கறுப்பின வழக்கறிஞரை இன ரீதியாக தாக்கி பேசிய டிரம்ப்புக்கு வலுக்கும் கண்டனம் மற்றும் பிற செய்திகள்

டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்ரிக்க அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று ஒருவர் இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் மோசமாக பதிவிட்டுள்ளார்.

கறுப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் மிகுந்த அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை `கொடுமைப்படுத்துபவர்` என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்புப்படி 50சதவீதத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் வாழும் மாவட்டம் குறித்து டிரம்ப் பேசியது இன ரீதியிலான தாக்குதல் என சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

தடுப்பு மையங்களில் குடியேறிகளை நடத்துவது உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை மேற்பார்வையிடும் கமிட்டியின் தலைவராகவும் க்யூமிங்க்ஸ் உள்ளார்.

கடந்த வாரம் தற்காலிக உள்துறை பாதுகாப்பு செயலாராக இருக்கும் கெவின் மெக் அலீனன் குறித்தும், தடுப்பு மையங்களில் குடியேறிகளின் நிலை குறித்தும் நாடாளுமன்றத்தில் கடுமையாக க்யூமிங்க்ஸ் பேசினார்.

மெக் அலீனன் மற்றும் க்யூமிங்கிஸுக்கு இடையே ஏற்பட்ட விவாதத்தில் எல்லை பகுதிகளில் வசதிகள் மேம்பட வேண்டும் என்று தெரிவித்தார் க்யூமிங்க்ஸ்.

"அதன்பிறகு எல்லை பகுதி சுத்தமாக, மற்றும் திறன்பட நடத்தப்பட்டு வருகிறது. அங்கு வெறும் கூட்டம் மட்டுமே அதிகமாக உள்ளது." என தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

"இதற்கு முந்தைய ட்வீட்டில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் க்யூமிங்ஸ் கத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரின் பால்டிமோர் மாவட்டம் தான் மிகவும் மோசமானது ஆபத்தானது. மேலும் அவரின் மாவட்டம்தான் அமெரிக்காவில் மிகவும் மோசமான மாவட்டம்." என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து கழிவுப்பொருள்களை இலங்கையில் இறக்குமதி செய்தது யார்?

படத்தின் காப்புரிமை SRI LANKA CUSTOMS

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றது.

பிரிட்டனில் இருந்து சிலோன் மெட்டல் ப்ராசஸிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தினால் 2017ஆம் ஆண்டு முதல் கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன.

பயன்படுத்தப்பட்ட மெத்தைகள், கால் துடைப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவிக்கின்றது.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட கொள்கலன்களில் 130 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் ஆராயப்பட்டு, கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

விரிவாக படிக்க: பிரிட்டனில் இருந்து கழிவுப்பொருள்களை இலங்கையில் இறக்குமதி செய்தது யார்?

அப்துல் கலாம் நினைவு நாளில் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அமைச்சர்கள்

இராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை கலாமின் குடும்பத்தினர், பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

காலையில் கலாமின் அண்ணன் முத்து மீரா மரக்காயர் மற்றும் அவரது உறவினர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தியபின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர் வளையம் வைத்து மரியதை செலுத்தினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

விரிவாக படிக்க: அப்துல் கலாம் நினைவு நாளில் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அமைச்சர்கள்

'வேண்டாம்' என பெயர் வைக்கப்பட்ட மாணவி: 22 லட்ச சம்பளத்தில் ஜப்பானில் வேலை வாங்கி அசத்தல்

பெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார்.

'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கை திருத்தணி பகுதியில் நாராயணபுரம் கிராமத்தில் பின்பற்றப்படுகிறது.

தனக்கு வைக்கப்பட்ட பெயரின் காரணமாக பலரின் வினோதமான பார்வைகளையும், வியப்பான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார் மாணவி 'வேண்டாம்'.

''எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை என் பெயரை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. என் வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்ததது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது மற்றும் பொறியியல் கல்விக்காக கலந்தாய்வுக்குச் சென்றபோது பலரிடம் என் பெயருக்கான விளக்கத்தை சொல்லவேண்டியிருந்தது. முதலில் தயங்கினாலும், தற்போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறேன்,'' என்கிறார் 'வேண்டாம்'.

விரிவாக படிக்க:’வேண்டாம்’ என பெயர், 22 லட்ச சம்பளத்தில் ஜப்பானில் வேலை: அசத்தல் மாணவி

மகாலெட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது

படத்தின் காப்புரிமை NDRF

மும்பையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ராய்காட் மற்றும் தானே மாவட்டங்களில் பெய்த கன மழையால், பயணிகளோடு சென்ற மகாலெட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில், உல்ஹாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கில் இரவு முழுவதும் சிக்கிக்கொண்டது.

இந்த ரயிலில் இருந்து மொத்தம் 1,050 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் உதேசி தெரிவித்திருக்கிறார்.

கொர்ஜத் பகுதியில் 303 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை நிலையமான ஸ்கைய்மேட் தெரிவிக்கிறது, இதனால் உல்ஹாஸ் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட இந்த விரைவு ரயில், பட்லாபூருக்கும், வாங்காணிக்கும் இடையில் நள்ளிரவு 2.30 மணிக்கு வெள்ளத்தில் மாட்டிக்கொண்டது.

ரெயில்வே மீட்புக்குழுவினர் அதிகாலையில்தான் இந்த ரெயிலை சென்றடைய முடிந்தது.

தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம் மற்றும் கடற்படை அணிகள் சம்பவ இடத்தை சென்றடைந்து மீட்பு பணிகளை தொடங்கியுள்ளன. இவர்கள் 9 கர்ப்பிணி பெண்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடற்படை ஹெலிகேப்டரும், முக்குளிக்கும் அணியினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மீட்புதவி பணிகளில் உள்ளூர் அதிகாரிகள் உதவி வருகின்றனர்.

மகாராஸ்டிராவின் வட கொன்கான் பகுதியின் மிக பெரிய வடிகால் அமைப்புகளில் ஒன்றாக இந்த ஆறு விளங்குகிறது.

லோனாவாலா-வுக்கு அருகிலுள்ள சாக்யாத்திரி மலைத்தொடரில் தோன்றுகிற இந்த ஆறு கொர்ஜத், பட்லாபூர், அம்பர்நாத், உல்ஹாஸ்நகர் மற்றும் கல்யாண் வழியாக பாய்ந்து மும்பை மற்றும் தானே நகரங்கள் அமைந்துள்ள சால்செற்றி தீவின் வட எல்லையான வாசாய் க்ரீக்-யை சென்றடைகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :