அர்ஜென்டினா, உருகுவே நாடுகளில் 48 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு - காரணம் என்ன?

அர்ஜெண்டினா படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

அர்ஜென்டினா மற்றும் உருகுவே முழுவதும் மின்சார பழுது ஏற்பட்டுள்ளதாக அந்நாடுகளின் முக்கிய மின்சார விநியோக நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த மின்வெட்டு பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது என்றும், அதனால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், போக்குவரத்து சிக்னல்கள் பழுதாகியுள்ளன என்றும் அர்ஜெண்டினாவை சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"மின் இணைப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள பழுதால் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டு, அர்ஜெண்டினா மற்றும் உருகுவேயில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது." என மின்சார விநியோக நிறுவனமான எடிசர் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஆற்றல்துறை செயலர், கஸ்டவோ லொபெடேகி இந்த மின் பழுதுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில பகுதிகளில் மின்சாரம் திரும்ப வந்துள்ளது என்று தெரிவித்த அவர், நாடு முழுவதும் மின்சாரம் வருவதற்கு நீண்ட நேரம் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY

உருகுவேயின் ஆற்றல் விநியோக நிறுவனமான யுடிஇ கடற்கரை பகுதிகளில் மின்சாரம் திரும்ப வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

அர்ஜெண்டினா மற்றும் உருகுவேயின் மொத்த மக்கள் தொகை 48 மில்லியன் ஆகும்.

அர்ஜெண்டினாவின், சாண்டா ஃபா, சான் லூயிஸ், ஃபார்மோசா, லா ரோஜா, சுபுட், கர்டோபா மற்றும் மெண்டோசா ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அர்ஜென்டினாவின் நீர் விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த மின்வெட்டு குறித்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வடக்கில் தலைநகர் பேனோஸ் ஏரிஸ், மேற்கில் மெண்டோசா மற்றும் தெற்கில் கமோடாரோ ரிவாடாவியா என நாட்டின் பல நகரங்களில் இந்த மின்வெட்டு குறித்த செய்தி பரவி வருகிறது.

#SinLuz என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி மக்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்த புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்