இரான் நாட்டில் கொல்லப்பட்ட சி.ஐ.ஏ உளவாளிகள் - டொனால்ட் டிரம்ப் என்ன சொல்கிறார்?

இரான் நாட்டில் கொல்லப்பட்ட சி.ஐ.ஏ உளவாளிகள் - என்ன சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்? படத்தின் காப்புரிமை EPA

சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் கூறுகிறது இரான்.

சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, ராணுவம் மற்றும் பிற துறைகள் சார்ந்த விஷயத்தில் உளவு பார்த்து தகவல்களை திரட்டியதாக கூறுகிறது இரான் உளவு அமைச்சகம்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவை அனைத்தும் பொய் என்று கூறினார் அவர்.

அணு ஒப்பந்தம் தொடர்பாக இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடிக்கிறது.

இரான் - அமெரிக்கா உறவு

2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் இரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.

2018ஆம் ஆண்டு இரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுப்பதற்கு என்று கூறி, 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

இந்த நடவடிக்கை பல நாடுகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் கூட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.

படத்தின் காப்புரிமை AFP

மே மாதம் டிரம்ப், இரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார். குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்துக் கொள்வதாக இரான் தெரிவித்தது.

அதனை அடுத்து சில தடைகளை விதித்தது அமெரிக்கா.

அதன் பின் அமெரிக்க ட்ரோனை இரான் சுட்டுவீழ்த்தியது. அதனை அடுத்து, ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்தார்.

ஆனால், தங்களது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியுள்ளது.

ஒபாமாவை வெறுப்பேற்ற

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் எழுதிய குறிப்பு அண்மையில் கசிந்தது. அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகதான் இரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார் என அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தக் குறிப்பானது 2018ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. அதாவது, அப்போதைய பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் போரீஸ் ஜான்சன் இரான் அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாமென வேண்டி இருந்தார்.

அந்த சமயத்தில் சர் கிம் டாரக் இந்தக் குறிப்பை எழுதி இருக்கிறார்.

உளவு

மார்ச் முடிய கடந்த ஓராண்டில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அமைப்புக்காக வேலை செய்த உளவாளிகள் 17 பேரை கைது செய்ததாகக் கூறுகிறது இரான்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த 17 பேரும் முக்கியத் துறைகள் குறித்து தகவல் திரட்டியதாக இரான் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

ஆனால், கைது செய்யப்பட்ட இந்த 17 பேரில் எத்தனை பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எப்போது வழங்கப்பட்டது என கூறவில்லை.

அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி தெரிவித்தார். அது இரான் தொலைக்காட்சியில் வெளியாகும்.

இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டார்.

சில உளாவாளிகள் அமெரிக்காவின் விசா வலையில் சிக்கி இந்தப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அதாவது அமெரிக்கா செல்ல விரும்பும் இரான் மக்களுக்கு விசா அளிப்பதாக கூறி அவர்களை உளவுக்காக அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது என்றார் மஹமூத்.

இந்த அறிவிப்புக்குப் பின் பேசிய டொனால்ட் டிரம்ப், "இரானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இது போன்ற விஷயங்கள் தடையாக இருக்கிறது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :