நியூசிலாந்து மசூதி தாக்குதல் - குற்றங்களை ஒப்புக்கொள்ளாத சந்தேக நபர் பிரென்டன் டாரன்ட் மற்றும் பிற செய்திகள்

Brenton Tarrant படத்தின் காப்புரிமை TVNZ
Image caption சந்தேக நபர் பிரென்டன் டாரன்ட்

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக 51 பேரை கொலை செய்தது, 40 பேர் மீது கொலை முயற்சி, ஒரு பயங்கரவாத குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பிரென்டன் டாரன்ட் மீது பதியப்பட்டுள்ளன.

29 வயதாகும் ஆஸ்திரேலியரான பிரென்டன் சிறையில் இருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது வழக்குரைஞர் வாதத்தை எடுத்து வைத்தபோது பிரென்டன் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்காக கூடியிருந்த முஸ்லிம்கள் மீது ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்படுவது இதுவே முதல்முறை.

படத்தின் காப்புரிமை AFP

இந்த தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் பாதிப்புக்குளானோரின் உறவினர்கள் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தனர். பிரென்டன் வழக்குரைஞர் ஷேன் டைட், பிரென்டன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு தெரிவித்த போது நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது பலர் கண்ணீர் சிந்தினார்கள் என்கிறார் பிபிசி சிட்னி செய்தியாளர் ஹைவெல் கிரிஃபித்.

அடுத்த ஆண்டு மே மாதம் நான்காம் தேதி வரை விசாரணை நடக்கும் என தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி கேமரான் மாண்டெர், ஆகஸ்ட் 16-ம் தேதி நடக்கும் வழக்கு ஆய்வு விசாரணை நடைபெறும் வரை பிரென்டனை சிறையில் வைக்க நீதிபதி மாண்டர் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டார்.

கடந்த வாரம், இந்த வழக்கின் சந்தேக நபர் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது .

நியூசிலாந்தின் கருப்பு தினம்

கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதி மற்றும் லின்வுட் இஸ்லாமிய மையம் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் சந்தேக நபர் மார்ச் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

முதல் அல் நூர் மசூதிக்கு சென்று வண்டியை நிறுத்திவிட்டு மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினார். பிராதான வாயில் வழியில் நுழைந்த அவர் ஐந்து நிமிடங்களுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்கினார். இந்த நிகழ்வுகள் அனைத்துமே அந்நபர் தனது தலையில் கட்டியிருந்த கேமரா மூலமாக பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார் எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகு 5 கி.மீ தொலைவில் உள்ள லின்வுட் மசூதிக்குச் சென்று இந்த சந்தேக நபர் மேலும் பலரை கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ''இந்த தாக்குதல் நாட்டின் கருப்பு தினங்களுள் ஒன்று'' என்றார்.

தற்போது இந்த சந்தேக நபர் ஆக்லாந்து சிறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறை நியூசிலாந்தின் கடுமையான சிறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியா vs நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து

ஐசிசி 2019 உலகக்கோப்பைத் தொடரில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நாட்டிங்காமில் நடைபெறுவதாக இருந்த போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BCCI

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்த போட்டியுடன் இதுவரை நான்கு போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மதியம் மூன்று மணியளவில் தொடங்குவதாக இருந்த இந்த போட்டி, மழையின் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க - இந்தியா vs நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து

சந்திரயான் 2 திட்டம் சாதிக்கப்போவது என்ன?

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் அடுத்த மாதம் 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ANI

சந்திராயன் 2 விண்கலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதாவது, தரையிறங்குவதற்காக உள்ள ஒரு கலனையும் (லேண்டர்), சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள் போன்ற ஒரு கலனையும் (ஆர்பிட்டர்), நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு வாகனத்தையும் (ரோவர்) கொண்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளும், நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குரிய ஆய்வு கருவிகளை தனித்தனியே கொண்டிருக்குக்கும். அவற்றை பயன்படுத்தி, நிலவின் தண்ணீர், தாதுக்கள் இருப்பு போன்றவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.

விரிவாக படிக்க - சந்திரயான் 2 திட்டம் சாதிக்கப்போவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியை கேலி செய்து பாகிஸ்தான் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தால் இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை கிரிக்கெட் போட்டியை இது மையமாக கொண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானின் ஒரு தொலைக்காட்சி, விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தால் வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாக மாறியுள்ளது.

விரிவாக படிக்க - இந்திய அணியை கேலி செய்து பாகிஸ்தான் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம்

தமிழகத்தில் தடம் பதித்துவிட்டதா ஐ.எஸ் அமைப்பு?

தேசிய புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை கோவையில் ஏழு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய தினம் வியாழனன்று தமிழ் நாடு மாநில உளவுத்துறையினரும் கோவை மாவட்ட சிறப்பு உளவுப் பிரிவினரும் கோவை உக்கடம் அருகில் மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.

படத்தின் காப்புரிமை NurPhoto

உக்கடம் பகுதியினை சேர்ந்த முகமது உசேன், ஷாஜஹான் மற்றும் கரும்புக்கடையினை சேர்ந்த சேக் சபியுல்லா ஆகியோரின் இல்லங்களில் நேற்று அதிகாலை முதல் சோதனை நடை பெற்றது.

பின்பு மூன்று நபர்களையும் நுண்ணறிவுத் துறையினரின் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

விரிவாக படிக்க - தமிழகத்தில் தடம் பதித்துவிட்டதா ஐ.எஸ் அமைப்பு? கோவையில் இன்றும் சோதனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :