியதாக நம்பப்படும் கணினி மற்றும் பணம் கைப்பற்றல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சஹ்ரான் ஹாஷிம்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்தியதாக நம்பப்படும் மடிக் கணினி ஒன்றும் 35 லட்சம் ரூபாய் பணமும் நேற்று (வெள்ளிக்கிழமை) அம்பாறை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதை போலீஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் - பாலமுனை பிரதேசத்திலுள்ள ஹுசைனியா நகரில் இன்று பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 35 லட்சம் ரூபாய் பணமும், நகைகள் சிலவும் கைப்பற்றப்பட்டன.

அண்மையில் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சியாம் என்பவரிடம், பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளின்போது, இந்தப் பணம் மற்றும் கணினி பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விரிவாக படிக்க:சஹ்ரான் பயன்படுத்தியதாக நம்பப்படும் கணினி மற்றும் பணம் கைப்பற்றல்

என்.ஜி.கே: சினிமா விமர்சனம்

படத்தின் காப்புரிமை TWITTER

இரண்டாம் உலகம் படம் வெளிவந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் இது. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து உருவாக்கியிருக்கும் முதல் படமும்கூட.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த என்.ஜி.கே. எனப்படும் நந்த கோபாலன் குமரன் (சூர்யா) ஊரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். ஊரில் உள்ள இளைஞர்களைத் திரட்டி, சமூகப் பணிகளையும் செய்துவருகிறார். ஆனால், அந்த ஊரில் உள்ள பூச்சி மருந்துக் கடைக்காரர்கள் இயற்கை விவசாயம் செய்யக்கூடாது என அவரை மிரட்டி, அவரது வயலுக்கு தீ வைத்துவிடுகிறார்கள். இதனால் உள்ளூர் அரசியல்வாதியை அணுகி, அந்தப் பிரச்சனையை தீர்க்க முயல்கிறார்.

விரிவாக படிக்க:என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்): சினிமா விமர்சனம்

நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கை - தமிழரின் கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டு

நோயாளிகளை பராமரிப்பது, குறிப்பாக நீண்டகாலமாக நோயாளிகளாக இருப்போரை தொடர்ந்து பராமரித்து வருவது மிகவும் கடினம். அதிலும், படுத்தபடுக்கையாய் இருப்போருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வது மேலும் கடினம். அவர்களை கவனிப்பதற்கே பலர் தேவைப்படுவர்.

படுத்தப்படுக்கையில் இருக்கின்ற நோயாளிகள் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் அவர்கள் படுத்திருக்கும் படுக்கையில் இருந்து தூக்கிச் செல்ல வேண்டியிருக்கும்.

இல்லாவிட்டால், அந்த படுக்கையில் இருந்தவாறே அவர்கள் சிறுநீர், மலம் கழித்துவிட, அவற்றை கழிவறைக்கு எடுத்து சென்று கொட்ட வேண்டியிருக்கும்.

விரிவாக படிக்க:நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கை - தமிழரின் கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :