பெண் ஒருபாலுறவு இணையர் மீது தாக்குதல் நடத்திய பதின்வயது இளைஞர்கள்

பெண் ஒரு பாலுறவு இணையினர் மீது லண்டனில் தாக்குதல் படத்தின் காப்புரிமை Facebook

லண்டன் நகரில் பேருந்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த பெண் ஒருபாலுறவு இணையர் ஒருவரை ஒருவர் முத்தமிடச் சொல்லி வற்புறுத்தியதுடன், அவர்களை ரத்தம் வரும் அளவுக்கு தாக்கிய 15 முதல் 18 வயதிற்குட்பட்ட ஐந்து பதின்வயது இளைஞர்களை அந்நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லண்டன் நகரில் இரவு பேருந்து ஒன்றின் மாடியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தன்னையும் தனது இணையான கிறிஸ் மீதும் இந்த இளைஞர்கள் தாக்குதல் தொடுத்ததாக 28 வயதாகும் மெலானியா கெய்மோனட் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்கள் இருவரும் ஒருபாலுறவு இணையினர் என்பதை தெரிந்துகொண்ட அந்த பதின்வயது இளைஞர் குழுவினர், இவர்களை நோக்கி பாலியல் ரீதியாக சைகைகளை காண்பிக்க தொடங்கியதுடன், ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ள சொல்லி தொந்தரவு செய்யத் தொடங்கினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட ஐந்து பதின்வயது இளைஞர்களை கைது செய்துள்ளதாக லண்டன் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் திருட்டு, உடல் ரீதியிலான தாக்குதல் தொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை SFD
Image caption மெலானியா கெய்மோனட்

கடந்த 30ஆம் தேதி நள்ளிரவில் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக பிபிசி ரேடியோ 4இன் 'வேர்ல்ட் அட் ஒன்' எனும் நிகழ்ச்சியில் பேசிய கெய்மோனட் தெரிவித்துள்ளார். தாங்கள் இதற்கு முன்னர் 'நிறைய வார்த்தை ரீதியிலான வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளதாக' கூறியுள்ளார்.

தனது பாலின அடையாளத்தை முதலாக கொண்டு, தான் இதற்கு முன்பு தாக்குதலுக்கு உள்ளானது இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ் தற்போது வடக்கு லண்டன் பகுதியில் வசித்து வருகிறார். அவரிடம், இந்த தாக்குதலுக்கு பின்னர் பொது இடங்களில் அவரது எண்ணத்திற்கேற்றவாறு செயல்படுவதில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று கேட்டபோது, "பொதுவெளியில் நான் ஒரு பாலுறவுக்காரர் என்பதை வெளிப்படுத்துவதில் எனக்கு எவ்வித பயமும் இல்லை," என்று கூறினார்.

"எனது கோபம் இன்னும் தணியவில்லை. அந்த மோசமான சம்பவம், அசாதாரணமான ஒன்றல்ல," என்று கிறிஸ் மேலும் கூறினார்.

2014ஆம் ஆண்டு லண்டனில் ஒருபாலுறவு கொள்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 1,488ஆக இருந்த நிலையில், அது கடந்த ஆண்டு 2,308ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையின் தரவு தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்