அமெரிக்க நீதிமன்ற விவாதம்: குடியேறிகளின் குழந்தைகளுக்கு பற்பசை, சோப் வழங்கலாமா? மற்றும் பிற செய்திகள்

குடியேறிகளின் குழந்தைகளுக்கு பற்பசை, சோப் வழங்க உரிமையுண்டா? படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேறிகளின் குழந்தைகளுக்கு பற்பசை மற்றும் சோப் கட்டிகள் ஆகியவற்றை பெற உரிமையுண்டா என்று அரசு வழக்கறிஞறொருவர் வினவியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேறிகளை சுகாதாரமான சுகாதாரமான சூழலில் வைத்திருப்பது அவசியம் என்ற சட்ட விதிகளை அமெரிக்க நீதித்துறை இந்த விவாதத்தில் மேற்கோள் காட்டியது.

உடனடியாக குறுக்கிட்டு பேசிய அந்த வழக்கறிஞர், சட்டத்தில் சோப் கட்டிகள் அளிப்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குடியேறிகளின் குழந்தைகள் வெற்றுத்தரையில் படுத்து உறங்குவது குறித்து நீதிபதிகள் மேலும் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, குடியேறிகளின் குழந்தைகள் உள்ள தடுப்பு முகாம்கள் குறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்து விவாதங்கள் உலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகளை துரிதப்படுத்த சிறிசேன உத்தரவு

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுக் குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய நிலையிலேயே, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

மேலும், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைத் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரிவாக படிக்க:இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு

சஞ்சீவ் பட்: ஐஐடி கல்வி முதல் மோதி எதிர்ப்பு வரை - யார் இவர்?

படத்தின் காப்புரிமை Getty Images

குஜராத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு, முப்பது ஆண்டு கால வழக்கொன்றில் ஆயுள் தண்டனை வழங்கி ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சஞ்சீவ் பட் குறித்த சில தகவல்கள்

  • ஐஐடியில் பட்ட மேற்படிப்பு படித்த சஞ்சீவ் பட் 1988ல் குஜராத் கேடர் காவல்துறை அதிகாரியாக ஆனாக். குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார்.
  • 1999 முதல் 2002 வரை மாநில உளவுத்துறையில் அதிகாரியாக இருந்தார்.
  • அந்த நேரத்தில் எல்லை பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு என அனைத்தும் இவரது கட்டுபாட்டின்கீழ் இருந்தது.
  • 2002ல் குஜராத் கலவரத்தின் போது சஞ்சீவ் பதவியில் இருந்தார். இதன்பிறகு 2002ல் குஜராத் கலவரத்தில் இப்போதைய பிரதமர் நரேந்திர மோதியின் பங்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

விரிவாக படிக்க:யார் இந்த சஞ்சீவ் பட்? - அவர் குறித்த சில தகவல்கள்

பா.ஜ.கவில் இணைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சொன்ன காரணம் என்ன?

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இருந்த ரமேஷ், சுஜானா செளத்ரி, காரிகபதி மோகன் ராவ் மற்றும் டி.ஜி. வெங்கடேஷ் ஆகிய நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து விலகி பா.ஜ.கவுடன் கரம் கோர்த்துள்ளனர்.

"நான் பா.ஜ.கவில் இணைகிறேன். மற்ற விஷயங்களை இன்றிரவு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் விவரிப்பேன்" என சுஜானா செளத்ரி கூறி உள்ளார்.

சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள சமயத்தில் இவர்கள் கட்சியிலிருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்தது.

விரிவாக படிக்க:பா.ஜ.கவில் இணைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சொன்ன காரணம் என்ன?

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரான்: அதிகரிக்கும் பதற்றம் - என்ன நடக்கிறது?

படத்தின் காப்புரிமை US NAVY/KELLY SCHINDLE

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புகிறேன் என்று ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ் -ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறுகிறது.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் நடுவில் தற்போது இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

விரிவாக படிக்க:அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :