இந்திய, சீன மக்கள்தொகை அதிகரிப்பை சூழல் மாசுக்கு காரணமாக்கும் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

Donald Trump படத்தின் காப்புரிமை Getty Images

தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

புவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட இரண்டு டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.

அது அமெரிக்க தொழில் நலனுக்கு எதிரானது என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பலவும் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின் ரத்து செய்யப்பட்டன.

கடந்த நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள் வெளியேற்றிய கரியமில மற்றும் பசுமை இல்ல வாயுக்களே பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வளரும் நாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறி வருகின்றன.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தி கட்டாயம் என்பது மாற்றப்பட்டாலும் மும்மொழி கொள்கை என்பதுவும் மறைமுகமாக இந்தி திணிப்புதான் என்றும், தமிழகத்தில் தற்போதுள்ள இருமொழிக் கொள்கையே போதுமானது என்றும் தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன.

இந்த எதிர்ப்பு தமிழகத்தில் வலுவாக இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் தொடர்கிறது.

விரிவாகப் படிக்க - இந்தித் திணிப்பு எதிர்ப்பு: மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

மாணவி தற்கொலை - நீட் தேர்வே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

திருப்பூரில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ரித்தஸ்ரீ என்ற மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 497 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தோல்வியுற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ரித்துஸ்ரீயின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விரிவாகப் படிக்க - திருப்பூர் மாணவி தற்கொலை: நீட் தேர்வே காரணமா?

இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் பகுதியில் உள்ள இமயமலையின் சிறிய மான் இனமான ஹங்குல், ஆந்திரப்பிரதேசத்தில் விஷத்தன்மை வாய்ந்த கூட்டி டாரன்டுலா என்ற சிலந்தி, தமிழகத்தில் வாச்செல்லியா போலெய் என்ற அவரை இனம் போன்றவை இந்தியாவைச் சேர்ந்தவை என்பதைத் தாண்டி அவற்றுக்குள் உள்ள பொதுவான அம்சம் என்ன?

சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி பார்த்தால், இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த இனங்கள் அழிந்து வரலாற்றில் படிப்பதாக மட்டுமே ஆகிவிடக் கூடிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது.

விரிவாகப் படிக்க - உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

படத்தின் காப்புரிமை AFP

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக புதன்கிழமை விளையாடிய இந்தியா, ரோகித் ஷர்மா சதம் அடிக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டவது இன்னிங்சில் 47.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்து இந்தியா வெற்றிபெற்றது. இதில் 22 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்குகின்றன. ஆட்ட நாயகன் விருதை ரோகித் ஷர்மா பெற்றார்.

விரிவாகப் படிக்க - உலகக்கோப்பை 2019: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :