சூடான் போராட்டம்: ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள் மற்றும் பிற செய்திகள்

மற்றும் பிற செய்திகள் படத்தின் காப்புரிமை AFP

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பிறகு சூடான் கொந்தளிப்பில் இருந்து வருகிறது.

சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலம் மூன்று ஆண்டுகள் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று சூடானில் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு நாட்டின் அதிபராக ஒமர் அல் பஷீர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூடான் தலைநகரில் அச்சத்துடன் வாழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் - கிம் சந்திப்பு: வட கொரியாவின் அணு ஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தை

படத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI

வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.

ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம்.

"அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்," என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாக தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்தான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது.

ஒரே வருடத்தில் டிரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர்.

விரிவாக படிக்க : டிரம்பின் திடீர் அழைப்பை ஏற்ற கிம்: ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் சந்திப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி

படத்தின் காப்புரிமை Getty Images

ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.

கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து இந்த போட்டியில் டாஸில் வென்றவுடன் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் பேர்ஸ்டோ சதமடித்தார். ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்தனர். இந்தியாவின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா சதமடித்தார்.

இதனிடையே, புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 11 புள்ளிகள் பெற்று இந்தியா இரண்டாம் இடத்திலும், 11 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து அணி 10 புள்ளிகளுடன் நான்காமிடத்துக்கு முன்னேறியது.

சென்னை தண்ணீர் பிரச்சனை: இரண்டு நாள் மழையில் 18,000 லிட்டர் நீரை சேகரித்த தனியொருவர்

Image caption இந்திர குமார்

சென்னை முழுவதுமுள்ள நீர்நிலைகள் வறண்ட போன காரணத்தினால், மக்கள் தங்களது தினசரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு நிறைய பணம் மட்டுமின்றி நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர்.

ஆனால், அதே சென்னையை சேர்ந்த ஒருவர், குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.

69 வயதாகும் இந்திர குமாரை தண்ணீர் குழாய் இணைப்பு பெற்றுக்கொள்ளும் படி, பலமுறை குடிநீர் வாரியத்தின் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சென்னை மாநகர் முழுவதும் மக்கள் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திர குமாரின் இந்த விடாப்பிடியான நிலைப்பாட்டிற்கு அவரது வீட்டிலுள்ள திட்டமிடப்பட்ட நீர் தொட்டியே காரணம்.

"கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் மூன்று சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. அதன் மூலம், நான் கிட்டத்தட்ட 18,000 லிட்டர் தண்ணீரை சேகரித்துள்ளேன். தண்ணீர் பிரச்சனையில் வாடிக் கொண்டிருப்பது சென்னைதான், நானல்ல" என்று பிபிசியிடம் பேசிய இந்திர குமார் பெருமிதத்துடன் கூறினார்.

விரிவாக படிக்க : 'தண்ணீர் இணைப்பே வேண்டாம்' - 2 நாள் மழையில் 18,000 லிட்டர் நீரை சேகரித்தவர்

பருவநிலை மாற்றம்: 'தண்ணீர் பிரச்சனை, இடப்பெயர்வு, வறுமை' - ஓர் அழுத்தமான எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை மாற்றம் பணக்காரர்களைவிட ஏழைகளை மிக மோசமாக பாதிக்கும். அதேநேரம் ஜனநாயகத்திற்கு, தனிமனித உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை ஒன்று.

பருவநிலை மாற்றம் மனித உரிமை, ஏழ்மையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குமென ஓர் அறிக்கையை அண்மையில் ஐ.நா வெளியிட்டது. இந்த அறிக்கையை தயாரித்தவர் ஃபிலிப் ஆல்ஸ்டோன்.

அந்த அறிக்கையில் பல அஞ்சதக்க விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"கடந்த 50 ஆண்டுகால வளர்ச்சி, சுகாதாரத் துறை மற்றும் வறுமை ஒழிப்பில் நாம் அடைந்த முன்னேற்றம் இவை அனைத்துக்கும் அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க : பருவநிலை மாற்றம்: நாமும் நேரடியாக பாதிக்கப்படலாம் - எச்சரிக்கும் அறிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :