’தென் கொரிய போர் வெறியர்களை எச்சரிக்க ஏவுகணை சோதனை’ - வட கொரியா

வட கொரியா படத்தின் காப்புரிமை EPA

தாங்கள் நடத்திய இரு புது ஏவுகணை சோதனைகள், `தென் கொரிய போர் வெறியர்கள்` என்று தங்களால் விவரிக்கப்படுபவர்களுக்கு `ஒரு தீவிரமான மற்றும் மரியாதைக்குரிய எச்சரிக்கை` என வட கொரியா தெரிவித்துள்ளது.

கிழக்கு கடல் என அழைக்கப்படும் வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் அந்த சிறிது தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன.

`நேரடியான மற்றும் வலுவான அச்சுறுத்தல்களை` ஒழிக்க வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

புதிய திட்டமிட்டு வழிகாட்டும் ஆயுத அமைப்புகளும் சோதனை செய்யப்பட்டதாக கிம் தெரிவித்துள்ளார்.

அந்த ஏவுகணை சுமார் 428 மைல்கள் பயணித்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இது குறைந்த தூரம் தாக்கக்கூடிய ஏவுகணைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளது. ஜப்பான் தங்களின் கடல் பரப்பில் அந்த ஏவுகணை அடையவில்லை என்று தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறார் கிம் ஜாங்-உன்?

புதிய ஆயுத அமைப்பு குறித்து தான் "திருப்தியடைவதாகவும்", அதனை எளிதில் எதிர்கொள்வது கடினம் என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் தவறை தென் கொரியா மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பிராந்தியத்தில் இருக்கும் பதற்றத்தை குறைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வட கொரியா நிறுத்த வேண்டும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் டிரம்ப் மற்றும் கிம் இரு கொரிய நாடுகளுக்கும் இடையே உள்ள ராணுவமற்ற பகுதியில் சந்தித்தனர். அதன்பிறகு நடைபெற்றுள்ள முதல் சோதனை இது.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டாக ராணுவ நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்ததால் வட கொரியா கோபத்தில் இருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை EUROPEAN PHOTOPRESS AGENCY

அணுஆயுதங்கள் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதை அந்த ராணுவ நிகழ்ச்சி பாதிக்கும் எனவும் வட கொரியா எச்சரித்திருந்தது.

அந்த ராணுவ நிகழ்ச்சிகளை ரத்து செய்ய இருநாடுகளும் மறுத்துவிட்டாலும், அந்த நிகழ்ச்சியின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவில் ஆணு ஆயுதங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே தெரிகிறது. கடந்த மாதம் வட கொரியாவின் முக்கிய அணு ஆயுத சோதனை தளத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், வட கொரியா கதிரியக்க பொருட்களை வெடிப்பொருள் எரிபொருளாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிகிறது.

வட கொரியாவின் மீது கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதும், அந்நாடு புதிய அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான திறமைகள் தங்களுக்கு இருப்பதாக காட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் புதிய வகை நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கிம் பார்வையிட்டதாக அந்நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ளது.

அது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாங்கி செல்லக்கூடியதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே மே மாதம் வட கொரியா சிறிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை சோதித்திருந்தது.

வட கொரியாவுக்கும் பிற நாடுகளுக்கும் உள்ள நல்லுறவை பாதிக்கும் எந்தவித நடவடிக்கையிலும் கிம் ஈடுபட மாட்டார் என டிரம்ப் அப்போது தெரிவித்திருந்தார்.

"நான் அவருடன் இருக்கிறேன் என கிம்முக்கு தெரியும் மேலும் அவர் எனக்கு அளித்த உறுதியை உடைக்க மாட்டார் என நான் நம்புகிறேன்" என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :