அப்போலோ 11: கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஒரே பெண் பொறியாளர்

ஜோஆன் மார்கன் படத்தின் காப்புரிமை NASA
Image caption ஜோஆன் மார்கன்.

நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கில் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரீன் ஆகியோரின் மறக்கமுடியாத, வெற்றிகரமான நிலாப் பயணம் நடந்தேரியதன் 50ஆவது ஆண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் நடந்துவருகிறது.

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி இந்த குழு நிலாவிற்கு தங்களின் பயணத்தை மேற்கொண்டது. இந்த மூவரின் பயணத்திற்காக அமெரிக்காவின் ஹுஸ்டனில் இருந்த நாஸாவின் கட்டுப்பாட்டு அறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அயராது பணியாற்றினர். அந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஒரே பெண்மணி ஜோஆன் மார்கன். இவருக்கு தற்போது 78 வயது.

அப்போலோ 11 விண்ணில் பாய்ந்தபோது, அவருக்கு வயது 28. ’இன்ஸ்டுமெண்டேஷன் கண்ட்ரோலர்’ பணியில் இருந்த மார்கன், 21 தகவல்தொடர்பு வழித்தடங்களுக்கு பொறுப்பாளராக இருந்ததோடு, அப்போலோ-வை விண்வெளிக்கு சுமந்துசென்ற சாட்டன் 5 ராக்கெட்டின் கண்காணிப்பு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் நலனையும் அவரே கவனித்து வந்தார்.

அப்போலோ 11 பயணம் குறித்து பிபிசியின் மிஷல் ஹுசைனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து:

அது மிகவும் உற்சாகமான ஒரு அனுபவம். அப்போலோ 11 விண்ணில் பாய்வதற்காக ஐந்து ஆண்டுகள் அவர்களோடு நானும் பணியாற்றியுள்ளேன். அதனால், அவர்கள் என்னை நன்கு அறிவார்கள். என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

படத்தின் காப்புரிமை NASA
Image caption மூன்றாவது வரிசைய்ல், நடுவில் அமர்ந்துள்ளார் ஜோஆன் மார்கன்

விண்கலம், விண்வெளிக்கு பறக்கும் நாளன்று, நானும் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கலாம் என்று அவர்கள் எடுத்த அந்த முடிவு, என்னை அவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு உணர்வை அளித்தது. வருங்காலத்தில் நாசாவில் என்னுடைய கால் தடத்தை பதிக்க அது ஒரு வழியாக அமைந்தது.

என்னை அன்றைய பணியில் சேர்த்துக்கொள்வதில் சற்று தயக்கம் இருந்தது. ஏனெனில், இதற்கு முன்பு, ஒரு விண்கலம் விண்ணில் பாயும் நாளில், அவர்களுடன் எந்த ஒரு பெண் பொறியாளரும் இணைந்து பணியாற்றியதே இல்லை.

இதற்கு முன்பு, அவர்கள் உங்களை அந்த அறையிலிருந்து வெளியே வைப்பார்கள். காரணம், இந்த திட்டம் தோல்வி அடைந்தால், அது மோசமான ஒரு சூழலை உருவாக்கிவிடும். இதற்காக விசாரணை நடத்தப்படும், கேள்விகள் எழுப்பப்படும், இதை நான் எதிர்கொள்ள வேண்டாம் என்று எண்ணி என்னை பாதுகாக்க அவர்கள் விலக்கியே வைத்தனர்.

கேள்வி: ஆனால், இந்த நிகழ்வுக்கு முன்பு, சக ஊழியர்களிடம் இத்தகைய பாலின பாகுபாட்டை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா?

பதில்: சில நேரங்களில் நடந்துள்ளது.. ஆமாம், நான் என்னுடைய ஹெட்ஃபோனை அணிந்துகொண்டு, வேலையை ஆரம்பிக்க நினைத்த நேரத்தில், ஒரு சோதனை மேற்பார்வையாளர் என்னை பின்னால் அடித்துவிட்டு, `இங்கு பெண்கள் பணியாற்றுவதில்லை!` என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை NASA

இதுகுறித்து என்னுடைய இயக்குநரிடம் நான் கூறியபோது, `அந்த மனிதரை விட்டு விலகி இரு` என்று அவர் என்னிடம் தெரிவித்தார். பிறகு, என்னிடம் தொலைப்பேசியில் பேசிய விஞ்ஞானி ராக்கோ பெட்ரோனி, `நீங்கள் இங்கு பணியாற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம்` என்று தெரிவித்தார்.

ஆனால், அதே ஆண், அப்போலோ 11 வெற்றிகரமாக நிலவை அடைந்தவுடன், அனைவரிடம் வெற்றியை வெளிப்படுத்தும் விதமாக அனைவரிடமும் சுருட்டு கொடுத்தார். அப்போது என்னிடமும் ஒன்று கொடுத்துவிட்டு சென்றார்.

அப்போலோ 11 நிலவில் தரையிறங்கியது, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தது ஆகியவை முதலில் பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால், ஜப்பான், ரஷ்யா, லண்டன் என உலகிலுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்று செய்திகள் தொலைக்காட்சியில் வரத்தொடங்கியபோது, இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புரிந்தது.

கேள்வி: எப்போதாவது, உங்களுக்கு விண்வெளிக்கு செல்லும் விருப்பம் ஏற்பட்டதுண்டா?

அந்த சமயத்தில் இல்லை. இப்போது எனக்கு வயதாகிவிட்டாலும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் விண்வெளியில் மிதக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. இப்போது எனது கால் முட்டியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே விண்வெளியில் கால்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் மிதந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்னால் திரும்பி வர முடியவில்லை என்றாலும்கூட பரவாயில்லை என்றும் யோசித்துள்ளேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்