பல கோடி மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுத்தவரின் கதை

உலகிற்கு சோறு போட உதவியவர் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நார்மன் போர்லாக்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், புதிதாகத் திருமணமான கேத்தியும் கேப்பி ஜோன்ஸும் அமெரிக்காவில் கனெக்டிகட்டை விட்டு வெளியேறி, வட மேற்கு மெக்சிகோவில் யாக்கி பள்ளத்தாக்கில் விவசாயிகளாக புதிய வாழ்வைத் தொடங்கினர்.

அரிசோனா எல்லையில் இருந்து சில நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அது பெரிதும் அறியப்படாத வறண்ட, புழுதியான பகுதி.

கேப்பி 1931ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில், கேத்தி அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார். அப்போது அவருக்கு அருகில் புதிதாக ஒருவர் குடியேறினார்.

யாக்கி பள்ளத்தாக்கு பரிசோதனை நிலையம், கல் தூண்கள் மற்றும் அறிவு நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட பாசனக் கால்வாய்களைக் கொண்ட பெரிய வேளாண்மை ஆராய்ச்சி மையம்.

சில காலத்துக்கு அந்த மையத்தில் கால்நடைகள், ஆடு மற்றும் பன்றிகள் வளர்க்கப்பட்டன. ஆரஞ்சு, அத்தி, திராட்சை சாகுபடி நடைபெற்றது.

ஆனால் 1945வாக்கில், பயிர்கள் அதிகம் வளர்ந்துவிட்டன. வேலிகள் சாய்ந்துவிட்டன. ஜன்னல்கள் உடைந்துவிட்டன. ஆராய்ச்சி நிலையம் முழுக்க எலிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது.

எனவே, சிதிலமடைந்த இந்த இடத்தில் இளம் அமெரிக்கர் ஒருவர் மின்சாரம், கழிவுநீர் வசதி அல்லது ஓடுகிற தண்ணீர் இல்லாத நிலையில் முகாம் அமைக்கப் போவதாக எழுந்த வினோதமான புரளியைக் கேட்டு, அதுபற்றி விசாரிக்கக் கிளம்பிார் கேத்தி.

அங்கு ராக்பெல்லர் அறக்கட்டளையைச் சேர்ந்த நார்மன் இ.போர்லாக் என்பவரை கேத்தி சந்தித்தார். பல பயிர்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தண்டு அரிப்பு நோயைத் தாங்கக் கூடிய கோதுமை வகையை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் இளவேனில் காலத்தில் நீங்கள் பயிரிட்டு, கார்காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். இங்கே மாறுபட்ட பருவநிலையை, சூழ்நிலைக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கார்காலத்தில் பயிரிட்டு, இளவேனில் காலத்தில் அறுவடை செய்வதற்கும் அவர் திட்டமிட்டார். அதற்காக வெவ்வேறு வகை கோதுமைகளை உருவாக்க முற்பட்டார்.

இருந்தபோதிலும், அந்தப் பகுதியில் பணியாற்ற அறக்கட்டளைக்கு அனுமதி இல்லை. அதனால் அதிகாரப்பூர்வமாக அவரால் அங்கு இருக்க முடியவில்லை.

அதாவது, அதை வாழ்வதற்குரிய இடமாக மாற்றுவதற்கு இயந்திரங்களோ, வேறு உதவிகளோ அவருக்கு கிடைக்காது. ஆனால் தனது மனைவி மார்க்கரெட், மகள் ஜீனி ஆகியோரை மெக்சிகோ சிட்டியில் விட்டுவிட்டு சென்றிருந்தார்.

''மெக்சிகோவில் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டதன் மூலம் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதைப் போல அடிக்கடி எனக்குத் தோன்றும்,'' என்று நார்மன் போர்லாக் ஆன் வோர்ல்டு ஹங்கர் என்ற தன்னுடைய புத்தகத்தில் முடிவுரையில் அவர் எழுதியுள்ளார்.

ஆனால், நேரடியாக அவர் அனுபவித்த பட்டினி என்ற கொடுமையை நீக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ''மிக மோசமான மன அழுத்தத்தின் மூலம் உருவானவன் நான்'' என்று 2002ம் ஆண்டில் டல்லாஸ் அப்சர்வர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இளைஞன் மீது பரிதாபம் கொண்ட கேத்தி, அவனுக்கு ஸ்பானிய மொழி கற்றுக் கொடுத்து, வாரந்தோறும் சாப்பிட வரவழைத்து, குளிக்கவும் துணிகளை துவைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார். கேத்தியின் உதவி இல்லாமல் போயிருந்தால் உயிர் பிழைத்திருக்க மாட்டேன் என்று பிற்காலத்தில் அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அருகில் உள்ள கியுடாட் அப்ரோகான் என்ற நகருக்கு அவரை கேத்தி அழைத்துச் சென்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகரின் பிரதான தெருவுக்கு அவரை பெருமைப்படுத்தும் வகையில் டாக்டர் நார்மன் இ.போர்லாக் தெரு என பெயரிடப்பட்டது.

அதே ஆண்டில், 1968-ல், ஸ்டான்ட்போர்டு பல்கலைக்கழக உயிரியலாளர் பால் எர்லிக் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

'தி பாப்புலேஷன் பாம்' என்ற அந்தப் புத்தகத்தில், இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏழை நாடுகளில் உணவுப் பொருள் உற்பத்தியைவிட மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது என்று எர்லிக் கூறியிருந்தார்.

''லட்சக் கணக்கானவர்கள் பட்டினியால் மரணம் அடைவார்கள்,'' என்று 1970களில் அவர் கணித்துக் கூறினார்.

நல்ல வேளையாக அவருடைய கணிப்பு பொய்யாகிவிட்டது. ஏனென்றால், நார்மன் போர்லாக் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரியாது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிற்காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற போர்லாக் பல ஆண்டுகளை மெக்சிகோ சிட்டிக்கும் யாக்கி பள்ளத்தாக்கு பகுதிக்குமான பயணத்தில் செலவிட்டார். பல ஆயிரம் வகையான கோதுமை பயிர்களை அவர் உருவாக்கினார்.

அவற்றின் சிறப்புக் கூறுகளை கூர்ந்து கவனித்து வந்தார். ஒரு வகை பயிரில் தண்டு அரிப்பு நோயை தாக்குப்பிடிக்க முடியும் என்றால், மற்றொன்றில் நல்ல விளைச்சல் வரும். ஆனால் வேறு குறைபாடு இருக்கும். இப்படி மாறி மாறி சோதனைகள் செய்தார்.

எந்த மரபணுக்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறியும் வகையில் கோதுமையின் டி.என்.ஏ. பரிசோதனை செய்யும் வசதி அவரிடம் இல்லை. அப்போது தொழில்நுட்ப வசதிகள் அவ்வளவாக இல்லை.

ஆனால், நல்ல குணாதிசயங்களைக் கொண்ட வெவ்வேறு வகை கோதுமை பயிர்களை ஒட்டு ரகமாக அவரால் உருவாக்க முடிந்தது. ஒரு ஒட்டுரகத்தில் எல்லாவிதமான நல்ல குணாதிசயங்களும் இருக்கும், கெட்டது எதுவும் இருக்காது என்று அவர் நம்பினார்.

அது இன்னல் மிகுந்த பணி. ஆனால் கடைசியில் அவருடைய முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

புதிதாக ''குள்ள ரக'' கோதுமைப் பயிர்களை அவர் உருவாக்கினார். அது தண்டு அரிப்பைத் தாங்குவதாகவும், நல்ல விளைச்சல் தருவதாகவும், முக்கியமாக சிறிய தண்டு கொண்டதாகவும், அதனால் காற்றில் சாய்ந்துவிடாமல் இருப்பதாகவும் இருந்தது.

மேற்கொண்டு சோதனைகள் நடத்தியதில் விளைச்சலை எப்படி அதிகபட்ச அளவுக்கு கொண்டு செல்வது என்று கண்டறிந்தார். எவ்வளவு இடைவெளியில் பயிரிடுவது, எவ்வளவு ஆழம், எவ்வளவு உரம் போட வேண்டும், எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று அவர் கண்டறிந்தார்.

1960வாக்கில், இதுபற்றி தகவல் பரப்புவதற்காக அவர் உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். அது எளிதானதாக இருக்கவில்லை.

அவருடைய கோதுமையை விளைவிக்க தாங்கள் முயற்சி செய்தபோது, விளைச்சல் குறைவாக இருந்தது என்று பாகிஸ்தானில் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கூறினார்.

தன்னுடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் அதிக ஆழமாக, அதிக இடைவெளி விட்டு, உரம் போடாமல் அல்லது களை எடுக்காமல் அவர்கள் சாகுபடி செய்ததை போர்லாக் கண்டறிந்து கேள்வி எழுப்பினார். அந்த இயக்குநர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். ''பாகிஸ்தானில் இப்படித்தான் கோதுமை சாகுபடி செய்கிறீர்களா?'' என்று போர்லாக் கேட்டார்.

ஒரு புரட்சி ஏற்படுவது சாத்தியம் என்று பலராலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அரை நூற்றாண்டு காலமாக பாகிஸ்தானின் விளைச்சல் ஒரே மாதிரியாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு 360 கிலோவுக்கு (800 பவுண்டுகள்) அதிகமாக உயரவில்லை. அந்த காலக்கட்டத்தில் மெக்சிகோ விவசாயிகள் மூன்று மடங்கிற்கும் அதிகமான உற்பத்தியை எட்டிவிட்டனர்.

எனவே மெக்சிகோ பாராட்டுக்குரியதா? இல்லை என்கிறார் முன்னணி கல்வியாளர். ''பாகிஸ்தானின் கோதுமை உற்பத்தி ஒருபோதும் உயராது என்பதை இந்த அளவுகள் காட்டுகின்றன,'' என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் சொல்வதைப் போல செய்யாதவர்களை போர்லாக் குற்றம் கூறுவார், அது யாராக இருந்தாலும் அவர் கவலைப்பட்டது கிடையாது. இந்தியாவில் துணைப் பிரதமருடன் கடும் வாக்குவாதத்தில்கூட அவர் ஈடுபட்டிருக்கிறார்.

கடைசியில் அவருடைய நீண்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. வளரும் நாடுகள் போர்லாக்கின் விதைகளை இறக்குமதி செய்து, அவருடைய முறைகளைப் பின்பற்றத் தொடங்கின. 1960களில் இருந்து 2000 வரையில் அந்த நாடுகளின கோதுமை உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

சோளம் மற்றும் அரிசியிலும் இதேபோன்ற முயற்சிகள் நடைபெற்றன. அது ''பசுமைப் புரட்சி'' என்று அழைக்கப்பட்டது. பெரிய அளவில் பட்டினி ஏற்படும் என்று எர்லிக் ஆருடம் கூறினார். ஆனால் உலகின் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், உணவு உற்பத்தி போதுமானதாக இருக்கிறது.

மேலும் அதிக மக்கள் தொகையால் உணவுப் பொருள் விநியோகம் பாதிக்கும் ன்ற கவலை முழுமையாக போய்விடவில்லை. பொருளாதாரத்தின் மிகவும் பழமையான கேள்விகளில் அதுவும் ஒன்று. உலகின் முதலாவது 'அரசியல் பொருளாதார' பேராசிரியர் தாமஸ் ராபர்ட் மால்தஸ் காலத்தில் இருந்தே இந்தக் கேள்வி இருக்கிறது.

1978ல் மக்கள் தொகையின் கோட்பாடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை மால்தூஸ் வெளியிட்டார். மக்கள் தொகை இரண்டு, நான்கு, எட்டு என்ற வேகத்தில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது என்றும், உணவு உற்பத்தி அந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை என்றும் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

உணவு உற்பத்தியைவிட, அதிகமான மக்கள் தொகை இருக்கும் காலம் வரும் என்றும், அப்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மக்களுக்கு வசதி வரும்போது, குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முனைவார்கள் என்ற உண்மை குறித்து மால்தூஸ் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துவிட்டது. அது நமக்கு மகிழ்ச்சிக்குரியதாகிவிட்டது.

படத்தின் காப்புரிமை BRIAN STAUFFER

உண்மையில் தனது கணிப்புகளை பால் எல்ரிக் கூறிய 1968ல் உலக மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகமும் குறையத் தொடங்கியது. 1968ல் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கம் அதிகபட்சமாக 2.09% என்றிருந்த நிலையில், 2018ல் அது 10.09% என்று குறைந்திருக்கிறது.

நார்மன் போர்லாக் அடையாளப்படுத்தும் மனிதனின் புத்திகூர்மை என்ற விஷயத்தை மால்தஸ், எர்லிக் ஆகியோர் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்.

ஆனால் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துள்ள நிலையில், இந்த நூற்றாண்டு இறுதிக்குள் இன்னும் சில நூறு கோடி அளவுக்கு மக்கள் தொகை பெருகும் என்று இப்போதும் ஐ.நா. கணித்துக் கூறுகிறது.

மக்கள் தொகைப் பெருக்க வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் உணவு உற்பத்தியின் வேகம் இல்லை என சில நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னேற்றத்தின் வேகம் குறைந்துவிட்டது. பிரச்சனைகள் அதிகமாகின்றன. பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு என பிரச்சனைகள் அதிகமாகின்றன.

பசுமைப் புரட்சி இந்தப் பிரச்சனைகளை மோசமாக்கியுள்ளது. இது வறுமையின் தீவிரத்தை அதிகரித்துவிட்டது என்று சிலர் சொல்கின்றனர். உரங்கள் மற்றும் பாசன செலவுகளை ஏழை விவசாயிகளால் தாக்குபிடிக்க முடியவில்லை.

இப்போது 80 வயதைக் கடந்துவிட்ட பால் எர்லிக், தனது காலத்து சூழ்நிலையில் தம்முடைய கணிப்புகள் பெரும் அளவில் தவறாகப் போய்விடவில்லை என்று கூறுகிறார். அநேகமாக மால்தஸ் இப்போது உயிருடன் இருந்தாலும் அதையே தான் சொல்லியிருபபார் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், இன்னும் அதிகமான மானிட புத்திசாலித்தனம் இதற்கு விடையாக வராதா?

மரபணு மாற்றங்கள் சாத்தியமான நிலையில், நோய்களை, பூச்சிகளை, களைக்கொல்லிகளைத் தாக்குபிடிப்பதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாக உள்ளது.

அது விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும், அது நேரடி இலக்கு கிடையாது.

அது மாறத் தொடங்கி இருக்கிறது. CRISPR என்ற மரபணு மாற்றும் வசதியை பயன்படுத்துவது பற்றி வேளாண் நிபுணர்கள் இப்போதுதான் ஆராயத் தொடங்கி இருக்கிறார்கள். நார்மன் போர்லாக் செய்ததை மிக வேகமாக செய்வதாக இது இருக்கும்.

போர்லாக்கை பொருத்தவரை, தனது பணிகள் ஏற்படுத்திய பிரச்சனைகள் சரியாகக் கையாளப்படவில்லை, ஆனால் எளிதான ஒரு கேள்வியைக் கேட்கிறார் - அதிக உணவு உற்பத்தி செய்வதற்கு முழுமையற்ற வழிமுறைகளைக் கையாள்வீர்களா அல்லது மக்களை பட்டினி போடுவீர்களா என்று கேட்கிறார்.

வரக்கூடிய பல பத்தாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை நாம் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்