பாகிஸ்தான் மனித உரிமை மீறல்: ஒருபுறம் தாலிபன், மறுபுறம் அரசு இடையில் சிக்கிய வாஜிரிஸ்தான் பழங்குடிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராணுவத்துக்குப் பயந்து இடம் பெயர்ந்து செல்லும் வாஜிரிஸ்தான் முதியவர் ஒருவர்.

2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் பயங்கரவாதிகளால் தாக்கி தரைமட்டமாக்கப்பட்டன.

இதையடுத்து, ``பயங்கரவாதத்துக்கு எதிரான போர்'' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது அமெரிக்கா.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின்போது பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது ராணுவத்தினர் மற்றும் கலவரக்காரர்களால் நடந்த கொலைகள் மற்றும் கொடூர துன்புறுத்தல்கள் பற்றிய தகவல்கள் இப்போது தான் வெளியாகின்றன. பாதிக்கப்பட்ட சிலரை சந்திக்கும் அபூர்வ வாய்ப்பு பிபிசி-க்கு கிடைத்தது.

பாகிஸ்தானிய தாலிபன்களுக்கு எதிரான போரில் பெரிய வெற்றி கிடைத்துவிட்டது என்று 2014 தொடக்கத்தில் தொலைக்காட்சி செய்திகள் உரத்த குரலில் கூறின. இரவு நேரத்தில் வான்வழியாக நடந்த தாக்குதலில், பாகிஸ்தானிய தாலிபன்களின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த செய்திகள் வெளியாயின.

ஆப்கன் எல்லை அருகே வடக்கு வாஜிரிஸ்தான் மலைவாழ் பகுதியில் நடந்த தாக்குதல்களில் அட்னன் ரஷீத்தும், அவருடைய குடும்பத்தினர் ஐந்து பேர் வரையிலும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானிய விமானப் படையின் முன்னாள் தொழில்நுட்பப் பணியாளரான ரஷீத் நன்கு அறியப்பட்டவர். 2012ல் பள்ளி மாணவி மலாலா யூசுப்ஜாய் தாலிபன் தீவிரவாதியால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், வழக்கத்துக்கு மாறாக இவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக இவர் சிறை வைக்கப் பட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வாஜிரிஸ்தானில் பெரிய இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர்.

இப்போது அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.

ஹம்ஜோனி பகுதியில் இரண்டு இரவுகளுக்கு முன்னதாக அட்னன் ரஷீத் பதுங்கி இருந்த இடத்தின் மீது தாக்குதல் நடந்ததாக 2014 ஜனவரி 22 ஆம் தேதி செய்திச் சேனல்கள், பாதுகாப்புப் படையினரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.

9/11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கனில் அமெரிக்கா நுழைந்ததை அடுத்து, தாலிபன் தீவிரவாதிகள், அல்-காய்தா ஜிகாதிகள் மற்றும் இதர தீவிரவாதிகள் எளிதில் ஊடுருவக் கூடிய ஆப்கன் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. வாஜிரிஸ்தான் மற்றும் மலைகள் நிறைந்த பகுதிகள் முழுக்க அதன் கட்டுப்பாட்டில் வந்தன.

பத்திரிகையாளர்கள் உள்பட வெளியில் இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாது - எனவே பாதுகாப்புப் படையினர் மூலமாக தகவல்களை உறுதி செய்வது மிகவும் சிரமமான விஷயம். வாஜிரிஸ்தான் பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினர் விரும்பாத செய்திகளை வெளியிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

ராணுவ ஜெட் விமானங்கள் தவறான இலக்கை தாக்கியுள்ளன என்பது ஓராண்டு கழித்து வெளிச்சத்துக்கு வந்தது. தாம் உயிருடன் இருப்பதாகக் கூறி ரஷீத் விடியோ வெளியிட்டு அதை நிரூபித்தார்.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக அட்னன் ரஷீத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தலைவரைக் கொல்வதற்குப் பதிலாக, உள்ளூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் வீட்டை தகர்த்து அவர்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்றிருக்கிறது.

தாங்கள் தவறு செய்துவிட்டதாக அதிகாரிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. தாக்குதலுக்கு ஆளான வீட்டின் உரிமையாளரை சந்திக்க, தொலைதூர மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கான நுழைவாயிலாக உள்ள சிந்து நதிக் கரையில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற நகரத்துக்கு பிபிசி குழு சென்றது.

``அப்போது இரவு சுமார் 11 மணி இருக்கும்'' என்று நினைவுகூறுகிறார் அப்போது 20 வயதாக இருந்த நஸிருல்லா. அவருக்கு அப்போது தான் திருமணம் ஆகியிருந்தது. அவர்களுக்கு தனி அறை தரப்பட்டிருந்தது. காட்டெய் கலாய் என்ற கிராமத்தில் தங்களுடைய வீட்டில் மீதமிருந்த மற்றொரு அறையில், அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இரவு உறங்கியிருக்கிறார்கள்.

``வீடே வெடித்தது போல இருந்தது. நானும் எனது மனைவியும் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தோம். காற்றில் குண்டுகளின் வெடிமருந்து வாடை வீசியது. இருவரும் கதவருகே சென்று எட்டிப் பார்த்தபோது, எங்களுடைய படுக்கை இருந்த மூலையைத் தவிர அறையின் கூரை முழுக்கவே சரிந்து விழுந்து கிடந்தது'' என்று நஸிருல்லா தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நஸிருல்லாவும், உறவினர் சுமய்யாவும் உயிர் தப்பினார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.

இரண்டாவது அறையின் கூரையும் சரிந்துவிட்டது. காம்பவுண்ட் பக்கம் தீ எரிந்து கொண்டிருந்தது. இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து கூக்குரல்கள் கேட்டன. நெருப்பு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தவர்களை இழுத்து காப்பாற்ற நஸிருல்லாவும், அவருடைய மனைவியும் கடுமையாகப் போராடியிருக்கிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்கவும், இறந்தவர்களை மீட்கவும் அருகில் வசித்தவர்கள் உதவி செய்திருக்கிறார்கள்.

மூன்று வயது சிறுமி உள்பட நஸிருல்லாவின் குடும்பத்தின் நான்கு பேர் இறந்து போனார்கள். அவருடைய உறவுக்காரப் பெண் சுமய்யாவுக்கு அப்போது ஒரு வயது. அவருடைய தாயாரும் இந்தச் சம்பவத்தில் இறந்து போனார். சுமய்யா இடுப்பில் எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற நான்கு பேர், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். அனைவருக்கும் எலும்பு முறிவுகளும், காயங்களும் ஏற்பட்டன.

அதன்பிறகு நஸிருல்லாவின் குடும்பம் டேரா இஸ்மாயில் கான் நகருக்கு குடிபெயர்ந்து விட்டது. அங்கு அவர்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த இரு தசாப்தங்களாக மலைவாழ் பகுதிகளில் கலகக்காரர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தானின் இந்தப் பகுதி மக்கள் பலரும், பல முறை குடிபெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் இருந்து தீவிரவாதிகளின் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளில் இருந்து 50 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அரசு நடத்தும் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் அல்லது அமைதியான பகுதிகளுக்குச் சென்று வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர் என்று அதிகாரிகளும், தன்னிச்சையாக செயல்படும் ஆய்வுக் குழுக்களும் தெரிவிக்கின்றன.

இந்தப் போரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் கல்வியாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி பார்த்தால், கொல்லப்பட்ட மக்கள், தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிகிறது.

ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்

ராணுவத்தின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைத் தாக்குதல்களில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தங்களுடைய தகவல்களுக்கு ஆதாரம் திரட்டும் வகையில், ஆவணங்கள் மற்றும் விடியோ ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாஷ்டூன் டஹாஃபூஸ் (பாதுகாப்பு) இயக்கம் (பிடிஎம்)

என்ற புதிய மனித உரிமை அமைப்புடன் இந்த ஆர்வலர்களுக்குத் தொடர்பிருக்கிறது. மலைவாழ் பழங்குடிகள் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. இதுபோன்ற உரிமை மீறல்கள் குறித்துப் பேசுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் முன்பு பயந்தனர்.

``அரசியல்சட்டப்படி எங்களுக்கு உரிய உரிமைகளை ராணுவம் நேரடியாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் மூலமாகவும் எப்படி நசுக்குகிறது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அடக்குமுறைகள் பற்றியும், துன்புறுத்தல்கள் பற்றியும் பேசுவதற்கும் எங்களுக்கு 15 ஆண்டு காலம் ஆகியுள்ளது'' என்று பிடிஎம் அமைப்பின் உயர் தலைவரான மன்சூர் பஷ்ட்டீன் கூறுகிறார்.

ஆனால் இந்த அமைப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வடக்கு வாஜிரிஸ்தானில் போராட்டக்காரர்களின் பெரிய கூட்டத்தின் மீது மே 26ம் தேதி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 13 சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டதாக, இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ சோதனைச்சாவடி தாக்கப்பட்டதை அடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதை இந்த அமைப்பு மறுக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் இரு தலைவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் எம்.பி.க்களும்கூட.

படத்தின் காப்புரிமை AAMIR QURESHI/GETTY IMAGES
Image caption மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்த பாஷ்ட்டூன் பாதுகாப்பு இயக்கத் தலைவர் மன்சூர் பஷ்ட்டீன் உதவியுள்ளார்.

பி.டி.எம். அமைப்பு பிரதானமாகக் குறிப்பிட்ட பல வழக்குகள் குறித்து பிபிசி தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்தது. அவை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரிடம் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவையெல்லாம் ``தீர்ப்பு கூறும் வகையில் உள்ளவை'' என்று கூறி அவர் நிராகரித்துவிட்டார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதியாக இருந்தபோது, மலைவாழ் பழங்குடிகளின் பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி இம்ரான் கான் குரல் எழுப்பியுள்ளார் என்றாலும், பிரதமராகிவிட்ட பிறகு அவருடைய அரசிடம் இருந்து இதுபற்றி கருத்து கேட்டு பிபிசி அனுப்பிய தகவல்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை.

9/11 தாக்குதலுக்குப் பிறகு தாலிபன்கள் பாகிஸ்தானுக்குள் வந்தது எப்படி?

2001 செப்டம்பரில் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த அல்-காய்தா தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைகள் ஆரம்பமாயின.

2001ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்குப் புகலிடம் அளித்துக் கொண்டிருந்த தாலிபன் படைகள், போரிட முடியாமல் சிதறின.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2009ல் பாகிஸ்தான் ஒராக்ஜாய் மலை மாவட்டத்தில் ஒரு மறைவிடத்தில் ஆயுதம் தாங்கியிருந்த பாகிஸ்தான் தாலிபான்கள்.

1996ம் ஆண்டு காபூல் நகரில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, அதற்கு அங்கீகாரம் அளித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தத் தீவிரவாத செயல்பாடுகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அக்கறை செலுத்தியது.

பல தசாப்தங்களாக தன்னுடைய தேவைகளுக்கு அமெரிக்க ராணுவ உதவியை பாகிஸ்தான் சார்ந்திருந்த நிலையில், அப்போதிருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, ``பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்'' அமெரிக்காவுடன் கை கோர்த்துக் கொண்டது. அதே நேரம், பாகிஸ்தானில் அரைத் தன்னாட்சி பெற்ற மலைவாழ் பழங்குடி பகுதிகளில், குறிப்பாட வடக்கு மற்றும் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டங்களில் தாலிபன்கள் புகலிடங்களை உருவாக்கிக் கொள்ளவும் பாகிஸ்தான் அனுமதித்தது.

ஆனால், எல்லை கடந்து வந்தவர்கள் தாலிபன்கள் என்பதோடு நிற்கவில்லை. வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த தீவிரவாதிகளும் மலைவாழ் பகுதிகளுக்குள் ஊருவினர். அவர்களில் சிலர் பாகிஸ்தான் அரசுக்கு மிகவும் எதிரானவர்களாக இருந்தனர்.

உலக அளவிலான திட்டங்களுடன் செயல்பட்ட ஜிகாதிகள் வாஜிரிஸ்தானில் இருந்துகொண்டு தாக்குதல் திட்டங்களை வகுக்கத் தொடங்கினர். எனவே இஸ்லாமிய தீவிரவாதத்தை நசுக்க பாகிஸ்தான் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாஷிங்டனில் இருந்து நெருக்குதல் வந்தது.

வன்செயல்கள் பரவியபோது ``தீவிரவாதக் குழுக்களை எதிர்த்து செயல்பட விரும்புவது, அதேநேரம், எதிர்காலத்தில் தனது பேர சக்தியை வலுப்படுத்திக் கொள்ள சில அமைப்புகளுடன் நட்பை பலப்படுத்திக்கொள்வது என்ற இரட்டை அணுகுமுறையில்'' பாகிஸ்தான் சிக்கிக்கொண்டது என்று பாதுகாப்புத் துறை ஆய்வாளரும், Military Inc: Inside Pakistan's Military Economy என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஆயிஷா சித்திக்கா கூறுகிறார்.

2014ல் வடக்கு வாஜிரிஸ்தானில் பாகிஸ்தான் புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது. அதன் மூலம் பயங்கரவாத குழுக்களுக்கும், அவர்களின் பாதுகாப்பான புகலிடங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. அதன் பலனாக நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்தது.

`தாலிபான்களும் ராணுவமும் ஒரே விஷயத்தை தான் செய்கின்றன'

2001ல் மலைவாழ் பழங்குடிகள் பகுதிகளுக்கு தாலிபான்கள் வந்தபோது, உள்ளூர் மக்கள் எச்சரிக்கையுடன்தான் அவர்களை வரவேற்றனர். ஆனால் கடுமையான மதக்கோட்பாடுகளை அமல் செய்து பழங்குடி சமூகத்தை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தததும், அரைமனதுடன் தரப்பட்ட வரவேற்பு அதிருப்தியாக மாறியது.

பழங்குடிகளுக்கும் - தாலிபன்களுக்குமான முதல் கட்ட உறவின்போது, உள்ளூர் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் தீவிரவாதக் குழுக்களில் சேர்ந்தனர். இதன் மூலம் ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட பழங்குடி குழுக்களின் பகையுணர்ச்சிகளும் தீவிரவாதிகளின் வலைப் பின்னலுக்குள் நுழைந்தது. அதன் பிறகு நடந்த குழுச் சண்டைகளில் இந்த உண்மை வெளிப்பட்டது.

இரண்டாவது கட்டத்தில், பழங்குடிகளை தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்த பழங்குடிச் சமூக மூத்தோர்களை அழித்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தாலிபன்கள் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டில் இருந்து குறைந்தபட்சம் 1,000 பழங்குடி சமூக மூத்தவர்களை தீவிரவாதிகள் கொலை செய்திருக்கிறார்கள். சில அரசு சாரா குழுக்கள் இந்த எண்ணிக்கை சுமார் 2,000 இருக்கும் என்று கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வாஜிரிஸ்தான் ஒரு கரடுமுரடான, வாழ்வதற்கு கடுமையான மலைப் பகுதி - வெளியாள்கள், பத்திரிகையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

2007 ஜூலை மாதம் வடக்கு வாஜிரிஸ்தானில் அவ்வாறு நடந்த ஒரு படுகொலை, பழங்குடிகளை அடக்கி வைக்கும் வலிமை எந்த அளவுக்கு தீவிரவாதிகளுக்கு இருந்தது என்பதற்கான அடையாளமாக உள்ளது.

``அவர்கள் எனது சகோதரரை கடத்திச் சென்று கொலை செய்தபோது, எங்கள் பகுதியில் பழங்குடிகள் வலுவாக இருந்தார்கள். எங்கள் மக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட ராணுவம் அனுமதி கொடுத்த பிறகு, எங்கள் முதுகெலும்பை அவர்கள் உடைத்துவிட்டார்கள்'' என்று வடக்கு வாஜிரிஸ்தானில் ரஜ்மாக் பகுதியைச் சேர்ந்த வாஜிர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த முகமது அமீன் தெரிவித்தார்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மறுநாள் அவருடைய சகோதரரின் உடல் ஒரு லாரியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை முகமது அமீனும் மற்ற மலைவாழ் மக்களும் கண்டுபிடித்து தாக்கியுள்ளனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமீன் மகன், உறவினர் அசதுல்லா ஆகியோரும் அங்கிருந்த தாலிபன் தீவிரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

Image caption அமீனின் மகன் அசதுல்லா

பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த ரஜ்மாக் முகாமில் ராணுவத்தினரிடம் மலைவாழ் மக்கள் இதுபற்றி முறையிட்டு, தாலிபான்களின் வன்முறைகளை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதற்குப் பதிலடி கொடுப்போம் என்று அந்த நகரில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தபோது, மலைவாழ் மக்கள் வெறுப்படைந்தனர்.

ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. ``அவ்வப்போது தாலிபன்களும், ராணுவமும் மோதிக்கொண்டாலும், இரு தரப்பும் ஒரே விஷயத்தைத்தான் செய்கின்றன'' என்று எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் சொல்கிறார் அமீன்.

உள்ளூர் மக்களிடம் பாதுகாப்புப் படையினர் கொடூரமாக நடந்து கொண்ட பல சம்பவங்களை பி.டி.எம். இயக்கத்தினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

உதாரணத்துக்கு, 2016 மே மாதம் வடக்கு வாஜிரிஸ்தானில் மடாக்கெல் பகுதியில் ராணுவ முகாம் மீது ஒரு தாக்குதல் நடந்தது. அப்போது அந்தக் கிராமத்தை ராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக சுற்றி வளைத்து, வீடு வீடாக ஆண்களைத் தேடிப் பிடித்தனர்.

ஒவ்வொருவரையும் ராணுவத்தினர் தடிகளால் அடித்தனர் என்றும், அப்போது அழுத குழந்தைகளின் வாயில் சேறு வைத்து அடைத்தார்கள் என்றும், சம்பவங்களை அருகில் உள்ள கோதுமை வயலில் மறைந்திருந்து பார்த்த நேரடி சாட்சியாக இருந்த ஒருவர் பி.பி.சி.யிடம் தெரிவித்தார். அவருடைய சகோதரரையும் ராணுவத்தினர் பிடித்துச் சென்றனர்.

இந்தக் கொடுமைகளின்போது உயிரிழந்த இருவரில் கர்ப்பிணி ஒருவரும் அடங்குவார் என்று, விடியோ சாட்சியம் அளித்த அந்தப் பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார். குறைந்தது ஓர் ஆண் காணாமல் போயிருக்கிறார்.

நெஞ்சை உறைய வைக்கும் சத்தர்ஜான் கதை

உயிருடன் தப்பியவர்களின் கதைகள் கண்ணீரை வரவைப்பவை. டேரா இஸ்மாயில் கான் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் சிந்து நதிக்குத் தெற்கே உள்ள ராமக் நகரில் நான் சத்தர்ஜான் மசூத் என்பவரை சந்தித்தேன்.

ஒரு வெள்ளை முகாமில் அவரது இரண்டு குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே, தேனீர் அருந்திக்கொண்டே நாங்கள் பேசினோம்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு மாலைப் பொழுதில் தெற்கு வாஜிரிஸ்தானில் ஷக்தோய் என்ற இடத்தில் இருந்த ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் சுட்டார்கள். அருகில் உள்ள கிராமத்தில் சந்தேகத்துக்குரியவர்களை பிடித்து அவர்களில் இரண்டு பேரை சுட்டுக்கொன்று ராணுவம் பதிலடி தந்தது.

மறு நாள், ஏப்ரல் 21ம் தேதி, சத்தர்ஜான் கிராமம் வரையில் பள்ளத்தாக்கில் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தியது ராணுவம். அப்போது அவரது வீட்டுக்குப் பின்புறம் உள்ள மலையில் ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.

"அப்போது வீட்டில் என் சகோதரர் இடர்ஜான், அவரது மனைவி மற்றும் இரண்டு மருமகள்கள் மட்டுமே அப்போது வீட்டில் இருந்தனர்" என்கிறார் சத்தர்ஜான்.

சிப்பாய்கள் கதவைத் தட்டினர். சகோதரர் கதவைத் திறந்தார். உடனே அவரைப் பிடித்து கட்டிவைத்து, கண்களையும் கட்டிவிட்டனர். குடும்பத்தின் பிற ஆண்கள் எங்கே என்று அவர்கள் கேட்டதுடன், பள்ளத்தாக்கின் பிற இடங்களில் இருந்த இடர்ஜானின் நான்கு மகன்களும் சுற்றிவளைக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர்கள் நால்வரும் தாக்கப்பட்டதாகவும், ரெஸ்வர்ஜான் என்ற உறவினர் தலையில் ஒரு பெரிய அடியை வாங்கியதாகவும் பிறகு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சத்தர்ஜானிடம் கூறியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒரு ராணுவ டிரக்கில் ஏற்றப்பட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ரெஸ்வர்ஜான் ஏற்கெனவே கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் இருந்ததாகவும், அவரால் தாமாக உட்காரமுடியவில்லை என்றும் அந்த வாகனத்தின் டிரைவர் பிறகு சத்தர்ஜானிடம் தெரிவித்துள்ளார். "எனவே, அவரை முகாமுக்கு கொண்டுசெல்லவேண்டாம் என்று முடிவு செய்த ராணுவத்தினர் வண்டியை நிறுத்தி, ரெஸ்வர்ஜான் தலையில் சுட்டுக் கொன்று உடலை சாலையில் வீசிச் சென்றனர்" என்று அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.

சத்தர்ஜான் அப்போது துபாயில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தார். நடந்ததைக் கேள்விப்பட்டு அவர் வீட்டுக்குப் புறப்பட்டார்.

விமானம் பிடித்து, பிறகு பஸ் பிடித்து, பிறகு 15 மணி நேரம் நடந்து ஏப்ரல் 23-ம் தேதி அன்று ரெஸ்வர்ஜான் உடல் காணப்பட்ட ஊருக்கு வந்து சேர்ந்தார்.

ஊரடங்கு அமலில் இருந்ததால் சடலத்தைத் தூக்கிக்கொண்டு பள்ளத்தாக்கைக் கடந்து அவரது சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்பதால் மலையிலேயே உடலை அடக்கம் செய்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பிறகு தனது சொந்த கிராமத்துக்கு அவர் நடந்து சென்றிருக்கிறார். அவருடைய வீட்டில் யாருமே இல்லை. சத்தர்ஜானின் சகோதரர் மற்றும் உறவினர்களின் மனைவியரை உறவினர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.

ஊரடங்கு காரணமாக வெளியில் செல்ல முடியாது என்பதாலும், அந்தப் பகுதியில் செல்போன் வசதி இல்லை என்பதாலும், நடந்த விஷயங்கள் பற்றி அந்தப் பெண்களுக்கு ஏதும் தெரிந்திருக்காது என்பது சத்தர்ஜானுக்குத் தெரியும்.

எப்படி அவர்களுக்குச் சொல்வது?

சகோதரரின் மனைவியை அவர் சந்தித்தபோது, தனது கணவரை ராணுவத்தினர் அழைத்துச் சென்றது மட்டும் தமக்குத் தெரியும் என்றும், இளையவர்களைக் காணவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

``சகோதரர் மனைவியிடம் இவற்றைக் கூறலாமா என்று எனக்கு இரண்டு மனது இருந்தது. ஆனால், எனது சகோதரரும், பையன்களும் திரும்பி வந்த பிறகு, ரெஸ்வர்ஜான் பற்றிய கெட்ட செய்தியை சொல்வது எளிதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தக் காரணமும் இல்லை என்பதால், அவர்களை ராணுவம் விடுவித்துவிடும் என்று நினைத்தேன்'' என்று சட்டர்ஜன் கூறினார்.

எனவே அவர் ஒரு கதையை உருவாக்கினார். தங்களது வீட்டில் ராணுவத்தினர் சோதனை செய்தபோது, பையன்கள் தெற்கு பாகிஸ்தானில் தொலைவில் உள்ள கராச்சிக்கு பாதுகாப்பாக சென்றுவிட்டார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணின் கணவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார்.

எண்ணாயிரம் பேர் எங்கே?

2015 ஏப்ரல் 26 ஆம் தேதி ரமாக்கிற்கு தன் குடும்பத்தை அழைத்துச் சென்றார். அதன் பிறகு தன்னுடைய சகோதரர் மற்றும் மூன்று உறவினர்களைப் பற்றி ராணுவத்திடம் இருந்து அவருக்கு எந்தத் தகவலும் வரவில்லை. வாரங்கள் மாதங்களாயின, மாதங்கள் வருடங்களாகிவிட்டன.

அவர் மட்டும் தான் என்றில்லை. 2002ல் இருந்து பிடித்துச்செல்லப்பட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தங்கள் கிராமத்துக்கு ஏன் போக முடியவில்லை என்று குடும்பத்துப் பெண்கள் கேட்கும் போதெல்லாம் சத்தர்ஜான் ஏதாவது பதில் கூறி சமாளித்து வருகிறார்.

``ஷாக்டோய் கிராமத்தில் நமது வீட்டை ராணுவத்தினர் இடித்துவிட்டார்கள் என்று அவர்களிடம் நான் கூறி வருகிறேன். பாதியளவுக்கு அதுதான் உண்மையும்கூட. ஆனால், நாங்கள் அங்கு சென்றால் அருகில் வசிப்பவர்கள் துக்கம் விசாரிக்க வீட்டுக்கு வருவார்கள், அப்போது அவர்களுக்குத் தெரிந்துவிடும் என்பது தான் உண்மையான காரணம்'' என்று அவர் தெரிவிக்கிறார்.

தன்னுடைய சகோதரரும், உறவினர்களும் சிறையில் இருக்கிறார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா என்று தெரிந்து கொண்டால் நல்லது என்று அவர் கூறுகிறார். ஆனால் எதுவுமே தெரியாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்கிறார்.

``என் சகோதரர் மனைவியிடம் அவருடைய மகன்களைக் காணவில்லை என்றோ அல்லது இறந்துவிட்டார்கள் என்றோ என்னால் சொல்ல முடியாது. இரு இளம் மனைவியரிடம் அவர்கள் விதவையாகிவிட்டார்கள் என்று என்னால் சொல்ல முடியாது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

தனிப்பட்ட இந்தக் கதைகள் அதிர்ச்சி தரக்கூடியவை. ஆனால் இவை தனிப்பட்ட கதைகள் அல்ல. மலைவாழ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் இதேபோன்ற கதைகளைச் சொல்வார்கள் என்று பி.டி.எம். அமைப்பு கூறுகிறது.

ஆனால் அவர்கள் பற்றி அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை.

உலகின் பார்வையில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் நடத்திய நீண்ட போரின் பின்விளைவுகள் இவை. ஆப்கன் எல்லையில் பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த மோதல்கள் மறைக்கப்பட்ட தகவல்களாக உள்ளன.

கடந்த ஆண்டு இவற்றை பி.டி.எம். வெளிப்படுத்தியபோது, அவர்களின் ஊடக செய்திப் பிரிவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவை ஏற்காத ஊடகத் துறையினர் கடும் அச்சுறுத்தலுக்கும், நிதி நெருக்கடிகளுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

பி.டி.எம். அமைப்பின் தேசபக்தியை ராணுவம் வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள பகையுள்ள உளவு முகமைகளுடன் இந்த அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறது என்று ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் மனித உரிமை மீறல் பற்றி ஆவணங்கள் தயாரித்த, அமைப்பின் சமூக வலைதள பிரசாரத்தை நடத்தி வந்த பி.டி.எம். தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டு காலம் வாய்மூடிக் கிடந்த பிறகு, கடைசியாக குரல் கொடுத்த ஆர்வலர்கள் நடத்தப்படும் விதத்தைப் பார்தால், மோதல்களில் துன்புறும் மக்கள் நீதிக்காக எவ்வளவு பெரிய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெளிவாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :