இரான் சட்டவிரோதமாக கைப்பற்றிய எண்ணெய் கப்பலை விடுவிக்க பிரிட்டன் கோரிக்கை

இரான் படத்தின் காப்புரிமை ERWIN WILLEMSE

இரான் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள பிரிட்டன் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம், பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் சரக்கு போக்குவரத்து தொடர்பாக கடினமான கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

’ஸ்டீனா இம்பேரோ’ என்கிற எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளது தொடர்பான புதிய காணொளியை இரான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பின்னர் ஜெர்மி ஹ்ட் இதனை தெரிவித்துள்ளார்,

இந்த எண்ணெய் கப்பல் சர்வதேச கடல்வழி சட்டதை மீறியது என்று இரான் பதிலளித்துள்ளது.

முன்னதாக, வளைகுடாவில் பறிமுதல் செய்யப்பட்ட பிரிட்டன் கொடி ஏந்திய டேங்கரை இரான் விடுவிக்கவில்லை என்றால் "தீவிரமான விளைவுகளை" சந்திக்க வேண்டியிருக்கும் என பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் தெரிவித்திருந்தார்.

’ஸ்டீனா இம்பேரோ’ என்ற பெயர் கொண்ட அந்த கப்பலின் உரிமையாளர் அதனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை EPA

23 பேர் கொண்ட கப்பல் இரானை நோக்கி வடக்கில் சென்றுக் கொண்டிருந்தது. பிரிட்டனுக்கு சொந்தமான லைபீரியாவின் கொடி தாங்கிய இன்னொரு கப்பல் ஒன்றை ஆயுதப் படை காப்பாற்றிவிட்டது. ஆனால், தற்போது அது பயணிக்க தடையில்லை.

"இரானின் இந்த ஏற்றுக் கொள்ளமுடியாத நடவடிக்கை கவலை அளிக்கிறது. கடல் வழி பயணங்களில் உள்ள சர்வதேச சுதந்திரத்துக்கு இதுவொரு பெரும் சவால், " என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பிரிட்டனை சேர்ந்த கப்பல்கள் கொஞ்சம் காலம் அந்த பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம்," என அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த பிரச்சனை விரைவாக தீர்க்கப்படவில்லை என்றால், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் ராணுவம் குறித்து யோசிக்கவில்லை. இந்த பிரச்சனையை ராஜ்ஜிய முறையில் எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து யோசித்து வருகிறோம். இது சரி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்."

"இரானின் வெளியுறவு விவகார அமைச்சகத்தோடு எங்களின் தூதர் தொடர்பில் இருக்கிறார். மேலும், இதை சரி செய்ய சர்வதேச கூட்டாளிகளுடன் நெருங்கி பணிபுரிந்து வருகிறோம்."

"அந்த கப்பலில் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். ஆனால், அதில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை NORBULK SHIPPING

லண்டனில் பதியப்பட்ட ஸ்டீனா இம்பேரோ என்ற அந்த கப்பல் பிரிட்டனின் கொடியை தாங்கிச் செல்கிறது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் இந்த பிரச்சனை நடைபெற்றுள்ளது.

அந்த கப்பல் இரானிய புரட்சிகர் காவல் படையால் கைப்பற்றப்பட்டது என இரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரானிய புரட்சிகர காவல் படையின் செய்தி நிறுவனம், " பிரிட்டன் கப்பல் ஜிபிஎஸ்ஸை அணைத்தது, ஹார்மோஸ் ஜலசந்திக்குள் நுழையாமல், எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி விட்டு வெளியே சென்றது," என மூன்று விதிகளை அக்கப்பல் மீறியதால் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

முன்னதாக ஜூலை 11ஆம் தேதியன்று, வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.

இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :