தென்கொரியாவில் பாலியல் முறைகேடு: கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு நடுவில் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்கள் - பிபிசி புலனாய்வு

கங்க்னம்: கே-பாப் மைதானத்தைக் கலக்கும் ஊழல்

எச்சரிக்கை: பாலியல் வன்முறைகள் பற்றிய விவரங்களைக் கொண்ட இந்தக் கட்டுரை உங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கவனமாக மேலாண்மை செய்யப்படும் கே-பாப் உலகம் மோசடிகளால் அதிர்ச்சிக்குள்ளானது.

உலகின் புகழ்பெற்ற பாய் பேண்ட்ஸ் ஆன பிக் பாங் (Big Bang)-ல் ஒரு பாடகரான செயுங்ரி, தன்னுடைய தொழிலில் பாலியல் தொழிலாளர்களை விலைகொடுத்து வாங்கிய புகாரின் பேரில் காவல் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன்மூலம் தென்கொரியாவில் சோலில் உள்ள கங்னம் மாவட்டத்தில் தாம் பங்குதாரராக இருக்கும் பர்னிங் சன் (Burning Sun) என்ற இரவு கேளிக்கை விடுதியில் அபரிமிதமாக வருமானம் ஈட்டினார் என்ற புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது.

கே-பாப் குழுவில் பிரபலமான அவருடைய பல நண்பர்கள், ஆபாச காணொளிகளைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதுதொடர்பாக சாட் ரூம்களில் பெருமையாகப் பேசியதாகவும் கைது செய்யப்பட்டார்கள்.

கொரியர்களின் மனம் கவர்ந்த அவர்கள், ஒவ்வொருவராக போதை மருந்து எடுத்துக் கொண்டது முதல் பாலியல் வல்லுறவு வரையிலான புகார்கள் குறித்து விசாரணைக்கு காவல் நிலையங்களுக்குச் செல்லும் போதெல்லாம், செய்தியாளர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டியிருந்தது.

தென்கொரியாவின் பணக்காரர்கள் வாழும், பணியாற்றும், விளையாடும் கங்னம் பகுதி பற்றி மேலும் அதிர்ச்சியூட்டும் படங்கள் சமீபகால மாதங்களில் வெளியாகியுள்ளன.

பகட்டான அந்த இரவுநேர கேளிக்கை விடுதியில், அதிகாரமிக்க ஆண்களின் உத்தரவின்படி பெண்களுக்கு போதை மருந்து தரப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று பிபிசிக்கு புகார்கள் வந்தன. சட்டப்பூர்வ வயதை எட்டாத சிறுமிகள் லாபத்துக்காக பாலியல் ரீதியாக சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

சோலில் பாலியல் புகார்களில் சிக்கியவர்களிடம் பிபிசி இதுபற்றிக் கேட்டறிந்தது. கேளிக்கை விடுதிக்குச் செல்பவர்கள், அங்கு பணியாற்றுபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமும் பிபிசி பேட்டி எடுத்தது. பணம் தரும் வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்காக, பணியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட, சிறுமிகளிடமும் இதுபற்றி விசாரித்தது. கேளிக்கை விடுதிகளில் தவறான போக்குகள் பரவலாக இருக்கின்றன என்றும் பல சமயங்களில் அது மூர்க்கத்தனமாக இருக்கும் என்றும் அவர்கள் அனைவருமே கூறினர்.

பணக்கார வாடிக்கையாளர்கள், இரவில் கேளிக்கை விடுதியில் போதை மருந்து தந்து அருகாமை ஓட்டல் அறைகளுக்கு கொண்டு செல்லப்படும் பெண்களுடன் பாலியல் உறவு கொள்வதற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இந்த அவதூறான செயல்களை கேமராவில் பதிவு செய்வதும் வழக்கமானதாக இருந்து வருகிறது.

கேளிக்கை விடுதிக்குச் செல்லும் ஒருவர் எங்களிடம் கூறியது: ''இவர்கள் வேட்டைக்காரர்கள். இந்த விளையாட்டுக்காக பணம் தருகிறார்கள். எனவே அவர்களுக்கு பாலியல் தேவை. இந்த இடத்தில் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்று நினைப்பது முட்டாள்தனமானது.''

'அவன் எனக்குத் தொடர்ந்து தண்ணீர் தந்து கொண்டிருந்தான்'

பாலியல் தாக்குதலைக் காட்டும் காணொளி ஒன்றை எங்களுக்குக் காட்டினார்கள். என் எதிரே இருந்த புகைப்படம், அடுத்து வரக் கூடிய கொடூரங்களின் முன்னோட்டத்தைக் காட்டுவதைப் போல இருந்தது.

சிவப்பு நிற சோபா ஒன்றின் மீது ஒரு பெண் நிர்வாணமாகப் படுத்துக் கிடக்க, மூன்று ஆண்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காணொளியை நான் ஓட விட்டேன். ஆண்கள் அப்பெண்ணை நெருங்கினார்கள். ஒருவன் சிரித்துக் கொண்டே அவருடைய காலை தூக்கினான். அந்தப் பெண் நடக்க முடியாமல் உணர்வின்றி கிடந்தார். அந்த இரண்டு நிமிட காணொளி விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது.

அந்த மூன்று பேரால் திரும்பத் திரும்ப பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு அந்தப் பெண் ஆளாகியிருப்பதைப் போலத் தெரிந்தது.

அலுவலர்களுக்குள் சாட் ரூம் மூலமாக அந்த காணொளி பகிரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. என்னால் அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் கங்னமில் உள்ள ஏராளமான கேளிக்கை விடுதிகளின் செயல்பாடுகள் பற்றி காவல் துறையினர் மேற்கொண்டிருக்கும் விசாரணையில் இந்த காணொளியும் இருக்கிறது.

கங்னம் பகுதி சோலின் பெவர்லி ஹில்ஸ் என்று வர்ணிக்கப்படுகிறது. பிரகாசமான, பேஷனை விரும்பும் அந்தப் பகுதி வளமை மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மிகுந்த பணக்காரர்கள் மற்றும் கொண்டாட்டமான வாழ்க்கை முறையை அனுபவிக்க விரும்புவர்களுக்கான நியான் மைதானமாக இரவு நேரங்கள் மாறிவிடுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இரவு நேரத்துக்கான கட்டணம் பொருத்தமற்றதாக இருக்கிறது. கேளிக்கை விடுதிக்குச் செல்லும், வசதிமிக்க ஒருவர் வெறும் ஒரு மாலை நேரத்துக்காக 17,000 அமெரிக்க டாலர்கள் (£13,300) வரை செலவு செய்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஆண் ஒருவர் நடன மேடையில் ஆடிக் கொண்டு, வங்கி நோட்டுகளை, காகிதத் துண்டுகளைப் போல வீசிக் கொண்டிருக்கிறார்.

அரங்க ஏற்பாடு சப்தம் மிக்கதாகவும், ஆடம்பரமானதாகவும் இருக்கிறது. ஆடைகளுக்கான விதிமுறைகள், நல்ல வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. பல கேளிக்கை விடுதிகளில், உள்ளே நுழைவதற்கே, அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின்படி உடைகள் இருக்க வேண்டும்.

டி.ஜே.க்களாக பிரபலங்கள் இருக்கிறார்கள். மேசைகளைச் சுற்றி நெரிசலாக நடனமாடிக் கொண்டிருப்பவர்களைக் கட்டுப்படுத்தி, தங்கள் பாணியில் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாலை வரையில் பார்ட்டியில் இருக்க விரும்பும் மதுப் பிரியர்களுக்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ள சாம்பெயின் பாட்டில்களை அழகான பெண்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கிம் - உண்மையான பெயர் அல்ல - கங்னம் இடத்துக்கு தொடர்ந்து செல்லும் பெண்மணி. நடனமாடுவது அவருக்குப் பிடிக்கும். அவருக்குப் பிடித்தமான டி.ஜே.க்களும் உண்டு. கடந்த டிசம்பரில் ஒரு மாலைநேரத்தில், மது அருந்துவதற்காக இரவு கேளிக்கை விடுதிக்கு அவர் அழைக்கப் பட்டிருக்கிறார்.

அந்தக் குழுவில் ஆசிய தொழிலதிபர் ஒருவரும் இருந்திருக்கிறார். தன் மீது ஈர்ப்பு கொண்டு அந்த நபர் விஸ்கி பரிமாறத் தொடங்கியதாக கிம் கூறுகிறார்.

''அவன் மதுவை ஊற்றும்போது என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை'' என்று அவர் தெரிவித்தார். ''அவனுடைய முதுகுப்பக்கமாக நான் இருந்தேன். எனவே நான் மூன்று, நான்கு குவளை மது அருந்தினேன். ஒவ்வொரு முறை நான் குடிக்கும்போதும், அவன் தொடர்ந்து எனக்கு தண்ணீர் தந்து கொண்டிருந்தான்'' என்று கிம் கூறினார்.

ஒருகட்டத்தில், இருளடைந்ததைப் போல ஆகிவிட்டேன் என்றும் ஓட்டல் அறையில் விழித்தபோது அந்த ஆள் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றும் கிம் தெரிவித்தார்.

''படுத்திருக்கும்படி அவன் என்னை கட்டாயப்படுத்தினான். ஆனால் நான் அதற்கு விரும்பவில்லை. எழுந்திருக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். நான் எழுந்திருக்கும்போது, அவன் என் கழுத்தைப் பிடித்து திரும்பத் திரும்ப படுக்கையின் மீது தள்ளினான். இப்படி செய்தால் கழுத்து முறிந்து இறந்துவிடுவார்கள் என்று நான் நினைத்தேன்.''

''நான் அழுதேன், கதறினேன். அப்போது அவன் என் மீது ஏறிக் கொண்டு கைகளால் என் வாயைப் பொத்தி, பலமாக கீழே அழுத்தினான். ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.''

உயிர் பயம் வந்துவிட்டது என்று கிம் கூறினார். ''அவனுடைய பலத்தை என்னால் எதிர்க்க முடியவில்லை. செத்துவிடப் போவதைப் போல எனக்கு வலி இருந்தது. அதனால் எதிர்ப்பை விட்டுவிட்டேன். செத்த பிணத்தைப் போல கிடந்தேன்,'' என்றார் கிம்.

கேளிக்கை விடுதியில் தனக்கு போதை மருந்து தந்து, பாலியல் வல்லுறவு செய்துவிட்டார்கள் என்கிறார் கிம். அதன்பிறகு எதிர்ப்பை இழந்த நிலையில், வீட்டுக்குச் செல்ல விடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார்.

''அங்கிருந்து செல்வதற்காக என் துணிகளையும், மற்ற பொருள்களையும் எடுத்துக் கொண்டிருந்தபோது, அவன் தன்னுடைய செல்போனில் என் முகத்துடன் அவன் முகத்தை வைத்து ஒரு புகைப்படம் எடுத்தான். என்ன செய்கிறாய் `வேண்டாம், வேண்டாம்' என்று கூறினேன். ஆனால் அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு, போக விடாமல் தடுத்தான். எனவே, புகைப்படம் எடுக்க அனுமதித்துவிட்டு அங்கிருந்து போய்விடுவது தான் நல்லது, இல்லாவிட்டால் இன்னும் துன்பம் நேரும் என்று நினைத்தேன்.''

``எனவே அவன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். நான் போய்விட்டேன்.''

மறுநாள் கிம் காவல் துறையினரிடம் சென்றிருக்கிறார். அவருடைய ரத்தத்தில் போதை மருந்துக்கான தடயம் எதுவும் இல்லை என்று காவல் துறையினர் கண்டறிந்தனர். ஆனால் இது நடக்காத விஷயம் அல்ல என்று வழக்கு நடத்தியவர்கள் எங்களிடம் கூறினர்.

ஒருவரை செயலற்ற நிலைக்குக் கொண்டு செல்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் GHB அல்லது Gamma-Hydroxybutyrate என்ற மருந்து, அதிக அளவில் போதை மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், சில மணி நேரங்கள் போய்விட்டால் உடலில் அதன் தடயத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

``நல்லவேளையாக தாக்குதல் நடந்தபோது நான் விழிப்புடன் இருந்தேன். அதனால் என்ன நடந்தது என்பதை என்னால் விவரிக்க முடிந்தது'' என்று அந்தப் பெண் எங்களிடம் கூறினார்.

ஆனால், கங்னம் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றபோது, தங்களுக்கு போதை மருந்து தரப்பட்டு, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக பல பெண்கள் நம்புவதை ஆன்லைன் மூலம் அறிய முடிந்ததாக அவர் கூறுகிறார். ஆனால் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெளிவான நினைவு ஏதும் இல்லை என்கிறார்.

அந்தத் தொழிலதிபரைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் தாம் அப்பாவி என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண் மயக்கமடையவில்லை என்று பிபிசிக்கு அளித்த அறிக்கையில் அந்தத் தொழிலதிபர் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்யவோ, பாலியல் துன்புறுத்தல் செய்யவோ அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தவோ இல்லை என்றும், அந்தப் பெண் அவராகவே முன்வந்து கேளிக்கை விடுதியில் இருந்து வந்து, ஓட்டலுக்கு நடந்து வந்ததை கண்காணிப்புக் காமிரா காட்சிகள் காட்டுவதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடரும் சர்ச்சைகள்

கடந்த சில மாதங்களில், போதை மருந்துகள், பாலியல் தொழில், பாலியல் தாக்குதல், கேளிக்கை விடுதி இடங்களுடன் தொடர்புடைய சட்டவிரோத படமாக்கல் புகார்கள் தொடர்பாக சுமார் 4,000 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கே-பாப் குழுவைச் சேர்ந்த ஆண் பிரபலங்களும் இதில் அடங்குவர். செயுங்ரி - உண்மையான பெயர் லீ செயுங்-ஹின் - நிகழ்ச்சி நடத்தும் தொழிலில் இருந்து விலகி செய்துவிட்டார். பாலியல் தொழிலாளர்களிடம் எப்போதும் பணம் கொடுத்ததில்லை என்று அவர் மறுக்கிறார். ஆனால் இந்த அவதூறு ``மிகவும் பெரியதாகிவிட்டது'' என்கிறார் அவர்.

தொடரும் சர்ச்சைகள் காரணமாக, தென் கொரியாவின் பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான - YG Entertainment- நிறுவனத்தின் தலைமை தயாரிப்பாளர் யாங் ஹியுன்-சுக் பதவி விலகியுள்ளார். கங்னம் பாணி குறித்த சர்ச்சை எழுவதற்குக் காரணமாக இந்த நிறுவனம் இருந்தது. தவறு எதுவும் செய்யவில்லை என்று அவர் மறுக்கிறார். ஆனால் போதை மருந்து அவதூறு புகாரில் தனக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள ''அவமானகரமான'' புகார்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒரு காலத்தில் தென்கொரியாவின் மிகவும் பிரபலமான பாப் நட்சத்திரமாக இருந்த செயுங்ரி, தன் வேலையில் இருந்துவிலகிவிட்டார்

குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மற்றவர்களும் இதுபற்றிப் பேசுவதற்கு துணிச்சல் பிறந்துள்ளது. சோல் கேளிக்கை விடுதி இடங்களுடன் தொடர்பு கொண்டவர்களுடன் பேசியதில், சில பணக்கார வாடிக்கையாளர்களுக்காக, பாலியல் மகிழ்ச்சிக்காக பெண்களை விலைக்கு வாங்குதல், அவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய போக்குகள், வழக்கமான செயல்பாடுகளாகிவிட்டன என்று கூறினார்கள்.

விருந்தினர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ''எம்.டி.கள்'' (MDs) என்ற பெயரில், நிகழ்ச்சி நடத்துபவர்களை கேளிக்கை விடுதிகள் பணிக்கு அமர்த்தும். அவர்களுடைய பங்கு வெளியில் தெரியாது.

''அழகான பெண்களை'' கேளிக்கை விடுதிகளுக்கு வரவழைப்பதற்காக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதுதான் தங்களுடைய வேலை என்று பெண் MD ஒருவர் எங்களிடம் கூறினார். இலவச அனுமதி, இலவச மதுபானங்கள் என்று ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை கேளிக்கை விடுதிகளுக்கு அழைத்து வருவதும் அதில் அடங்கும்.

எம்.டி.க்களின் தொலைபேசி தொடர்புகள் பட்டியலில் அழகான பெண்கள் பலருடைய எண்கள் இருக்கும். தங்களுடைய வாடிக்கையாளர்களுடன் மது அருந்தும்படி அவர்களை எம்.டி.கள் ஊக்குவிப்பார்கள். மதுபான விற்பனையில் 13 முதல் 15 சதவீதம் வரை எம்.டி.களுக்குத் தரப்படும்.

''அதிகம் பணம் தரும் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதற்காக பாலியல் உணர்ச்சி மிகுந்த பெண்களை எம்.டி.கள் அழைத்து வர வேண்டியிருக்கும்,'' என்று எம்.டி ஒருவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்தின்படி, பெண்கள் அருந்தும் மதுபானத்தில் போதை மருந்து கலந்து, அவர்களை சுயநினைவு இழக்கச் செய்வது குறித்த புகார்களை நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.

இருந்தபோதிலும், பாலியல் தாக்குதலை ஊக்குவிப்பதற்காக, வாடிக்கையாளர்களுக்கு GHB மருந்து விற்கப்படுவதாகவோ அல்லது வழங்கப்படுவதாகவோ, கூறப்படும் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை என்று கேளிக்கை விடுதி மூத்த நிர்வாகி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரபலமான கங்னம் இரவுநேர கேளிக்கை விடுதியில், நிகழ்ச்சி நடத்துபவராக இருந்த ஒருவர், உயரடுக்கு விருந்தினர்களில் ஒருவராக இருந்த விவிஐபி ஒருவருக்கு, சுயநினைவை இழந்த பெண்கள் மீதான பைத்திக்காரத்தனமான ஆசை உண்டு என்று தெரிவித்தார்.

''நிறைய குடித்த அல்லது சுயகட்டுப்பாட்டை இழந்த பெண்களை தன்னிடம் கொண்டு வருமாறு எனக்கு அந்த விவிஐபி உத்தரவிட்டார்,'' என்று அவர் எங்களிடம் தெரிவித்தார். ''கட்டுப்பாட்டை இழந்தவர்களைக் கொண்டு வாருங்கள்'' என்பதுதான் குறிப்பாக வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்தது என்கிறார்.

பாலியல் தாக்குதல்கள் பலவற்றை தாம் பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார். ''ஒவ்வொரு வாரமும் மது அருந்தாத, ஆனால் வேறு வகையில் சிலர் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். யார் மது குடித்துவிட்டுச் செல்கிறார்கள், யார் வேறு வகையில் செல்கிறார்கள் என்பதை பார்வையாலேயே நீங்கள் சொல்லிவிட முடியும்,'' என்று அவர் கூறினார்.

லீ - அந்த ஆணின் உண்மையான பெயர் அல்ல - எம்.டி.யாக வேலை பார்த்தவர். இந்தப் பெண்கள், ''கேளிக்கை விடுதிக்கு இயல்பாக வந்தவர்கள்'' என்று அவர் சொல்கிறார்.

அவர் என்னிடம் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் விரும்பினேன். எனவே என் கேள்வியை அவரிடம் தெளிவாகக் கேட்டேன். "இரவுப் பொழுதைக் கழிக்க கேளிக்கை விடுதிக்குச் செல்லும் சாதாரணப் பெண்கள், போதை மருந்து தரப்பட்டு, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறார்களா? அதைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன்.

''ஆம்'' என்பதுதான் அவருடைய பதிலாக இருந்தது.

பெண்களை வாங்கியதும், "கேளிக்கை விடுதியின் மாடியில் உள்ள ஓட்டலுக்கு வாடிக்கையாளர் அழைத்துச் செல்வார். அல்லது இங்கே அருகில் நிறைய ஓட்டல்கள் அல்லது மோட்டல்கள் இருக்கின்றன,'' என்று அவர் கூறினார்.

பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கும் என்று தொழிலாளர்கள் அஞ்சுவதால், அவர்களுடைய பெயர்களை நாங்கள் குறிப்பிட முடியவில்லை. அதேபோல, அடிக்கடி கேளிக்கை விடுதிக்குச் செல்லும் ஒருவர், சோலில் விஐபி அறையில் தாம் இருந்தபோது, சுயநினைவு இல்லாத ஒரு பெண்ணை, ஒரு வெயிட்டர் அழைத்து வந்ததாகத் தெரிவித்தார்.

"யாராவது அந்தப் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்திருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், முழுமையாக தள்ளாடிக் கொண்டு, சுயநினைவு இல்லாத ஒரு பெண் அங்கிருந்தார். அந்தப் பெணணுக்கு வாயில் இருந்து உமிழ்நீர் வடிந்து கொண்டிருந்தது. ஊனமுற்றவராகத் தெரிந்தார். அவர் மனநிலை சரியில்லாதவரா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இங்கே அந்தப் பெண் இறந்து போனால் என்னவாகும் என்று கவலைப்பட்டேன்.''

பெண்ணுக்கு போதை மருந்து கொடுக்கவோ அல்லது தாக்குதலில் ஈடுபடவோ இல்லை என்று அவர் மறுத்தார். மாறாக, நிகழ்ச்சி நடத்துபவரிடம் சண்டை போட்டதாகக் குறிப்பிட்டார்.

"அந்தப் பெண் அதிகம் குடித்திருப்பதாக வெயிட்டரிடம் நான் கூறினேன். அந்தப் பெண் குடித்திருக்கவில்லை. எது நடந்தாலும் அந்தப் பெண்ணுக்கு நினைவிருக்காது. எனவே நீங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்று வெயிட்டர் கூறினார்,'' என்று அந்த நபர் தெரிவித்தார்.

"செக்சியான, அழகான பெண்கள் தான் இங்கு பலியாகிறார்கள். இந்த ஆண்கள் வேட்டைக்காரர்கள். இந்த விளையாட்டுக்காக அவர்கள் பணம் தருகிறார்கள். எனவே உங்களுக்கு பலியாள் வேண்டும். இதைப் பெறுவதற்கு உதவக் கூடியவர்களாக எம்.டி.கள் இருக்கிறார்கள்,'' என்றார் அவர்.

ஒரு பாதிரியாரின் முயற்சி

கங்னம் பகுதியில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்பவராக கிறிஸ்தவ தேவாலயப் பாதிரியார் ஜூ வோன்-கியூ இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PASTOR JOO WON-KYU
Image caption `வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறைகள்' பாலியல் பலாத்காரங்களை தாம் பார்த்திருப்பதாக பாதிரியார் ஜூ கூறுகிறார்.

பருவ வயதில் ஓடிப் போகும் இளம்பருவத்தினர் நலனுக்கான 2015ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இவர். அப்போது 20 பேர் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களைத் தேடிச் சென்றபோது, கேளிக்கை விடுதிகளில், வயது குறைவான பாலியல் தொழிலில் அவர்கள் சிக்கியிருப்பதை அறிந்தார். இந்தப் பருவ வயதினர் எப்படி வேலையில் சேர்க்கப்படுகிறார்கள், எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நன்றாக அறிந்து கொள்வதற்காக, சில கேளிக்கை விடுதிகளில் அவர் டிரைவராக வேலை பார்க்க முடிவு செய்தார்.

வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்ட பருவ வயதுப் பெண்களை தரகர்கள் அணுகி, கேளிக்கை விடுதிகளில் இரண்டு, மூன்று ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு நடிகைகளாகவோ அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களாகவோ ஆக்குகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்வார்கள் என்று அவர் தெரிவித்தார். சிலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதுபோன்ற கேளிக்கை விடுதிகளில் வேலைபார்க்கும் மிகச் சிறிய வயதுடையவராக 13 வயது சிறுமியும் இருந்தாள் என்று ஜூ தெரிவித்தார். தென்கொரியாவில் சம்மத்த்தின் பேரில் பாலியல் உறவு கொள்வதற்கான வயது 18 ஆக உள்ளது. அதைவிடக் குறைந்த வயதுப் பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் பலாத்காரமாக சட்டத்தின் பார்வையில் கருதப்படும்.

தாம் டிரைவராகப் பணியாற்றிய காலத்தில், சுயநினைவு இல்லாத பல பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதைப் பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த நடைமுறை எப்படி செயல்பட்டது என்று அவர் எங்களிடம் கூறினார்.

''அந்தப் பெண்ணுடன் உறவுகொள்ள விரும்புகிறேன் என்று எம்.டி.களிடம் விஐபிக்கள் கூறுவார்கள். அந்த விஐபி பெரிய பணக்காரர் என்று அந்தப் பெண்ணிடம் எம்.டி கூறுவார். பிறகு, தனியாக பிரிக்கப்பட்டுள்ள அறைக்கு அந்தப் பெண்ணை எம்.டி அழைத்துச் செல்வார். பிறகு அவர்கள் சேர்ந்து மது அருந்துவார்கள். மது பானத்தில் GHB சேர்ப்பார்கள் அல்லது குடிபோதை மயக்கத்தை ஏற்படுத்தி பாலியல் வல்லுறவு செய்வார்கள் அல்லது பாலியல் ரீதியாக அந்தப் பெண்ணைத் தாக்குவார்கள்,'' என்று கூறினார்.

வாடிக்கையாளர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகள், வயது குறைந்த சிறுமிகளும் இதில் அடங்குவர், அவர்களை ஓட்டல்கள் அல்லது அலுவலக அடுக்குமாடிகளில் இறக்கிவிடும் கங்னம் பகுதியின் பின்புறம் உள்ள சிறிய தெருக்களுக்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். அது ''சவாலான காலமாக'' இருந்தது என்றார் அவர்.

''கேளிக்கை விடுதிகளுக்குள், விடுதிகளுக்கு வெளியில், கார்களின் பின்னால் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக போதை மருந்து தரப்பட்டு, அடிக்கப்பட்டதை எல்லாம் பார்த்திருக்கிறேன். வாரத்தில் மூன்று முதல் நான்கு முறைகள் இதை நான் பார்த்திருக்கிறேன்,'' என்று பாதிரியார் கூறினார்.

'சுழற்சி முறையில் எங்களை உடல்களை தந்தோம்'

பல சிறுமிகளை இந்தக் கேளிக்கை விடுதிகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல ஜூ முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. அவர்கள் யாரையும் நாங்கள் சந்திக்க அவர் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் மூலமாக தொலைபேசியில் இருவரிடம் கேள்விகள் கேட்க அனுமதித்தார்.

16 வயதில் கேளிக்கை விடுதி வேலையில் சேர்க்கப்பட்ட ஒரு சிறுமிக்கு, தனது வேலை பற்றி எதுவும் தெரியவில்லை.

''நாங்கள் அங்கே உள்ளபோது குடித்துக் கொண்டும், போதை மருந்து எடுத்துக் கொண்டும், முட்டாள்களைப் போட நடனம் ஆடிக் கொண்டும் இருப்போம். சுழற்சி முறையில் எங்களை உடலை தந்து கொண்டிருப்போம்,'' என்று அந்தச் சிறுமி கூறினார்.

ஆண்கள் ''ராஜாவை போன்றவர்கள்'' என்று சிறுமி குறிப்பிட்டார். சிறுவயதினரான இருவருமே, பாலியல் உறவு பல சமயம் மூர்க்கத்தனமானதாக இருக்கும் என்றும், தங்களுடைய தோழிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்பட்டதாகவும் கூறினர்.

பல வாடிக்கையாளர்கள் காணொளி எடுத்துக் கொள்வார்கள். அப்பாவியைப் போல நடிக்குமாறு அவளுக்குச் சொல்லப்படும். சில நேரங்களில் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதைப் போல நடிக்கும்படியும் சொல்வார்கள்.

''என்னைப் போன்ற சிறுமிகளை வைத்து அவர்கள் ஆபாச காணொளிகள் எடுக்கின்றனர். அவர்கள் படம் பிடிப்பது எங்களுக்குத் தெரியாது என்பதைப் போல நான் நடிக்க வேண்டும்,'' என்று ஒரு சிறுமி கூறினார்.

கேளிக்கை விடுதியில் இருந்து வெளியேறிவிடாமலோ அல்லது காவல் துறையினரிடம் சென்றுவிடாமலோ தடுப்பதற்கு, மிரட்டுவதற்காக இந்த காணொளிகள் பயன்படுத்தப்படலாம் என்று ஜூ கூறுகிறார்.

பல சமயங்களில் மோட்டல் அறைகளில் இந்த ஆண்களுடன் தாங்கள் தனியாக இருந்ததில்லை என்று சிறுவயது பெண்கள் தெரிவித்தனர்.

போதை மருந்து தரப்பட்டு வேறு கேளிக்கை விடுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்களுடன் விவிஐபிக்கள் வருவார்கள் என்றும், அவர்கள் தாக்கப்படுவது அல்லது பாலியல் வல்லுறவு செய்யப்படுவதை தாங்கள் பார்த்திருப்பதாகவும் ஒருவர் கூறினார்.

சில பெண்கள் கஞ்சா கொடுத்து ஈர்க்கப்படுகின்றனர். ஆனால், ''அந்தப் பெண் தங்களுக்கு எதிராக வழக்கு தொடருவார் என்ற சந்தேகம் இருந்தால் அவருக்கு GHB கொடுத்து அவருக்குத் தெரியாமலே காணொளி எடுத்துக் கொள்வார்கள்'' என்றார் அவர்.

''அவர்கள் சுயகட்டுப்பாடு இல்லாதிருப்பார்கள். எதையும் கைகளால் பிடிக்க முடியாது. அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது.''

இப்போது காவல் துறை விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், பாலியல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று பாதிரியார் மூலமாக ஒரு பெண்ணிடம் கேட்டோம்.

``எல்லோரும் செத்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்'' என்று அந்தப் பெண் கூறினார்.

``மனோதிடம் உள்ளவர்களால் மட்டுமே கங்னம் நிகழ்வுகளுக்குப் பிறகு உயிர்வாழ முடியும்'' என்றார் அவர்.

'செக்சியான அழகான பெண்களே பலியாகிறார்கள்'

தென்கொரியாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது. ஆனாலும் அதிகமாக இருக்கிறது. ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் அளவுக்கு இதில் புரள்கிறது. விலைமாதர் சேவையை நாடுபவர்களுக்கு, அதற்கான பற்றாக்குறை ஏதும் இல்லை.

தனக்குத் தெரிந்த சில ஆண்கள் பாலியல் தொழிலாளிகளை விரும்புவதில்லை என்று பணக்கார வாடிக்கையாளர் ஒருவர் கூறினார்.

பாலியல் தொழிலாளிகளுடன் சாதாரண பெண்களை ஒப்பிடுவது, ''வாடகைக் காருடன் சொந்த காரை ஒப்பிடுவதைப் போல'' என்று அவர் குறிப்பிட்டார்.

''சாதாரண பெண்ணை அவ்வளவு எளிதாக நீங்கள் தொட்டுவிட முடியாது. எல்லோருக்கும் அனுமதிக்கப்படாத சில விஷயங்கள் கிடைக்கும்போது எதையோ அடைந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு வரும்'' என்றார் அவர்.

சம்மதம் இல்லாத பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது, பாலியல் வல்லுறவு தானே என்று அவரிடம் நாங்கள் கேட்டோம்.

''சாதாரணமாகக் குடிக்கும் சாதாரணப் பெண்மணி தன்னுடைய உள்ளாடையைக் கழற்ற மாட்டார். எனவே ஆண்கள் என்ன செய்வார்கள்?'' என்று கோபமாக அவர் கேட்டார். ``அந்தப் பெண்ணை குடிக்க வைக்கிறான். ஆனால் அவர் மறுக்கிறார். நீங்கள் என்ன செய்ய முடியும்?'' என்கிறார்.

''நடனம் ஆடுவதற்காக மட்டுமே இங்கே வந்தேன் என்று நீங்கள் சொல்வீர்கள். சரிதான். ஆனால் நடனமாட மட்டும் மற்றவர்கள் விடுவார்களா? இது ஒரு காடு. பலவற்றைப் பார்ப்பதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பது சரிதான். ஆனால் உங்களைப் பிடிப்பதற்காக முதலைகள், சிங்கங்கள் இங்கே இருக்கின்றன. செக்சியான அழகான பெண்கள் இதில் பலியாகிறார்கள்'' என்று அவர் கூறினார்.

'அழுகை நிறைந்த பெண்களின் வாக்குமூலங்கள்'

ஆண்களால் இரையாக்கப்பட்டோம் என்ற சிந்தனையால் ஏற்படும் மன உளைச்சல் தென்கொரியாவில் பல பெண்களுக்கு இருக்கிறது. கடந்த ஆண்டு ``ரகசிய கேமராக்களை'' எதிர்த்து சோல் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பெண்களுக்குத் தெரியாமல், பாலியல் ரீதியில் உடலை வெளிக்காட்டும் விடியோக்களை இதுபோன்ற ரகசிய கேமராக்கள் மூலம் எடுப்பதை எதிர்த்து அந்தப் போராட்டம் நடந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரகசிய காமிராக்கள் மற்றும் பழிவாங்கும் நோக்கிலான ஆபாசப் படங்கள் பிரச்சினையால் தென்கொரிய பெண்களிடம் கோபம் அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெற்ற பெரிய பேரணியில் கிரீன் பார்ட்டியை சேர்ந்த ஷின் ஜி-யே உரையாற்றியபோது, ரகசிய கேமராக்கள் பிரச்சனை பல பத்தாண்டுகளாக இருப்பதாகக் கூறினார்.

``பல கேளிக்கை விடுதிகளில், தாங்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக அழுகையுடன் பெண்கள் வாக்குமூலங்கள் அளித்திருக்கிறார்கள்'' என்று அந்தப் பெண்மணி தெரிவித்தார்.

பிரபலமானவர்கள் கைது செய்யப்படும்போதுதான் இது பேசப்படுகிறது என்ற கோபம் உள்ளது. இதில் காவல் துறையினரின் ஒத்துழைப்பும் இருக்கிறது என்று பெண்கள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனைகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Burning Sun Scandal என்று கூறப்படும் அவதூறு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் 354 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 87 பேர் இடைத் தரகர்களாக இருந்தவர்கள், பாலியல் உறவு மற்றும் பாலியல் வல்லுறவை படம் பிடித்தவர்கள். 20 சம்பவங்களில் பெண்களுக்கு போதை மருந்து தரப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று தன்னார்வல அமைப்பினர் கூறுகின்றனர். `` ரகசிய கேமராக்கள்'' பிரச்சனையும் இருக்கும் என்றாலும், ``நீதித் துறை புள்ளிவிவரங்களில் இவை இல்லை'' என்று வழக்கறிஞர் சா மீ-கியுங் தெரிவித்தார்.

இரவுநேர கேளிக்கை விடுதிகள் பற்றிய புகார்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

காவல் துறையினர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு அதிபர் மூன் ஜே-இன் உத்தரவிட்டுள்ளார். ``காவல் துறையினரும், வழக்கு நடத்துபவர்களும் வேண்டுமென்றே முழுமையாக விசாரணை நடத்தாமல் விட்டனர் என்பதற்கும், உண்மை வெளியாகாமல் தடுத்துவிட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் இருப்பதாக'' அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு விசாரணைக்குப் பிறகு, கங்னம் காவல் நிலைய தலைமை அதிகாரி பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவு பற்றி தகவல் தெரிவிப்பது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கஷ்டமான விஷயம். தென் கொரியாவில் பல பெண்கள், இந்தப் புகார்களை கூறுவதற்குத் தயங்குகின்றனர். களங்கம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறார்கள். ஆணாதிக்க சமுதாயத்தால் தங்களுக்கு தீர்ப்பு முடிவு செய்யப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Image caption அனைத்து புகார்களும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று கண்காணிப்பாளர் ச்சோய் ஹியுன்-ஆ கூறுகிறார்.

போதை மருந்துகள் பயன்படுத்தப் பட்டிருப்பதால், நடந்த விவரங்களை பெண்கள் நினைவுபடுத்துவது சிரமமாக இருக்கிறது.

GHB பயன்படுத்தப்பட்ட முதலாவது வழக்கை தென்கொரிய நீதிமன்றத்தில் கொண்டு வருவதற்கு வழக்கறிஞர் கிம் ஜியோங்-ஹிவான் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இரவில் ``நடந்தவற்றை பாதிக்கப்பட்ட பெண்ணால் மீண்டும் நினைவுக்கு கொண்டு வர முடியாத அளவுக்கு'' செயல்படக் கூடியதாக GHB -யின் இயல்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

``எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த GHB சீக்கிரத்தில் உடலில் இருந்து வெளியேறிவிடும் என்பதால், ரத்தப் பரிசோதனையில் அதைக் கண்டுபிடிக்க முடியாது. எனவே அதற்கான ஆதாரத்தை திரட்டுவது கடினமாக உள்ளது'' என்றும் அவர் சொல்கிறார்.

நம்பாமல் போய்விடும் என்ற பயமும் இருக்கிறது. பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக அவர்கள் சொல்கிறார்கள். இதுபோன்ற சில குற்றச் செயல்களை மூடிமறைக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள காவல் துறையால், இதுபோன்ற அதிகார பலம் மிக்கவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்க சிறப்புப் பிரிவு ஒன்றை கொரிய தேசிய காவல் முகமை உருவாக்கியுள்ளது. ``அதிகாரிகள் முழுமையாக நேர்மையாக விசாரிப்பார்கள். தென்கொரிய குடிமக்களுக்கு காவல் துறை மீது பெரிய நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு செயல்படுவார்கள்'' என்று கண்காணிப்பாளர் ச்சோய் ஹியுன்-ஆ பிபிசியிடம் தெரிவித்தார்.

"பெண்களுக்கு கட்டாயப்படுத்தி போதை மருந்து தரப்படும் இடங்களில் பாலியல் குற்றங்களைத் தடுக்க'' நடவடிக்கை எடுப்பதில் தங்கள் குழுவினர் கவனம் செலுத்துவார்கள் என்று அந்தப் பெண் அதிகாரி கூறினார்.

"இது பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்றார் அவர்.

இந்தப் பிரச்சனை முடிந்ததும், மிரட்டி பணிய வைக்கும் செயல்பாடுகள் தொடரும் என்று சில பெண்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால், இதை எதிர்த்துப் போராடுவதில் தன்னார்வலர்கள் உறுதியாக உள்ளனர்.

தாம் ஒரு பெண்ணியவாதியாகவோ அல்லது போராட்டக்காரராகவோ மாறுவோம் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்தது கிடையாது என்று என்னிடம் கிம் தெரிவித்தார். ஆனால் பாலியல் வல்லுறவு புகாரை அடுத்து, அது மாறிவிட்டது என்கிறார்.

``இந்த கேடுகெட்ட ஆண்களைப் பிடிக்க வேண்டும் என்று உண்மையில் நான் விரும்பினேன். சட்டம் மாற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் போதை மருந்தை பயன்படுத்த முடியாத மற்றும் இனிமேல் யாருமே பாதிக்கப்படாத சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் அவர்.

நீங்கள் பாலியல் அத்துமீறல் அல்லது வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால், BBC Action Line-ல் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

படங்கள் : எம்மா ரஸ்ஸல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :