அமைதி வழி போராட்டங்களால் மாற்றத்தை கொண்டு வர முடியுமா? - வரலாறு சொல்வதென்ன?

சிறிய மக்கள் தொகையால் எப்படி உலகை மாற்ற முடியும்? படத்தின் காப்புரிமை Getty Images

1986ஆம் ஆண்டில் மணிலாவில் லட்சக்கணக்கான பிலிப்பின்ஸ் மக்கள் தெருக்களுக்கு வந்து அமைதிப் பேரணியாகச் சென்று, மக்கள் அதிகார இயக்கமாக நான்கு நாட்கள் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக மார்க்கோஸ் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தது.

2003ஆம் ஆண்டில், ஜார்ஜியாவில் ரத்தமின்றி நடைபெற்ற ரோஜா மலர் புரட்சியில் எட்வர்டு ஷெவர்ட்நாட்சே ஆட்சி அகற்றப்பட்டது. போராட்டக்காரர்கள் ரோஜா மலர்களைக் கையில் ஏந்தி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூடான் மற்றும் அல்ஜீரியாவில் நடந்த அமைதிவழிப் போராட்டங்கள் காரணமாக, தசாப்தங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த அதிபர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

எல்லா நிகழ்வுகளிலும், சாமானியர்களின் எதிர்ப்பால் அரசியல் அதிகாரங்கள் சாய்க்கப்பட்டு, அடிப்படை நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அஹிம்சை வழி

அஹிம்சை வழி போராட்ட அணுகுமுறைகளைக் கையாள்வதற்கு நெறி சார்ந்த பல காரணங்கள் உள்ளன. ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலாளராக இருக்கும் எரிகா செனோவெத் நடத்திய ஆய்வில், மக்கள் பணிய மறுப்பது தார்மிக வாய்ப்பாக இருப்பதுடன் மட்டுமின்றி, உலக அரசியலை பெரிய அளவில் உருவாக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகவும் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் நடந்த நூற்றுக்கணக்கான பிரச்சார இயக்கங்களை ஆய்வு செய்த செனோவெத், அமைதிவழி பிரச்சார இயக்கங்கள், வன்முறை இயக்கங்களைவிட இரு மடங்கு அதிக வெற்றி வாய்ப்பு கொண்டதாக இருந்திருக்கின்றன என்று கூறியுள்ளார். சரியான செயலாற்றல் பல அம்சங்களைப் பொருத்து அமையும் என்றாலும், தீவிரமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, மக்கள் தொகையில் 3.5% மக்கள் தீவிரமாகப் போராட்டங்களில் பங்கேற்றாலே போதுமானதாக இருந்திருக்கிறது என்று அந்தப் பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடந்த இன அழிப்புக்கு எதிரான போராட்டத்தில், செனோவெத்தின் தாக்கம் இருந்ததைக் காணமுடிந்தது. அவர் கண்டுபிடித்த விஷயங்கள் தான் தங்களுக்கு நேரடியான உந்துதலைத் தந்தன என்று அந்தப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அந்தப் பெண்மணி எப்படி இந்த முடிவுகளுக்கு வந்தார்?

வரலாறு முழுக்க தாக்கம் ஏற்படுத்திய பலருடைய கோட்பாடுகளின் அடிப்படையில் செனோவெத்தின் ஆய்வுகள் அமைந்திருக்கின்றன என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிரிக்க - அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளர் சோஜோர்னர் ட்ரூத், வாக்குரிமை கேட்டுப் போராடிய சூசன் பி. அந்தோணி, இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்தி, அமெரிக்க மக்கள் உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் போன்ற அனைவருமே அமைதிவழிப் போராட்டத்தின் சக்தியை ஏற்றுக் கொள்ளத்தக்க அளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும், 2000வது ஆண்டுகளின் மத்தியில் இந்த ஆய்வைத் தொடங்கியபோது, பெரும்பாலான சூழ்நிலைகளில் ஆயுதப் போராட்டத்தைவிட, அமைதிவழிப் போராட்டம் அதிக சக்தி மிக்கதாக இருக்கும் என்ற வாதத்தை செனோவெத் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்துக் கொண்டிருந்த அவர், தீவிரவாதம் அதிகரித்ததற்கான காரணங்களைப் பற்றி ஆய்வு செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வாஷிங்டன் டி.சி.-யை தலைமையிடமாகக் கொண்ட, அமைதிவழிப் போராட்டத்துக்கான சர்வதேச மையம் (ICNC) என்ற லாபநோக்கற்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி நிலையிலான பயிலரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்ட போது இந்த ஆய்வை அவர் தொடங்கி இருக்கிறார். நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய அமைதிவழிப் போராட்டங்களுக்கான உதாரணங்கள் அந்தப் பயிலரங்கில் முன்வைக்கப்பட்டன. பிலிப்பின்ஸில் நடைபெற்ற மக்கள் அதிகார போராட்டங்கள் உள்ளிட்டவை அங்கு தெரிவிக்கப்பட்டன.

ஆனால் அமைதிவழிப் போராட்டங்களாலும், ஆயுதப் போராட்டத்தாலும் கிடைத்த வெற்றிகள் குறித்து யாருமே ஒப்பீடு செய்யவில்லை என்பது செனோவெத்துக்கு ஆச்சர்யத்தைத் தந்தது; சில வகையான உறுதிப்படுத்தல் பாரபட்சத்தின் மூலமாக ஆய்வுத் தலைப்புகள் தேர்வு செய்யப்படுவது காரணமாக இருக்கலாம். ``சமூகத்தில் பெரிய நிலைமாற்றத்தை உருவாக்குவதில் அமைதிவழிப் போராட்டம் செயல்திறன்மிக்க வழிமுறையாக இருக்குமா என்ற சந்தேகம் காரணமாகத்தான் உண்மையில் இந்த ஆய்வைத் தொடங்கினேன்'' என்று செனோவெத் தெரிவித்தார்.

ICNC-யில் ஆராய்ச்சியாளராக இருந்த மரியா ஸ்டீபனுடன் இணைந்து பணியாற்றிய செனோவெத், 1900 முதல் 2006 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் பற்றி கிடைத்த தகவல்களை எல்லாம் விரிவாக ஆய்வு செய்தார். அந்தத் தகவல் தொகுப்புகள் குறித்து, பின்னர் இந்தத் துறையில் உள்ள மற்ற நிபுணர்களுடன் விவாதிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது தான் அந்தப் போராட்டங்களுக்கான முதன்மையான காரணமாக இருந்துள்ளது.

போராட்டம் தொடங்கி ஓராண்டு காலத்துக்குள் அதன் இலக்கை அடைந்திருந்தால் மற்றும் அதன் செயல்பாடுகளால் நேரடி பலன்கள் கிடைத்திருந்தால் அது வெற்றிகரமான போராட்டம் என கணக்கில் எடுக்கப்பட்டது. வெளிநாட்டு ராணுவத் தலையீடு மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தால், அது வெற்றியாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை. குண்டுவீச்சுகள், கடத்தல்கள், கட்டமைப்புகள் அழிக்கப்படுதல் அல்லது மக்களுக்கோ சொத்துகளுக்கோ ஊறு விளைவிக்கும் செயல்பாடுகள் இருந்தால், அது வன்முறை வழி போராட்டமாகக் கருதப்பட்டது.

``வன்முறைப் போராட்டம் பற்றி தீர்மானிக்க கடினமான சோதனைகளை நாங்கள் முயற்சி செய்ு பார்த்தோம்'' என்று செனோவெத் தெரிவித்தார். (செனோவெத் மற்ரும் ஸ்டீபனின் ஆய்வுகளின்படி இந்தியாவில் நடந்தது அமைதிவழிப் போராட்டம் அல்ல என்று கருதப்படும் அளவுக்கு தகுதி வரையறைகள் கடுமையாக இருந்தன. போராட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பிரிட்டனின் ராணுவத்துக்கான ஆதாரவளங்கள் குறைந்ததும் முடிவை நிர்ணயிப்பதாக இருந்தது என்பதால் இவ்வாறு கருதப்பட்டது.)

ஆய்வின் முடிவில் அவர்கள் 323 வன்முறை மற்றும் அமைதிவழிப் போராட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரித்திருந்தனர். Why Civil Resistance Works: The Strategic Logic of Nonviolent Conflict என்ற புத்தகத்தில் அவர்கள் வெளியிட்ட முடிவுகள் அதிர்ச்சி தருவதாக இருந்தன.

எண்ணிக்கையில் பலம் இருக்கிறது

படத்தின் காப்புரிமை Getty Images

ஒட்டுமொத்தமாக, வன்முறை போராட்டங்களைவிட, அமைதிவழிப் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான வன்முறைப் போராட்டங்களின் வெற்றி வாய்ப்பு 26% ஆக இருந்த நிலையில், அமைதிவழிப் போராட்டங்களின் வெற்றி வாய்ப்பு 53% ஆக அந்தக் காலக்கட்டத்தில் இருந்திருக்கிறது.

இது ஒரு பகுதி எண்ணிக்கையின் பலத்தைப் பொருத்து அமைந்திருக்கிறது. பரவலான பகுதிகளில் இருந்து உறுப்பினர்களை சேர்ப்பதால், நகர்ப்புறங்களில் இயல்பு வாழ்க்கையை முடக்கும் வகையிலும், சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்பதால், வன்முறைப் போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன என்று செனோவெத் கூறுகிறார்.

உண்மையில், அவர்கள் ஆய்வு செய்த 25 பெரிய போராட்டங்களில், 20 போராட்டங்கள் அமைதி வழியிலானவை. அவற்றில் 14 போராட்டங்கள் முழு வெற்றியில் முடிந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வன்முறைப் போராட்டத்தில் சராசரியாக பங்கேற்பவர்களை (50,000) விட, அமைதிவழிப் போராட்டத்தில் சராசரியாகப் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை (200,000) நான்கு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

``அதிகாரத்தைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளவர்கள் அல்லது ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பெரிய சவாலாக அல்லது அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் பலத்தை உருவாக்குவதற்கு எண்ணிக்கைகள் முக்கியமானதாக இருந்திருக்கின்றன'' என்று செனோவெத் கூறியுள்ளார். பரவலான ஆதரவைப் பெறுவதில் அமைதிவழிப் போராட்டம் தான் சிறந்த வழிமுறையாக இருந்திருக்கிறது என்கிறார் அவர்.

மொத்த மக்கள் தொகையில் 3.5% பேர் தீவிரமாக போராட்டத்தில் பங்கேற்றால், வெற்றி கிடைப்பதைத் தடுக்க முடியாது என்ற நிலை இருந்திருக்கிறது.

``அதிகபட்ச செயல்பாடு இருந்த காலத்தில் 3.5% பேரின் பங்களிப்பு இருந்தால், அந்த இயக்கம் தோல்வி அடைந்தது கிடையாது'' என்கிறார் செனோவெத். இதை அவர் ``3.5% ரூல்'' என்று குறிப்பிடுகிறார்.

மக்கள் அதிகார இயக்கம் தவிர, 1980களில் எஸ்டோனியாவில் நடந்த பாடல் புரட்சி, 2003 தொடக்கத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்ற ரோஜா மலர் புரட்சி ஆகியவை பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய முடிவுகள் பற்றி தாம் ஆச்சர்யப்பட்டதாக செனோவெத் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அமைதிவழிப் போராட்டங்கள் உயர் நிலையில் ஆதரவை திரட்டும் என்ற காரணங்களை அவர் முன்வைக்கிறார். அநேகமாக அருவருக்கத்தக்க செயல்கள் மற்றும் ரத்தம் சிந்துதள் போன்ற காரணங்களால் மக்கள் வன்முறைப் போராட்டங்களை விரும்பாதிருக்கலாம். அமைதிவழிப் போராட்டங்கள் தார்மீக ரீதியில் உயர்வான போராட்டமாக இருப்பதால் அதை ஆதரித்திருக்கலாம்.

அமைதிவழிப் போராட்டத்தில் பங்கேற்கவும் சில தடைகள் உள்ளன என்று செனோவெத் சுட்டிக்காட்டுகிறார். போராட்டத்தில் பங்கேற்க உங்களுக்கு உடல் தகுதியோ, ஆரோக்கியமோ தேவைப்படாது. ஆனால் வன்முறைப் போராட்டத்தில், உடல் தகுதியும் ஆரோக்கியமும் உள்ள இளைஞர்களின் ஆதரவை நம்பியிருக்க வேண்டும். பல வகையான அமைதிவழிப் போராட்டங்களில் ஆபத்துகள் இருந்தாலும் - 1989ல் சீனாவில் தியானென்மன் சகுக்கத்தில் நடந்த போராட்டத்தை நினைத்துப் பாருங்கள் - அமைதிவழிப் போராட்டங்கள் பற்றி வெளிப்படையாக விவாதிப்பது எளிதான விஷயம் என்கிறார் செனோவெத். அதனால் அந்த நிகழ்வு குறித்த செய்திகள் பரவலான மக்களை எளிதில் சென்றடைகிறது என்று கூறுகிறார். மாறாக, வன்முறைப் போராட்டத்துக்கு, ஆயுதங்கள் கிடைக்க வேண்டும், ரகசியமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும், எனவே அது பொது மக்களை சென்றடையாது என்று அவர் விளக்குகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக இருப்பதால் காவல் துறை மற்றும் ராணுவத்தினரின் ஆதரவும் இதற்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.போராட்டத்தை ஒடுக்க அரசு இந்த இரு தரப்பினரையும் தான் நம்பியிருக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி அமைதிவழியில் போராடும்போது, தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரும் அதில் இருக்கக் கூடும் என்று பாதுகாப்புப் படையினரிடம் அச்சம் ஏற்படலாம் - அதனால் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் முற்படாமல் போகலாம். ``அல்லது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தங்களுடைய கப்பலின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது, இனியும் கப்பலுடன் சேர்ந்து மூழ்க வேண்டாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிடக் கூடும்'' என்று செனோவெத் கூறுகிறார்.

செயல்திட்டங்களைப் பொறுத்த வரையில், பொது வேலை நிறுத்தம் என்பது ``அநேகமாக அதிக சக்தி மிகுந்ததாக இருந்திருக்கிறது. அதிக பலம் மிக்கதாக இல்லாமல் போனாலும், அமைதிவழி போராட்டத்தின் ஒற்றை வழிமுறையாக அது இருந்திருக்கிறது'' என்கிறார் செனோவெத். மற்ற போராட்ட முறைகள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாதவையாக இருக்கும் நிலையில், இதில் தனிப்பட்ட பங்களிப்பு இருக்கும். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களை முதலாளிகளாகக் கொண்ட நிறுவனங்களில் எந்தப் பொருளையும் வாங்குவதில்லை என்று கருப்பர் இன மக்கள் பலர் நிராகரிப்பு செய்த இனப் பாகுபாட்டு ஆட்சிக் காலத்தில் நடந்த நுகர்வோர் புறக்கணிப்புப் போராட்டத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன் விளைவாக உயர்தட்டு நிலையில் இருந்த வெள்ளையர் இனத்தவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இறுதியாக 1990களில் விடுதலை கிடைத்தது.

``ஆயுதம் ஏந்திய போராட்டத்தைக் காட்டிலும், மக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தாத வகையில், அமைதிவழிப் போராட்டங்களை நடத்துவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக எண்ணிக்கை அதிகரிக்கும்போது இதற்கான தேவை இருக்கிறது.''

``அமைதிவழி போராட்டத்தின் நுட்பங்கள் வெளிப்படையாகத் தெரிவதால், எப்படி நேரடியாகப் பங்கேற்பது என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதிகபட்சமாக செயல்பாட்டை முடக்கும் வகையில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடிகிறது'' என்று செனோவெத் கூறுகிறார்.

மந்திர எண்ணிக்கை

இதெல்லாம் பொதுவான பாணிதான். இதன் வெற்றி வாய்ப்பு, வன்முறைப் போராட்டத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றாலும், 47% நேரங்களில் அமைதிவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ``அடக்குமுறைகளை தாங்கிக் கொள்ள முடியாதது மற்றும் அதிகாரத்தின் அடிப்படையை அசைப்பதற்கு'' தேவையான உத்வேகம் இல்லாமல் போனதால் சில நேரங்களில் இது தோல்வி அடைந்திருக்கிறது என்று செனோவெத்தும், ஸ்டீபனும் தங்களுடைய புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் 1950களில் ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட்டத்தைப் போல, சில அமைதிவழிப் போராட்டங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. அந்தப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது சுமார் 400,000 பேர் (மக்கள் தொகையில் சுமார் 2% ) பங்கேற்றபோதிலும், மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

செனோவெத் சேகரித்த தகவல் தொகுப்புகளின்படி, ஒரே ஒரு முறைதான் அமைதிவழிப் போராட்டத்திற்கு 3.5% என்ற உச்சபட்ச ஆதரவு கிடைத்து ஏறத்தாழ வெற்றி உறுதியானது. அந்த அளவுக்கு ஆதரவைத் திரட்டுவது என்பது எளிதான காரியமல்ல. பிரிட்டனில் ஓர் இயக்கத்தில் 2.3 மில்லியன் பேர் தீவிரமாக பங்கேற்க வேண்டும் (தோராயமாக பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாமின் மக்கள் தொகையைப் போல இரு மடங்கு.); அமெரிக்காவாக இருந்தால் 11 மில்லியன் குடிமக்கள் பங்கேற்க வேண்டும் - அது நியூயார்க் நகரின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம்.

ஈடுபாடு கொள்வதை நீடிக்கச் செய்யும் வகையில், நம்பகமான போராட்ட வழிமுறையாக இருப்பது அமைதிவழிப் போராட்டம் தான் என்பது மட்டும் நிஜமானதாக இருக்கிறது.

செனோவெத் மற்றும் ஸ்டீபனின் தொடக்க ஆய்வு முடிவுகள் 2011ல் வெளியிடப்பட்டன. அப்போதிருந்து அவர்களுடைய முடிவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. ``இந்த வகையிலான ஆராய்ச்சியில் அவர்களுக்கு எந்த வகையிலான தாக்கம் இருந்திருக்கும் என்று சொல்வது கடினமானது'' என்று சொல்கிறார் இன்டியானாவில் உள்ள நோட்ரே டேமே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாத்யூ சாண்ட்லர். இவர் மக்கள் போராட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

செனோவெத் மற்றும் ஸ்டீபனின் முடிவுகள் நிதர்சனமானவை என்று சர்வதேச மோதல்கள் குறித்து கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இசபெல் பிராம்சென் கூறுகிறார். ``வன்முறைப் போராட்டங்களைவிட அமைதிவழிப் போராட்டங்களின் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது இப்போது நிரூபிக்கப் பட்டுள்ளது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

``3.5% ரூல்'' என்பதைப் பொருத்தவரை, 3.5% என்பது சிறிய சிறுபான்மை என்றாலும், அவ்வளவு பேர் தீவிரமாகப் பங்கேற்கும்போது, மேலும் பலரும் மவுனமாக அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஓர் இயக்கத்தின் வெற்றி அல்லது தோல்விக்குக் காரணமாக அமையும் மற்ற அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது முயற்சி மேற்கொண்டுள்ளனர். உதாரணமாக, போராட்டத்தில் ஒற்றுமை இருக்க வேண்டியது முக்கியம் என்று பிராம்சென்னும், சாண்ட்லரும் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பஹ்ரைனில் 2011ல் தோல்வியடைந்த கிளர்ச்சியை உதாரணமாகக் கூறுகிறார் பிராம்சென். ஆரம்பத்தில் அந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான போராட்டக்காரர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், போட்டி அமைப்புகள் காரணமாக சீக்கிரமே அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்குள் அகப்பிணைவு இல்லாமல் போனதால், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உத்வேகத்தை அந்தக் கிளர்ச்சி இழந்துவிட்டது என்று கூறுகிறார் பிராம்சென்.

வாழ்க்கைக்கு நெருக்கமான விஷயங்கள் குறித்த போராட்டங்களில் - கருப்பர் வாழ்வியல் அம்ச இயக்கம், 2017ல் நடந்த மகளிர் பேரணி போன்றவற்றில் - செனோவெத் அண்மைக்காலமாக கவனம் செலுத்துகிறார். ஸ்வீடனைச் சேர்ந்த இயக்கவாதி கிரேட்டா தன்பெர்க் பங்கேற்பால் சமீபத்தில் பிரபலமான இனஅழிப்பு எதிர்ப்பு கிளர்ச்சியிலும் அவர் ஆர்வம் கொண்டிருக்கிறார். ``அவை எல்லாமே செயலற்ற தன்மையை எதிர்த்து நடந்தவை'' என்று அவர் கூறுகிறார். ``ஆனால் அவை எல்லாமே நம்ப முடியாத அளவுக்கு சிந்தித்து திட்டமிடப் பட்டிருக்கின்றன. அமைதிவழிப் போராட்டங்கள் மூலமாக எப்படி உணர்வுகளைக் கற்பிப்பது என்பதற்கான சரியான உள்ளுணர்வுகள் அவர்களிடம் இருப்பதைப் போலத் தெரிகிறது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, நமது வரலாற்றுப் புத்தகங்கள் போர் முறைகள் மீது அதிக கவனம் செலுத்துவதைக் காட்டிலும், அமைதிவழிப் போராட்டங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ``நாம் சொல்லும் பல வரலாறுகள் வன்முறையின் மீது கவனம் செலுத்துபவையாகவே உள்ளன - அவை மொத்தமாகப் பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்குள்பட்டு தான் வெற்றி பெறுவதற்கு வழி காண முற்படுகிறோம்'' என்று அவர் கூறுகிறார். ஆனால் அமைதிவழிப் போராட்டங்களால் வெற்றி கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம் என்றும் குறிப்பிடுகிறார்.

``சாமானிய மக்கள், எப்போதுமே, உலகில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் - பிறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையிலான - ஹீரோதனமான செயல்பாடுகளில் தான் ஈடுபடுகிறார்கள்'' என்றும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்