கடலில் மிதக்கும் '1 ட்ரில்லியன் டன்' எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜனவரி 2018ல் இருந்து ஜூலை 2019 வரை A68 பனிப்பாறை எப்படி பயணித்தது என்பதை விளக்கும் காணொளி.

அண்டார்டிகா பகுதியில் இருந்து A68 என்று அழைக்கப்படும் பனிப்பாறை உடைந்து பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

தற்போது இந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வெட்டெல் கடல் பகுதியில் மிதப்பதாக செயற்க்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

160 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்ததாக தெரிந்தது. இந்நிலையில், தற்போது இது நகர ஆரம்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BAS/P.BUCKTROUT

சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, நல்ல வேகத்தில் பயணிப்பது போலவே தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து

படத்தின் காப்புரிமை PAUL ELLIS

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றது இங்கிலாந்து.

1975லிருந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியே அடையாத அணி எனும் பெருமையோடு வளைய வந்த ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறையிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர் இங்கிலாந்து வீரர்கள்.

விரிவாக படிக்க:ஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து - எப்படிச் சாத்தியமானது?

தோனி ஹாஷ்டாக்குகள் - ரசிகர்களின் பிரியாவிடையா?

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமையன்று மான்செஸ்டரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 10 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த அனுபவம் வாய்ந்த தோனி 49 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று எதிர்பாராத வண்ணம் ரன் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்த விதம் குறித்து தற்போது சமூகவலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இதனிடையே முன்னாள் கேப்டனான 38 வயது தோனிக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிபோட்டியே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற கடைசி போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன #DhoniForever, #LoveYouDhoni, #ThankYouMSD ஆகிய ஹாஷ்டாக்குகளில் தோனியின் தீவிர ரசிகர்கள் அவரின் சிறப்புகள் குறித்து சிலாகித்து வந்தனர்.

விரிவாக படிக்க: டிரெண்டிங்கில் தோனி - பிரியாவிடையா? அதீத துதிபாடலா?

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான்

படத்தின் காப்புரிமை Reuters

வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் கூறியுள்ளார்.

தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.

விரிவாக படிக்க: பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான்

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

படத்தின் காப்புரிமை Thinkstock

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறான சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி விடுவதாக, கலால் திணைக்கள பரிசோதகர் பி. செல்வகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

விரிவாக படிக்க: இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - ஜனாதிபதி நடவடிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :