வடகொரிய அதிபர் கிம்மை திடீரென சந்திக்க அழைத்த டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

டிரம்ப் படத்தின் காப்புரிமை Reuters

வட மற்றும் தென்கொரியாவை பிரிக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தன்னை சந்திக்க வடகொரிய அதிபர் கிம்முக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சனிக்கிழமையன்று தென் கொரிய தலைநகர் சோலுக்கு இரண்டு நாள் பயணமாக செல்லும் டிரம்ப், வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியா அணு ஆயுதங்களை கைவிடுதல் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கிம்மை சந்திக்க அழைப்பு விடுத்தார்.

"கிம் அங்கிருந்தால் இருவரும் இரண்டு நிமிடங்கள் சந்தித்துக் கொள்வோம். அதுவே போதும்." என சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானுடனான காலை சிற்றுண்டி சந்திப்பு தொடங்குவதற்கு முன் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் இதுகுறித்து டிரம்புடன் உள்ள அதிகாரிகளுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் மற்றும் வடகொரியாவுக்கு இடையே இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு பயணம் செய்யவிருந்தார் டிரம்ப். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம் வியட்நாமில் உள்ள ஹனோயில், இருநாட்டு அதிபர்களும் சந்தித்ததிலிருந்து வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை.

வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான இரண்டாவது பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்தது.

வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என அமெரிக்கா தெரிவிக்கிறது. தங்கள் நாட்டீன் மீது விதிக்கப்பட்ட தடைகளை விலக்க வேண்டும் என வடகொரியா கேட்கிறது.

தாய் மற்றும் மகள் பிகாரில் மொட்டையடிக்கப்பட்ட கொடூரம்

படத்தின் காப்புரிமை ANI

பிகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் இந்த தாய் மற்றும் மகளிடம் தவறாக நடக்க சிலர் முயற்சி செய்தனர்.

அதனை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது, அப்பகுதியை சேர்ந்த வார்ட் கவுன்சிலர, 2 பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிசீர்த்திருத்துபவரை அழைத்து தாய் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து அவர்களை கிராமம் முழுவதும் வலம் வரச் செய்தனர்.

இதனை தொடர்ந்து தாயும், மகளும் இது குறித்து புகார் செய்ததன் அடிப்படையில், வார்ட் கவுன்சிலர் மொஹம்மது குர்ஷித், கிராமத் தலைவர் மொஹம்மது அன்சாரி மற்றும் முடிதிருத்தம் செய்த தஷ்ரத் டாகூர் உள்ளிட்ட 7 பேர் மீது முதல்கட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்தனர்.

விரிவாக படிக்க: பாலியல் வல்லுறவை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டையடிக்கப்பட்ட கொடூரம்

அதிகரிக்கும் வெப்பம்

படத்தின் காப்புரிமை AFP

மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகபட்சமாக இன்று பிரான்ஸில் 45.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

16 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கடந்த 2003ஆம் ஆண்டில், இங்கு பதிவான 44.1 டிகிரி செல்ஸியஸே இதுவரை அதிக வெப்பநிலை பதிவாக இருந்து வந்தது.

பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஆக்னஸ் பூஷின் இதுகுறித்து கூறுகையில், "அதிக அளவு வெப்ப அலையால் அனைவரும் ஆபத்தில் உள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க: பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு

இந்தியாவின் முதல் திருநங்கை மாணவர் தலைவர்

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான லயோலா கல்லூரியின் மாணவர் அமைப்பான லயோலா மாணவர் பேரவைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் துணைச் செயலராக நலீனா பிரஷீதா (25) என்ற திருநங்கை தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

லயோலா மாணவர் பேரவைக்கு 2019-2010ஆம் வருட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நலீனா பரஷீதா, துணைச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

நலீனாவின் சொந்த ஊர் திண்டுக்கல். சிறுவயதிலிருந்தே தன்னைப் பெண்ணாக உணர்ந்த நலீனா, 11ஆம் வகுப்புப் படிக்கும்போதே, தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள முடிவுசெய்தார்.

ஆனால், வீட்டில் இருந்தவர்கள் ஏற்காதேோலக நிலையில், வீட்டைவிட்டு வெளியேறினார். பால் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். பள்ளிப் படிப்பும் பாதியில் நின்றுபோனது. இதற்குப் பிறகு வெளியிலிருந்து 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற நலீனா, லயோலாவில் இளமறிவியல் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தார்.

விரிவாக படிக்க: இந்தியாவின் முதல் திருநங்கை மாணவர் தலைவர்: தேர்வானது எப்படி?

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்

படத்தின் காப்புரிமை FACEBOOK

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அமமுகவில் இன்னும் பலர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார்.

தமிழகத்தின் உரிமையை ஸ்டாலின் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துணிச்சலான முடிவு எடுக்கக்கூடியவர் என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் திமுகவில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்தபோது தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த செந்தில் பாலாஜி ஏற்கனேவே திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க:திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :