இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் - என்ன காரணம்? மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை AFP

'வெப்பம்'

இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம். 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது.

'பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் அவலம்'

குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர்.

விரிவாகப் படிக்க:பணத்துக்காக பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் தொடுக்கும் அவலம்

'இலங்கையில் 4,000 பெண்களுக்கு மலட்டுத்தன்மை - விசாரணை குழுவை நியமித்தது அரசு'

இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.இலங்கையில் வைத்தியர் ஒருவரினால் 7,000 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 4,000 அறுவை சிகிச்சைகளின்போது, பெண்களுக்கு மீண்டும் குழந்தை பிறக்காத வண்ணம் மலட்டு தன்மை ஏற்படுத்தப்பட்டதாகவும் சிங்கள ஊடகம் ஒன்றில் கடந்த மாதம் 23ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது.

விரிவாகப் படிக்க:4,000 பெண்களுக்கு மலட்டுத்தன்மை - விசாரணை குழுவை நியமித்தது இலங்கை அரசு

'சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை'

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா, வழக்கு விசாரைணையின் நிதித்தம் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று, புதன்கிழமை, முதல் தடவையாக முன்னிலைப் படுத்தப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் சஹ்ரான் குழுவினர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சஹ்ரானின் 28 வயதுடைய மனைவி ஹாதியாவும் அவரின் மூன்று வயது மகளும் உயிர் தப்பியிருந்தனர்.

விரிவாகப் படிக்க:சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை

''எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம்''

எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட கனகராஜின் சகோதரர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீரங்கராஜன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகராஜ் தான் காதலித்த 16 வயதாகும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்னை திருமணம் செய்து கொள்ள வெண்டும் என்ற எண்ணத்தில், செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறி கண்மணியை சந்திக்க சென்றுள்ளார்.

விரிவாகப் படிக்க:''எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம்''

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :