85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர் மற்றும் பிற செய்திகள்

ஆண் செவிலியர் படத்தின் காப்புரிமை AFP

வடக்கு ஜெர்மனியில் இரு வேறு மருத்துவமனைகளில் 85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீல்ஸ் ஹோகெலின் இந்த கொலைகள் ஒரு புரியாத புதிராக இருப்பதாக நீதிபதி செபாஸ்டியன் புர்மன் விவரித்துள்ளார்.

ஹோகெல் ஏற்கனவே தாம் செய்த இரண்டு கொலைகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை தமது நோயாளிகளுக்கு இதய நோய் தொடர்பான மருந்துகள் கொடுப்பதை நிர்வகித்து வந்தார்.

42 வயதாகும் ஹோகெல், தாம் செய்த செயலுக்காக இறந்தவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பத்து லட்சம் பேரை குடியேற்றும்படி கனடா பிற நாடுகளை வேண்டுகிறதா? #BBCRealityCheck

படத்தின் காப்புரிமை Getty Images

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 லட்சம் குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

நைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இந்த குடியேறிகள் எதிர்பார்க்கப்படுவதாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தெரிவிக்கும் கட்டுரைகள் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

விரிவாக படிக்க: 10 லட்சம் பேரை குடியேற்றும்படி கனடா பிற நாடுகளை வேண்டுகிறதா?

புதின் - ஷி ஜின்பிங் சந்திப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகளுடனான உறவு மோசமடைந்ததை அடுத்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக கிழக்கத்திய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது

விரிவாக படிக்க: சீனா - ரஷ்யா இடையே கையெழுத்தாகும் வணிக, ராணுவ ஒப்பந்தங்கள்

பால்வினை நோய்த் தொற்று: 10 லட்சம் பேர் பாதிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

உலகில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோனோரியா, சிபிலிஸ், ச்லாமைதியா, ட்ரைகோமோனியாசிஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2012 முதல் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவகை கோனோரியா நோய் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்பதே சமீபத்திய கவலைகளுக்கு காரணம்.

விரிவாக படிக்க: 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று

இலங்கை ஜனாதிபதி மீது போலீஸ் மா அதிபர் புகார்

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய, ஜனாதிபதி கூறியதாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விரிவாக படிக்க: இலங்கை தமிழர்கள் காணாமல் போன விவகாரம்: ஜனாதிபதி மீது போலீஸ் மா அதிபர் புகார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :