இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் பிற செய்திகள்

இரான் அதிபர் ஹசன் ரூஹானி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரான் அதிபர் ஹசன் ருஹானி

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் இரானுக்கு இடையேயான அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க பிரான்ஸ் மற்றும் இரான் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதனை பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை கைவிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர் மக்ரோங், இரான் அதிபர் ஹசன் ருஹானியிடம் தொலைபேசியில் பேசும்போது கவலை தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

இரானின் அணு திட்டத்தை முடக்கும் வகையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ருஹானி அழைப்பு விடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து பல குழப்பங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தியை இரான் குறைத்துக்கொண்டால், இரான் மீதான தடைகளை நீக்க அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

யாழ் கடலில் புதிய வகை பவளப் பாறைகள்

படத்தின் காப்புரிமை SL NAVY

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் இதுவரை கண்டறிராத புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சுழியோடிகளினால் இந்த புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிடுகிறது.

கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியல் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் இதுவரை கண்டிராத பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விரிவாக படிக்க:யாழ் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பவளப் பாறைகள்

முகிலன் ஆந்திர காவல்துறையிடம் உள்ளாரா?

படத்தின் காப்புரிமை FACEBOOK/MUGILAN SWAMIYATHAL

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2019ல் காணாமல் போனதாக கூறப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திரா காவல்துறையின் பிடியில் இருப்பது போன்ற ஒரு காணொளி வெளியாகி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து யூடியூபில் வெளியிட்ட பிறகு அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.

சிபிசிஐடி அதிகாரிகள் முகிலன் காணாமல் போனது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது என்று கூறியநிலையில், தற்போது அவர் ஆந்திர காவல்துறையினரால் திருப்பதி ரயில்நிலையத்தில் இருந்து கொண்டுசெல்லப்படுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

விரிவாக படிக்க: முகிலன் ஆந்திர காவல் துறையிடம் உள்ள காணொளி வெளியானது

2025ல் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வது சாத்தியமா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாகசென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் க. ஜோதி சிவஞானம் கூறுகையில், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.8%. கடந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.8%தான். ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் எல்லாமே, திருத்தப்பட்ட முறையின் கீழ் காட்டப்பட்ட வளர்ச்சி விகிதம்.

அதாவது, 2014ல் இந்த அரசு பொறுப்பேற்ற உடனே பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறையை மாற்றி அமைத்தார்கள். உடனே வளர்ச்சிவிகிதம் 2 சதவீதம் அதிகரித்தது. கணக்கிடும் முறையை மாற்றிய உடனேயே எதுவுமே நடக்காமல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்தது.

உலகப் பொருளாதார மந்தத்தினால் சேவைத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறைகளை மேம்படுத்த வேண்டுமானால் தனியார் முதலீடு தேவை. ஆனால், அது தொடர்ந்து வீழ்ந்தவண்ணமே இருக்கிறது.

இம்மாதிரியான சூழலில் அரசு முன்வந்து, சலுகைகளை அளித்து முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

விரிவாக படிக்க: 2025ல் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வது சாத்தியமா?

சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்

தண்ணீர் வண்டி என்றவுடன் லாரியும், டிராக்டரும்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும்.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு சக்கரத்துடன் ஐந்து தண்ணீர் குடங்களை, எரிபொருள் செலவின்றி எளிதாக சுமந்து வரும் சிறிய வாகனம்தான் இந்த 'தண்ணீர் வண்டி'

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டர் டேங்கர்கள், காவிரி குடிநீர் குழாய்களில் இருந்து வீட்டிற்கு அருகிலும் சற்று தொலைவிலும் கிடைக்கும் குடிநீரை சேகரிக்கவும், மற்ற பிற பொருட்களை எளிதாக எடுத்து வரவும் பயன்படுவதால், கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சிக்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கிராம மக்களின் வாழ்வில் இந்த தண்ணீர் வண்டி ஒன்றிவிட்டது.

விரிவாக படிக்க: சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :