செளதி அரேபியா விமான நிலையத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல் மற்றும் பிற செய்திகள்

கிளர்ச்சி குழு இதுவரை எல்லைத் தாண்டி பலமுறை தாக்குதல் நடத்தியிருக்கிறது படத்தின் காப்புரிமை AL-MASIRAH TV
Image caption கிளர்ச்சி குழு இதுவரை எல்லைத் தாண்டி பலமுறை தாக்குதல் நடத்தியிருக்கிறது

தென் மேற்கு செளதி அரேபியாவில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையத்தில் யேமனை சேர்ந்த ஹூதி கிளர்ச்சிக் குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது பொதுமக்களில் குறைந்தது 26 பேர் காயமடைந்திருப்பதாக செளதி ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, புதன்கிழமை காலை அபா விமான நிலையத்திலுள்ள வருகை பகுதியிலிருக்கும் ஒரு ஹால் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் இரு குழந்தைகளும் அடங்குவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையம் மீது தாழ்வாக பறக்கக்கூடிய இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஒரு நவீன வழிகாட்டு ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கிளர்ச்சி குழு கூறியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக ஹூதி கிளர்ச்சி குழுவுடன் யேமன் அரசு நடத்திவரும் போரில் செளதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு யேமனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் யேமனில் வெடித்த மோதலில் பெரும் சேதம் ஏற்பட்டது அப்போது, கிளர்ச்சி குழுவினர் நாட்டின் மேற்கு பகுதியை ஒட்டிய பெரும்பாலான இடங்களை கைப்பற்றினர். இதன் காரணமாக, யேமன் அதிபர் அபெட்ராபு மன்சூர் ஹாதி நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு தப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட நிலையில், ராணுவ ரீதியாக இரானின் உள்ளூர் ஷியா அதிகார வர்கத்தினரால் ஹூதி கிளர்ச்சிக்கு குழுவுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இதனையடுத்து, அதிபர் ஹாதியின் அரசை யேமனில் மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் செளதி அரேபியா மற்றும் பிற 8 முக்கிய சுன்னி அரபு நாடுகள் வான்வழி தாக்குதல்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமையன்று அதிகாலை சுமார் 02.21 மணிக்கு அபா விமான நிலையத்தை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை ஒன்றை தொடுத்ததாக செளதி கூட்டுப்படைகளின் ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் சர்வதேச மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்ட ராணுவ பேச்சாளர் கர்னல் டுர்கி அல்-மலிக்கி, இது ஒரு போர் குற்றமாகக்கூட கருதப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

அபா விமான நிலையம் யேமன் நாட்டுடனான எல்லையிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலையில் அமைந்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு? - கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது.

உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், 'khilafah GFX' என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மேலும், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தினை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் உடன் முகநூல் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் சஹ்ரானின் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

விரிவாக படிக்க: இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு? - கோவையில் ஏழு இடங்களில் சோதனை

ஈஸ்டர் தாக்குதல் நடந்த இலங்கை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மக்கள் பார்வைக்கு திறப்பு

ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் முழுமையாக சேதமடைந்த கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் தலைமையில் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முழுமையாக சேதமடைந்திருந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் மூன்று தினங்கள் முழுமையாக விசாரணைகளுக்காக மூடப்பட்டிருந்த தேவாலயம், பின்னர் தேவாலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

விரிவாக படிக்க: இலங்கை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறப்பு

உலகக்கோப்பை 2019: கிரிக்கெட்டுடன் மோதும் மழை - வெல்லப்போவது யார்?

ஐசிசி 2019 உலககோப்பைத் தொடரில் மூன்று ஆட்டங்கள் மழையால் நிறுத்தப்பட்டது, அவ்வளவு நல்ல தொடக்கமாக தெரியவில்லை.

இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான ஆட்டம் செவ்வாய்கிழமை அன்று பிரிஸ்டலில் நடக்கவிருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த ஆட்டம் நிறுத்தபட்டது. இது இந்த தொடரில் நிறுத்தபட்ட மூன்றாவது ஆட்டமாகும்.

இதற்கு முன்பு இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பிரிஸ்டலில் நடைபெறவிருந்த ஆட்டமும் தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையேயான சௌதாம்ப்டனில் நடைபெறவிருந்த ஆட்டமும் சில ஓவர்களுக்கு பிறகு மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இதற்கு முன்பு 1992 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பைத் தொடரில் இரண்டு ஆட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் இந்த 2019 தொடர் மூன்று ஆட்டங்கள் நிறுத்தப்பட்டு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

விரிவாக படிக்க: கிரிக்கெட்டுடன் மோதும் மழை - வெல்லப்போவது யார்?

ஜெகன் மோகன் ரெட்டியின் நவரத்னலு திட்டம்: முழுமையாக நிறைவேற்றப்படுமா?

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். ஜெகன் ஆட்சியைப் பிடிக்க 9 நல திட்டங்கள் குறித்த அவரது வாக்குறுதியும் ஒரு காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

ஆந்திராவில் கடந்த மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அமோக வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151-ல் வென்று பெரும் வலிமையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஜெகன். மக்களவைத் தேர்தலிலும் 25 தொகுதிகளில் 22-ல் அவரது கட்சி வென்றது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்துபோனபிறகு இரண்டாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஜெகன் மோகன். கடந்த மே 30-ம் தேதி அவர் முதல்வராக பதிவியேற்றுக்கொண்டார்.

விரிவாக படிக்க: பொறியியல் படிப்புக்கு கட்டணம் இல்லை; மருத்துவ செலவை அரசே ஏற்கும்: ஜெகனின் 9 நல திட்டங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :