சர்கஸ் பயிற்சியாளரை தாக்கிக் கொன்ற புலிகள் மற்றும் பிற செய்திகள்

சர்கஸ் படத்தின் காப்புரிமை Getty Images

இத்தாலியின் தென்பகுதியில் உள்ள சர்கஸ் ஒன்றில், நான்கு புலிகள் சேர்ந்து அதன் பயிற்சியாளரை கொன்றுள்ளன.

ட்ரிகியனோ என்ற இடத்தில் உள்ள சர்கஸில் பணியாற்றி வந்த 61 வயதான எட்டோர் வெபர் என்பவரை முதலில் ஒரு புலி தாக்க, பின்னர் மற்ற மூன்று புலிகள் சேர்ந்து கொண்டன.

கூண்டிற்குள் அப்புலிகள் அவரை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன. பின்னர் சர்கஸ் ஊழியர்களும், மருத்துவர்கள் குழுவும் வந்து அவரை மீட்டனர். ஆனால், பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

படத்தின் காப்புரிமை LA REPUBBLICA
Image caption எட்டோர் வெபர் புலிகளுக்கு பயிற்சி கொடுத்தபோது முன்பு எடுக்கப்பட்ட படம்.

ஒர்ஃபெய் சர்கஸில் பணியாற்றி வந்த வெபர், இத்தாலியின் தலைசிறந்த சர்கஸ் பயிற்சியாளர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

சர்கஸில் வனவிலங்குகள் பயன்படுத்துவதை ஐரோப்பாவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் பாதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தடை செய்துள்ளன.

பட்ஜெட் 2019 - சாமானிய மக்களுக்கு என்ன இருக்கிறது?

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்முறையாக நேற்று நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோதி மாபெரும் வெற்றி பெற்றபிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துபோன நிலையில், வேலைவாய்ப்பின்மையும் வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்ற சூழலில் நடப்பு நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதாரம் வளரும் என நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

பெரும்பாலான குடிமக்களுக்கு வருமான வரி அதிகரிப்பு இல்லை என்றாலும் அவர்களின் செலவு உயரக்கூடும்.

விரிவாக படிக்க:இந்தியாவின் பட்ஜெட் - சாமானிய மக்களுக்கு என்ன இருக்கிறது?

"இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்"

படத்தின் காப்புரிமை FACEBOOK

தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான் தொடர்து செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார்.

ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு, அவர்களுக்காக போராடிய புலிகளைப் பற்றி நாடாளுமன்றத்திலேயே பேசினேன். இதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியது குற்றமா என வேலூர் சிறையில் இருந்தபடி ரிட் மனு தாக்கல் செய்தேன். ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள் என்று அவர் தெரிவித்தார்.

விரிவாக படிக்க: "இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்": வைகோ

நிர்மலா சீதாராமன் கொண்டு சென்ற தோல் பை

படத்தின் காப்புரிமை Getty Images

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்ற இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூட்கேசுக்குப் பதில் தோல் பையில் இந்த நிதிநிலை அறிக்கையை கொண்டு சென்றது சுவாரசியமான விவாதங்களை கிளப்பியுள்ளது.

வழக்கமாக நிதியமைச்சர்கள் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப் பயன்படுத்தும் சிவப்பு சூட்கேஸை நிர்மலா சீதாராமன் தவிர்த்துள்ளார்.

தோல் பையில் நிதிநிலை அறிக்கையை சீதாராமன் கொண்டு வந்தது, மேற்குலக சிந்தனையின் அடிமைதனத்தில் இருந்து விடுபடுவதை அடையாளப்படுத்துகிறது என்று சீதாராமனின் பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க:நிர்மலா சீதாராமன் கொண்டு சென்ற தோல் பை: சூட்கேஸ் தவிர்த்தது பற்றி விளக்கம்

பிரான்சில் சேவல் கூவியதால் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு

படத்தின் காப்புரிமை AFP

பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான ஒலெரானில் வாழும் ஓய்வு பெற்ற தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேவலின் சொந்தக்காரர் கொரீன் ஃபெசெள எல்லா சேவல்களும் என்ன செய்யுமோ அதை தான் தன்னுடைய சேவலும் செய்வதாக கூறியுள்ளார்.

விரிவாக படிக்க: சேவல் கூவியதை கண்டித்து வழக்கு தொடர்ந்த தம்பதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :