பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் புதிய தலைவர் ஃபையஸ் ஹமீத் யார்?

பாகிஸ்தான் உளவுப்பிரிவின் புதிய தலைவர் யார்? படத்தின் காப்புரிமை ISPR

பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவ உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயின் (இன்டர் சர்வீசஸ் இண்டெலிஜன்ஸ்) அடுத்த இயக்குநராகவும் லெஃப்டினண்ட் ஜெனரல் ஃபையஸ் ஹமீத் சென்ற வாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 18ஆம் தேதி வரை, இந்த பதவியில் அசிம் முனிர் என்ற அதிகாரி இருந்து வந்தார். இவர் எட்டு மாதங்கள் மட்டுமே இந்த பதவியில் இருந்தார்.

ராணுவ தலைமை அதிகாரியான ஜெனரல் குவமர் ஜாவேத் பஜ்வாவுடனான ஆலோசனைக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளா ஹமீத்.

நாட்டின் அரசியல், வெளியுறவுக் கொள்கை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் ஐ.எஸ்.ஐ-யின் தாக்கம் எவ்வளவு உள்ளது என்பதை கவனிக்கையில், இது ஹமீதை நாட்டின் சக்திவாய்ந்த மனிதர்களுள் ஒருவராக மாற்றியுள்ளது.

ஃபையஸ் ஹமீத் பற்றிய முக்கிய தகவல்கள்

அவரது பணியின் காரணமாகவே, லெஃப்டினண்ட் ஜெனரல் ஃபையஸ் ஹமீது குறித்த தனிப்பட்ட தகவல்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

இந்த பதவிக்கு வருவதற்கு முன்பாக, அவர் ஐ.எஸ்.ஐ க்கு எதிரான புலனாய்வுத் துறையின் தலைவராக பணியாற்றி வந்தார். ஹமீத் மற்றும் பாஜ்வா ஆகிய இருவருமே பாகிஸ்தான் ராணுவத்தின் பலூச் ரிஜிமெண்டை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தி பனோ அக்வில் பிரிவிற்கு கமாண்டராகவும் ஹமீது இருந்துள்ளார்.

2017ஆம் ஆண்டில், அப்போதைய நவாஸின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அரசுக்கும், தாரேக் -இ- லபிக் பாகிஸ்தான் என்ற குழுவுக்கும் இடையே உடன்படிக்கை உருவாக்கிய விஷயத்தின் மூலம், பெரிதும் பேசப்பட்டார் ஹமீத். அப்போதைய தேர்தலை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக உள்ளது என்று அந்நாட்டின் தாரேக் -இ- லபிக் பாகிஸ்தான் குழு நினைத்தது.

2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அவர் குறித்து மீண்டும் பேசப்பட்டது. தற்போதைய பிரதமரான இம்ரான் கானின் கட்சிக்கு பிற கட்சி உறுப்பினர்கள் தாவுதலை இவர் திட்டமிட்டதாகவும், அதை அவர் மறைமுகமாக செய்ததாகவும் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷரீஃபால் குற்றம் சாட்டப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே ஆண்டு, அந்நாட்டு ராணுவத்தின் இரண்டாவது ,மிகப்பெரிய பதவியான மூன்று-நட்சத்திரங்கள் கொண்ட ஜெனரல் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் இரண்டாவது பெரிய விருதான ஹலில் -இ- இம்தியாஸ் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.

மற்றவர்கள் கூறுவது என்ன?

பலூசிஸ்தான் அரசின் முன்னாள் ஆலோசகராக இருந்த ஜன் அசாக்சை என்பவர், ஹமீதை `உறுதியான, இயல்புக்கு மாறாக சிந்திக்கக்கூடிய உத்தியாளர்` என்று கூறியுள்ளார்.

இவர், `கூடுதலாக சக்திகளை பயன்படுத்தி அரசியல் மற்றும் அறிவுசார் எதிர் தரப்புகளை` அழித்துவிடுவார் என பல நிபுணர்கள் கூறியுள்ளனர். `ஊடகங்களை கட்டுப்படுத்துதல்` மனித உரிமைகள் குழுக்களை நசுக்குதல் ஆகியவை நடக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஹமீத் ஒரு கடும்போக்காளர் என்றும், உள்ளூரில் உள்ள பிரச்சனைகளை மிகவும் வீரியமாக கட்டுப்படுத்துவார்` என்று கூறுகிறார் பாகிஸ்தான் ராணுவம் குறித்த நிபுணரான அயீஷா சித்திகா.

இவரின் பதவி உயர்வு என்பது இம்ரான் கானுக்கு `பரிசு` போன்ற விஷயம் என்று கூறுகிறார் ஊடகவியலாளரான தஹா சித்திக்கி. இந்த நகர்வை ஜெனரல் பஜ்வா செய்திருக்கக்கூடும் என்றும் கூறும் இவர், வெறும் நான்கு மாதம் மட்டுமே இன்னும் பதவியில் இருக்கப்போகும் பஜ்வா, தனக்கு விருப்பமான ஒருவருக்கு பதவி உயர்வு கொடுப்பதன்மூலம், பதவியின் சக்தியை தன்வசம் வைக்க நினைத்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

இந்திய தேசிய பாதிகாப்பு ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக உள்ள திலக் தேவஷிர், இந்த நியமனத்தை புதிரானது என கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக்கூறி, பஸ்ஹ்தூன்கல் நடத்திவரும் தொடர் போராட்டங்களை சரிவர கையாள அசிம் முனிர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுகூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், `முல்லா-ராணுவம்` ஆகியவற்றிற்கு இடையிலான நட்பை வடிவமைத்தார் ஹமீத் என்றும், மசூத் அசார் மற்றும் ஹஃபீஸ் சயீத்தின் தலைமையில் செயல்படும், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர்-இ-தொய்பா ஆகிய குழுக்களுடன் ஐ.எஸ்.ஐக்கு இருக்கும் உறவை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்று இந்தியா கவனித்துக்கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளது.

நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகளையும், அவர்களுக்கு வந்துசேரும் நிதிகளையும் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய சவால்கள் அவர் முன்பு இப்போது உள்ளது என்று அந்நாட்டு நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, நாட்டில் தீவிரவாத்த்திற்கு எதிராகவும், அவர்களால் செய்யப்படும் ஊழலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஹமீதின் முன் உள்ளது என்று அவை தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் தாலிபன்களுக்கு இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில், `பாகிஸ்தானின் நலன்களை பாதுகாப்பது` குறித்த பொறுப்பும் இவரின் வசமே வரும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்